பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அகத்திய நட்சத்திரம்

8

அகத்தியர்

மிருக்கும், சாதாரணமாக வெண்மை நிறமுள்ளது. சிவப்புப் பூவும் உண்டு. புல்லி இணைந்தது, மணி

அகத்தி
1. ஓர் இலையும் பூங்கொத்தும்
2. பூ
3. புல்லீ
4. அவரைப்பூ வடிவ அல்லிகளை
5. இருமுடிக் கேசங்களும் சூலகமும்
6. கோசம்
7. சூலகம்
8. காயும் விதைகளும்

வடிவமுள்ளது , அல்லி வட்டம் அவரைப் பூ வடிவமுள்ளது. மகரந்த கேசரம் பத்து, ஒன்று தனித்தும் ஒன்பது ஒன்றாகச் சேர்ந்தும் இருக்கும். காய் மெல்லியதாக ஓர் அடிநீளமிருக்கும் ; விதைகளுக்கு இடையில் பள்ளமாக யிருக்கும். குறுக்கு வெட்டில் சதுரமாகக் காணும். அகத்திக் கீரையும் பூவும் காயும் கறிசமைப்பார்கள். இந்தச் செடி மருந்துக்கு உதவும். வெற்றிலைத் தோட்டங்களில் கொடி படர்வதற்கும் நிழலுக்கும் நிரம்பப் பயிர் செய்வார்கள். குடும்பம் : பாப்பிலி யோனேசீ (Papilio-nceae). இனம் : செஸ்ப்போனியா கீராண்டிப்ளோரா (Sesbania Grandiflora).

அகத்திய நட்சத்திரம் (Canopus, alpha Carinar) கண்ணுக்குத் தோன்றும் நட்சத்திரங்களிலெல்லாம் ஒளியில் இரண்டாவதாக விளங்குகிறது. இதைவிடப் பிரகாசமானது சிரியன் ஒன்றே. இது மஞ்சள் நிறமான வெளிச்ச முள்ள மிகப் பெரிய நட்சத்திரம். இது தெற்கு வானத்தில் கரைனா என்னும் நட்சத்திரத் தொகுதியில் தெரிவது. வானகோளத்தின் மத்திய ரேகையிலிருந்து தெற்கே 53 பாகை விலக்கத்தில் உள்ளது. ஆதலால் பூமத்தியரேகைக்கு 37 பாகைக்கு வடக்கே இருப்பவர்களுக்கு இது தெரியாது. சூரியனுக்கு இது 130 ஒளி யாண்டுத் தொலைவில் இருக்கலாம் என்று கருதுகின்றனர்.

அகத்தியம் அகத்தியர் செய்த இலக்கண நூல். அது மூன்று சங்கங்களின் காலத்துக்கும் இலக்கண நூலாக இருந்தது. அது மிகவும் விரிவான நூலென்றும் அதில் எழுத்து, செல், பொருள், யாப்பு, சந்தம், வழக்கியல், அரசியல், அமைச்சியல், பார்பன வியல், சோதிடம், கந்தருவம், கூத்து, என்பனவும் பிறவும் கூறப்பட்டிருந்தன என்றும் காண்கிறது. இந்த நூல் இப்பொழுது இல்லை. தொல்காப்பியம்இளம்பூரணர் உரை, இலக்கண விளக்கவுரை, நன்னூல் விருத்தியுரை, வேகிரி முதலியார் எழுதிய இலக்கணக் களஞ்சியம் இவற்றில் சிற்சில சூத்திரங்கள் அகத்தியத்திலிருந்து எடுத்தவை எனக் காட்டப்பட்டிருக்கின்றன. பார்க்க: - அகத்தியர்.

அகத்திய மலை : இதை அகத்திய கூடம் என்றும் கூறுவர். திருவிதாங்கூரில் நெய்யாற்றங்கரைத் தாலுக்காவிலுள்ளது. 6200 அடி உயரம். திருவிதாங்கூருக்கும் திருநெல்வேலிக்கும் இடையில் உள்ள எல்லைக்கோடு இதன் வழியே செல்கிறது. சென்ற நூற்றாண்டில் இங்கு வானவியல் நிலையம் இருந்தது. இதில் தாமிரபரணியும் நெய்யாறும் உற்பத்தியாகின்றன. அகத்திய முனிவர் இங்கு தங்கியிருந்ததாகக்கூறுவர்.

அகத்தியர் : செந்தமிழ் மொழிக்குச் சிறந்த்தோர் இலக்கணத்தைப் பல்லாயிர ஆண்டுகளுக்கு முன்பே அளித்த பெருமையை அகத்தியருக்கு அளித்துவருகிறோம். அதனால்தான் தமிழை அகத்தியன் பயந்த செஞ்சொல் ஆரணங்கு என்றனர். அகத்தியர்

அகத்தியர்
தஞ்சாவூர் ஜில்லா நல்லூர்க் கோயிலில் உள்ளது
உதவி : தொல் பொருள் இலாகா

என்ற உடன் ஒரு குறுகிய வடிவம்தான் எல்லோருடைய மனதிலேயும் தோன்றுகிறது. மூர்த்தி சிறியதாயினும் கீர்த்தி பெரியது. காலத்தையும் இடத்தையும் கடந்தவர் இவர். சாதாரண மனித நிலையிலிருந்து கடவுள் நிலைவரைக்கும் தமிழ் மக்கள் இவரைக் கொண்டு சென்றிருக்கின்றனர். இவருக்குக் கோவில் சமைத்தும் வழிபடுகின்றனர்.

இன்று அகத்தியர் பலரைப் பற்றி கேள்விப்படுகிறோம். அகத்தியம் என்ற நூலை இயற்றிய அகத்தியர் முதற் சங்க காலத்தில் வாழ்ந்தவர் என்பர். இன்று அந்நூலில் உள்ளவாகக் காட்டப்படும் சூத்திரங்கள் அத்தனைப் பழையன என்று பலரும் ஒப்புவதில்லை. இவரே தேவாரவாரங்களை எல்லாம் திரட்டியிருக்க முடியுமா அன்றி சேக்கிழார் இயற்றிய பெரிய புராணத்தை ஒட்டி வடமொழியில் அகத்தியர் பக்த விலாசம் என்ற நூலைச் செய்திருக்க முடியுமா —என்ற வினாக்கள் எழுகின்றன. மேலும் இவர் கடல் கடந்து கடாரம் அடைந்து, இந்தோனீசியா சென்று, போர்னியோ, குசத்திவீபா முதலிய தீவுகளில் தங்கி, இறுதியாகச் சாயாம் அடைந்து, அங்கிருந்து கம்போடியா சென்று, யசோமதியரை மணந்து வாழ்ந்ததாகவும் ஒரு செய்தி சொல்லப்படுகிறது. இதனால் ஒரு சிலர் அகத்தியரைப்பற்றி வருவன வெல்லாம் புனை கதை என்று கொள்கின்றனர். ஆரியர் தமிழ் நாடு போந்ததையே அகத்தியர் தமிழ் நாடு போந்தார் என்று கூறுகின்றனர் என்றும் கூறுவர். இன்னுஞ்சிலர், அகத்தியர்கள் பலர் பல காலத்தில் பல இடங்களில் வாழ்ந்தவர் என்பர். அவர் தம்முள் சிலர் தமிழர் சிலர் ஆரியர் எனவும் கூறுவர்.

தமிழ் நூல்களில் தமிழ் அகத்தியரைப் பறிறிய, சில குறிப்புகளை சிலப்பதிகாரம், மணிமேகலை, பரிபாடல் போன்ற நூல்களில் வருகின்றன. மேலும் அகத்தியரைப் பற்றி வேள்விக்குடி சின்னமனூர் செப்பேட்டில் பாண்டிய புரோகிதர் அகத்தியர் என்று ஒரு குறிப்பு வருகிறது.

இறையனார் அகப்பொருள் உரையிலிருந்து தலைச்சங்கத்தில் அகத்தியனார் என்னும் புலவர் ஒருவர் இருந்தார் என்றும், அவர் செய்த நூலாகிய அகத்தியம் என்பதே அக்காலத்திய இலக்கணமாக இருந்தது என்றும்,