பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/466

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆரராட்

418

ஆராக்கேரியா

தோன்றுவதால் கால வகையாலும் வேறுபட்டவை. (5) நூலுக்குக் காரணம் பருத்தியாகவும், ஆடைக்குக் காரணம் நூலாகவும் இருப்பதால் காரண வேறுபாட்டு வகையாலும் வேறுபட்டவை. (6) நூல் இருக்கும் பொழுது ஆடை அழிவதால், காண்பதாலும் வேறுபட்டவை. (7) சில சமயவாதிகள் கருதுகிறபடி ஆடை நூலிலேயே ஆக்கும் உருவத்தில் இருக்குமேயாயின் அதாவது காரியம் காரணத்திலேயே இருக்குமாயின் ஆடை செய்வதற்குத் தறி முதலிய காரணங்கள் வேண்டியதில்லை.

ஆகவே காரியம் என்பது காரணத்தினால் புதிதாக அதாவது முற்றிலும் வேறுபட்டதாக உண்டாக்கப்படுவது என்பது பெறப்படும்.

சுடப்படாத குடமும், சுடப்பட்ட குடமும் களிமண்ணாலேயே செய்யப்பட்டிருந்தும் அவை நிறத்தில் வேறுபடக் காரணம் யாது என்பதுபற்றி வைசேடிகரும் நையாயிகரும் கூறும் கருத்துக்கள் வருமாறு:

(1) வைரேடிகர் : குடத்தைச் சுடும் பொழுது அது நெருப்பின் சேர்க்கையால் பரமாணுக்களாக பிரிந்து, பின்னர் அவை இரட்டையணுக்களாகவும் (த்வயணுகம்). மும்மையணுக்களாகவும் (த்ரயணும்) ஆகிக் கடைசியில் புதிய நிறமுள்ள குடமாக ஆகிவிடுகின்றது என்றும், முன்னிருந்த குடம் அழிந்து புதுக்குடம் ஆவது அதிவேகத்தில் நடைபெறுவதால் நமக்குப் புலனாவதில்லை என்றும் கூறுகிறார்கள். இது பீலுபாகவாதம் எனப்படும். பீலு என்பது பரமாணு; அதனால் பீலுபாகம் என்பது பரமாணுக்களால் ஏற்படும் அக்கினி சம்பந்தம் என்று பொருள்படும்.

(2) நையாயிகர் : ஆலையிலிடப்பட்ட குடந்தான் இது என்ற உணர்வு ஏற்படுவதால் குடம் அழிவதில்லை என்றும், அக்கினி குடத்தில் சூக்கும துவாரங்கள் வழியாக உட்புகுந்து நிறத்தை மாற்றுகிறது என்றும் கூறுகின்றனர். இது பிடரபாகவாதம் எனப்படும். பிடரம் என்பது குடம்; அதனால் பிடரபாகம் என்பது குடமாக இருக்குங்கால் உண்டாகும் அக்கினி சம்பந்தம் என்று பொருள்படும். கே. ஸ்ரீ.

ஆரராட் (Ararat) ஈரானுக்கும் துருக்கிக்குமிடையிலுள்ள ஓர் எரிமலை. இங்குத்தான் பிரளயத்துக்குப்பின் நோவாவின் தோணி தங்கியதாகக் கிறிஸ்தவ வேதம் கூறும். மலையின் உயர்ந்த சிகரம் கடல் மட்டத்திற்குமேல் 17 ஆயிரம் அடியாம். கடைசியாக 1840 ஆம் ஆண்டில் இவ்வெரிமலை நெருப்பைக் கக்கியபோது உயிருக்கும் பொருளுக்கும் மிகுந்த சேதம் விளைந்தது.

ஆரல் (ஆரால்) நன்னீரிலும் சற்று உவர்ப்பான நீரிலும் வாழும் சிறுமீன். இது நீரின் அடியில் மணலில் அல்லது சேற்றில் புதைந்து கிடக்கும். முகத்தை மட்டும் அல்லது தலை முழுவதையும் மணலுக்கு மேலே மூச்சுவிடுவதற்காக வைத்துக் கொள்ளும். ஏதாவது சிறிது கலக்கம் ஏற்பட்டாலும் அந்தப் பாகத்தையும் உள்ளிழுத்துக் கொண்டு மறைந்து விடும். இதன் தலை கூம்பு வடிவானது. முகம் கூரியது. மீன்களின் வயிற்று நடுக்கோட்டிலுள்ள துடுப்பு இதில் இல்லை. தோள் துடுப்புக்களும் நன்றாக வளர்வதில்லை. இந்தப் பண்புகளெல்லாம் இந்த மீன் மணலில் புதைந்து வாழ்வதற்கு ஏற்ற அமைப்புக்கள். முதுகின் நடுக்கோட்டிலுள்ள முள்போன்ற துடுப்புக்கதிர்கள் தற்காப்புக்குதவும் இதன் நீண்ட படைக்கலங்கள். மூன்று பிரிவான முகத்தின் முனைகள் தொட்டுணர் கருவியாகப் பயன்படும். இது இரவில் மணலைவிட்டு நீருள் வந்து இரை தேடும். ஆரல் நீரைவிட்டு வெளியே காற்றில் நெடுநேரம் உயிருடன் இருக்கவல்லது. நீரில்லாத காலங்களில் ஆறு அல்லது குளங்களின் சேற்றினுள்ளே புகுந்து ஒடுங்கிக் கிடக்கும். இது அவ்வப்போது நீரின் மேல் மட்டத்துக்கு வந்து காற்றையும் சுவாசிகின்றது; நீருக்குள்ளேயே இதை வைத்திருந்தால் செத்துப்போகிறது.

இது உண்பதற்கு நல்ல மீன். இதன் விஞ்ஞானப் பெயர் ரிங்கோப்டெல்லா அக்கூலியேட்டா.

கல்லாரல், சேற்றாரல், பேராரல் என்று பல பெயர்களுள்ளது அரலைப் போன்ற வேறொரு மீன். அது பெரிய குளங்களில் சாதாரணமாக மிகுதியாக இருக்கும். நீரில் கல், பாறை முதலியன கிடக்குமானால் அவற்றருகே அது வசிக்கும். ஆரலை விட மிகப்பெரிதாக இரண்டடி நீளம் வரையில் வளரும். உணவுக்கு நல்ல மீன், மாஸ்டசெம்பிலஸ் ஆர்மேட்டஸ் விஞ்ஞானப்பெயர்.

புல்லாரல் (மாஸ்டசெம்பிலஸ் பான்கலாஸ்) மீன் ஆறு, ஏழு அங்குலம் வளரும். குளங்களிலும் ஆறுகளிலும் மிகுதியாக உண்டு. கடல்நீர் புகும் ஆற்று வாய்களில் இது இருப்பதில்லை. நீரின் ஓரத்தில்

புல்லாரல்

புல், பாசி முதலியவற்றில் சேர்ந்து கொண்டிருக்கும். புல்லையும் சேற்றையும் வழித்துக்கரையில் போட்டு இந்த மீனைப் பொறுக்குவார்கள். இதன் உடம்பின் குறுக்கே பட்டைகள் விழுந்திருக்கும்; இளமீன்களில் இவை நன்றாகத் தெரியும்.

ஆரல் கடல் (Aral Sea) காஸ்பியன் கடலுக்குக் கிழக்கே 150 மைல் தூரத்தில் சோவியத் - துருக்கிஸ்தானத்திலுள்ள ஓர் உப்புநீர்ஏரி. உலகத்திலுள்ள

ஆரல் கடல்

பெரிய ஏரிகளுள் ஒன்று. பரப்பு: 26,000 சதுரமைல்; 225 அடி ஆழம். இதில் பல தீவுகள் உண்டு. ஆமுதாரியா ஆறும் சர்தாரியா ஆறும் இதில் வந்து விழுகின்றன. இதில் நல்ல மீன் நிறைய உண்டு.

ஆரவல்லி மலை இராசபுதனத்தின் வழியே வட கிழக்காக முந்நூறு மைல் நீளம் கிடக்கும் மலைத் தொடராகும். தென்மேற்குக் கோடியிலுள்ள ஆபு மிக உயரமான சிகரம் (5650 அடி). ரோஜா நிறமான படிகக்கல் அதிகமாயிருப்பதால் சிகரங்கள் கண்ணைப் பறிக்கின்றன. இம்மலைப் பிரதேசத்தில் மக்கள் தொகை குறைவு. மரங்களும் அதிகமில்லை. மலைத்தொடரின் இடைப்பட்ட நிலங்கள் பெரும்பாலும் பாலைவனங்கள். நீர்மிகுந்த இடங்களில் ஊர்கள் உண்டு. அவற்றுள் ஒன்று அஜ்மீர் நகரம்.

ஆராக்கேரியா ஒரு சாதி பைன் மரம். பூமியின் தென்பாதிக்கு உரியது. தென் அமெரிக்கா, நியூஜீலாந்து,