பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/531

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆஸ்திகம்

483

ஆஸ்திரியா

முறைகளின் தந்தை என இவர் அழைக்கப்படுகிறார். ரசாயன வினை வேகங்களையும் இவர் ஆராய்ந்தார். இவரது முறை தற்போது உலகெங்கும் வழங்குகிறது. 1909-ல் இவர் நோபெல் பரிசு பெற்றார்.


ஆஸ்திகம்: அஸ்தி என்னும் சமஸ்கிருத பதத்தின் பொருள் 'உள்ளது' என்பதாகும். ஆஸ்திகம் என்பது உள்ளது என்னும் கொள்கை என்று பொருள்படும்.

அஸ்தி என்பதன் பொருள் உள்ளது என்று பொதுவாக இருப்பதால் முதலில் பரலோகம் உளது என்றும், பின்னர் நாளடைவில் ஈசுவரன் உளன் என்றும், வேதப்பிரமாணம் உளது என்றும் பொருள் செய்திருக்கிறார்கள். பரலோகம், ஈசுவரன், வேதப் பிரமாணம் மூன்றும் உள்ளனவாக ஏற்றுக்கொள்பவர் ஆஸ்திகர்; ஏற்றுக் கொள்ளாதவர் நாஸ்திகர்.

இந்தியாவில் தோன்றிய மதங்கள் பன்னிரண்டு. அவையாவன: சாருவாகம், சௌத்திராந்திகம், வைபாஷிகம், யோகாசாரம் அல்லது விஞ்ஞானவாதம், மாத்தியமிகம் அல்லது சூனியவாதம், ஜைனம், வைசேஷிகம், நையாயிகம், சாங்கியம், யோகம், மீமாம்சம், வேதாந்தம்.

1. ஆஸ்திகம் என்பதற்குப் பரலோகம் உண்டு என்று நம்புவது என்று பொருள் கொண்டால், சாருவாகம் ஒன்றே நாஸ்திக மதம். 2. ஆஸ்திகம் என்பதற்கு ஈசுவரன் உளன் என்று நம்புவது என்று பொருள் கொண்டால் சாருவாகம், சாங்கியம், மீமாம்சம் மூன்றும் நாஸ்திக மதங்கள். சாருவாகம் ஈசுவர உண்மையை மறுப்பதாலும், சாங்கியமும் மீமாம்சமும் ஈசுவர சம்பந்தமில்லாமலே எல்லா விஷயங்களையும் முடிவு செய்வதாலும் அவற்றை நாஸ்திக மதங்கள் என்று கூற வேண்டியதாயிருக்கிறது. ஆயினும் சிலர் சாங்கியமும் மீமாம்சமும் ஈசுவர உண்மையை நேராக மறுக்காதிருப்பதாலும், ஈசுவர உண்மைக்குரிய குறிப்புக்கள் அவற்றில் காணப்படுவதாலும் அவைகளை நாஸ்திகம் என்று கூறாமல் ஆஸ்திகம் என்று கூறலாம் என்று சொல்லுவர். 3. ஆஸ்திகம் என்பதற்கு வேதத்தை நம்புவது என்று பொருள் கொண்டால் முதல் ஆறு மதங்களும் நாஸ்திகம், பின் ஆறு மதங்களும் ஆஸ்திகம். இதை வைத்தே முன் ஆறு மதங்களையும் நாஸ்திகஷட்தர்சனி என்றும், பின் ஆறு மதங்களையும் ஆஸ்திகஷட்தர்சனி என்றும் வழங்குகிறார்கள்.

ஆதியில் மக்ககள் தமக்கு உதவியாயுள்ள ஆறு, மலை, காடு முதலியவைகளைத் தேவதைகளாகக் கருதி வழிபட்டார்கள். அந்தத் தேவதைகளுக்கு வேள்விகள் வழியாகத் தங்கள் நன்றியைத் செலுத்தினர். இதுவே கரும மார்க்கம் என்பது. நாளடைவில் தேவதைகளுக்கெல்லாம் மேலாக ஒரு பரதேவதை இருக்கவேண்டுமென்ற எண்ணம் உண்டாயிற்று. அதைக் கூறவே ஆரணியகங்கள் எழுந்தன. அப்பொழுதே உபாசனா மார்க்கமும் உண்டாகி வளர்ந்து வந்தது. அதன்பின் மீண்டும் மீண்டும் செய்த விசாரணைகளின் பலனாக எல்லாம் பரம்பொருளே, பரம்பொருளைத் தவிர வேறு எதுவும் கிடையாது என்னும் சித்தாந்தம் உண்டாயிற்று. அதை உபநிஷதங்கள் வாயிலாக வெளியிட்டார்கள். அப்பரம்பொருளை அறிவது ஞானமார்க்கம். கருமம், உபாசனை,ஞானம் என்ற இம்மூன்று மார்க்கங்களை ஒட்டியே ஸ்மிருதி, இதிகாசங்கள், புராணங்கள் ஆகியவை தோன்றியிருக்கின்றன.

இந்த மத வளர்ச்சி முறையைக் கவனித்தால், ஆஸ்திகத்துக்குப் பரலோக உண்மை என்ற பொருள் வேதகாலத்திலும், ஈசுவர உண்மை என்ற பொருள் ஆரணியகக் காலத்திலும், வேதப் பிரமாண உண்மை என்ற பொருள் வேதங்கள் பிரமாணங்கள் அல்ல என்று போதிக்கத் தொடங்கிய பெளத்தர், ஜைனர் காலத்திலும் உண்டாயிருக்க வேண்டும் என்று ஆராய்ச்சியாளர் கருதுகிறார்கள்.

கருமம், உபாசனை, ஞானம் என்ற மூன்றையும் ஒன்றன்பின் ஒன்றாகப் பயில வேண்டும் என்ற கருத்தினாலேயே அவை இந்த வரிசையில் வேதத்தில் கூறப்பட்டுள்ளன. மக்கள் தங்கள் சக்திக்கு ஏற்றவாறு ஒவ்வொன்றையும் பயின்று வருவதே பாரத தேசத்தினுடைய ஆஸ்திகத்தின் தனிச் சிறப்பாகும். இதை உட்கொண்டே பகவத் கீதையானது சரியை, கிரியை, சன்னியாசம், பக்தி, ஞானம் என்று சகல தருமங்களையும் உபதேசிக்கின்றது. டி. வீ. ரா.


ஆஸ்திரலேசியா: தென்கிழக்கு ஆசியாவிலிருந்து தென் கிழக்காகச் சென்றால் பசிபிக் சமுத்திரத்தில் காணப்படும் தீவுகளை இச்சொல் முன்பு குறித்தது. இப்போது இதில் ஆஸ்திரேலியா, நியூஜீலாந்து, மலேயாத் தீவுத்தொகுதி, பிலிப்பீன் தீவுகள், மெல்னீசியா, மைக்ரொனீசியா, பாலினீசியா என்பனவும் அடங்கும். ஹவாய் தீவுகளையும் அன்டார்க்டிக்காவையுங்கூட இதில் சேர்க்கிறார்கள்.


ஆஸ்திரிக் மொழி மேற்கு இமயமலை முதல் பசிபிக் சமுத்திரத்திலுள்ள ஈஸ்ட்டர் தீவுவரை பரவியுள்ள மொழிக்குடும்பமாகும். இது ஆஸ்திரேசியாட்டிக் மொழி என்றும், ஆஸ்திரோனீசியன் மொழி என்றும் இரண்டு பிரிவுகளை உடையது.


ஆஸ்திரேசியாட்டிக் மொழிகள் ஒரு காலத்தில் இந்தோசீனாவிலும் இந்தியாவின் வடகிழக்குப் பகுதியிலும் பரவியிருந்திருக்கும் என்று நம்பப்படுகின்றது. இந்தப் பிரிவில் முப்பதுக்கு மேற்பட்ட மொழிகள் காணப்படுகின்றன. அவற்றை அறிஞர்கள், மலாக்காவகை, தென்கிழக்குவகை, தென்கிழக்குக் கலப்புவகை, மத்திய வகை, வடமேற்குவகை என்று ஐந்து வகைகளாகப் பிரித்துளர்.


ஆஸ்திரோனீசியா மொழிகள்: இவை இந்தோனீசியன்வகை, மெலனீசியன்வகை, பாலினீசியன்வகை என மூன்று வகைப்படும். இவற்றுள் இந்தோனீசியன் வகையிலிருந்து மெலனீசியன்வகையும், மெலனீசியன் வகையிலிருந்து பாலினீசியன் வகையும் உண்டாயினவென்று அறிஞர்கள் கருதுகிறார்கள். சிறந்த மொழிகள் சிறப்பில்லாத மொழிகளாக மாறியதற்கு இது ஓர் எடுத்துக்காட்டாகும்.


ஆஸ்திரியா மத்திய ஐரோப்பாவிலுள்ள ஒரு நாடு. இந்நாடு பெரும்பாலும் அரசியல் அடிப்படையில் அமைந்ததாதலின் பூகோள எல்லைகள் அவ்வப்போது மாறிக்கொண்டே வந்திருக்கின்றன. ஒரு காலத்தில் 1,30,000 சதுர மைலாக இருந்த இந் நாட்டின் பரப்பு இப்போது (1952) 32,375 சதுர மைல். 1918-ல் முடிவுற்ற முதல் உலக யுத்தத்தில் ஆஸ்திரியா-ஹங்கேரி இராச்சியம் தோற்கடிக்கப்பட்டபின், அது ஆஸ்திரியா என்றும் ஹங்கேரி என்றும் இரு தனி நாடுகளாகப் பிரிக்கப்பட்டது. ஆஸ்திரியா எல்லாப் புறங்களிலும் நாடுகளால் சூழப்பட்டது. ஆஸ்திரியர்களில் பெரும்பாலோர் ஜெர்மானியர்கள்; அவர்கள் பேசுவது ஜெர்மானிய மொழி. இந்நாட்டில் செக், சுலோவாக்மாகியார், குரோவாட், இத்தாலியர் முதலிய பல சாதியினர் வாழ்கின்றனர்.

ஆஸ்திரியாவில் மலைகள் அதிகம். ஆல்ப்ஸ் மலைகளில் பாதிக்குமேல் இந்நாட்டிலேயே அமைந்துள்ளன.