பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/572

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இசை

523

இசைக் கருவிகள்

நான்காம் நூற்றாண்டில் சம்பா நாட்டை (கொச்சின் சீனா) அடைந்த மா-துவான்-லின் (Ma-Tuan-lin) என்ற சீன யாத்திரிகர், ”இந்நாட்டினரது இசைக்கருவிகள் நமது கருவிகளைப் பெரிதும் ஒத்திருக்கின்றன. சுரமண்டலம் (ஹார்ப்), ஐந்து தந்திப் பிடில், குழல் ஆகிய சுருவிகள் இங்கு வழக்கத்தில் உள்ளன. மக்களை ஒன்று திரட்ட இவர்கள் சங்கையும்முரசையும் உபயோகிக்கிறார்கள்” எனக் கூறுகிறார்.

போர்ச்சுக்கேசியரது வருகையால் மலேயாவில் பழைய இசை முறை அடியோடு அழிந்து போயிற்று. ஜாவாவின் சாதாரண மக்களது இசையும் இதே காரணத்தால் மறைந்து போயிற்று. சுல்தான்களின் சபையில் மட்டுமே அழகு நிறைந்த இந்தோ-ஜாவா இசை முறை வழக்கொழியாமல் காக்கப்பட்டது.

ஜாவாவில் வழங்கும் கச்சபி (வீணை) என்ற கருவியும், கம்போஜில் வழங்கும் காங்தோம் (தபலா) என்ற கருவியும் அந்நாட்டினை இந்துக்கள் அரசாண்டபோது தோன்றியவை. பிற்காலத்தில் ரெபாப் (Rebob) என்ற இசைக் கருவியை இந்திய முஸ்லிம்கள் அங்கே வழக்கத்திற்குக் கொண்டுவந்தார்கள்.

பர்மா: ஆதியிலிருந்தே கீழ் பர்மாவில் ஒரிஸ்ஸாவிலிருந்து குடியேறிய மக்கள் வாழ்ந்து வந்தனர். அந்நாட்டை இந்தியாவும் சீனாவும் போட்டி போட்டுக் கொண்டு மாறுபடுத்தின. ஒரு காலத்தில் பர்மாவில் கலப்பற்ற இந்திய இசை வழங்கியது. இப்போது சீன இசையின் செல்வாக்கு அதிகமாகக் காணப்படுகிறது. இக்காலத்தில் வழக்கத்தில் உள்ள வில் வடிவ வீணையின் ஒரே வகை சான் (Saun) என்ற பெயரால் பர்மாவில் இன்னும் வழக்கத்தில் உள்ளது.

மடகாஸ்கர்: ஆப்பிரிக்காவையும் அரபிக்கடல் தீவுகளையும் இந்திய இசை எவ்வாறு மாற்றியது என்பதை இன்னும் சரிவர ஆராயவில்லை. இத்தகைய ஆராய்ச்சி பல முக்கியமான உண்மைகளை வெளிப்படுத்தும் என்பதில் ஐயமில்லை.

மடகாஸ்கரில் இக்காலத்தில் காங்கோ-வொ அட்டோவா (Kongo-Voatova) என்ற கருவி உள்ளது. எல்லோரா, மாமல்லபுரம் போன்ற இடைக்கால இந்தியச் சின்னங்களில் காணப்படும் வீணையைப் போன்ற இக்கருவியை அதைப் போலவே மார்பில் சாய்த்துக் கொண்டு வாசிக்கிறார்கள்.

இசை என்பது பண்பாட்டின் மிக நிரந்தரமான அமிசங்களில் ஒன்று. மக்கள் தமது மொழியை மறக்கலாம். தம் தாய்நாட்டை விட்டு வேறு நாடுசெல்லலாம். ஆனால் அவர்கள் தமது இசையை விடுவதில்லை. இசை முறைகளையும் இசைக் கருவிகளையும் ஆராய்வதால் மக்களின் குடியேற்றங்களையும் தொடர்புகளையும் அறிய முடிகிறது. ஆதிகாலத்திலிருந்து இன்றுவரை இந்தியப் பண்பாடு உலகின் மற்றப் பிரதேசங்களை எவ்வளவு தூரம் மாற்றியிருக்கிறது என்பதை உலகெங்கும் காணப்படும் இந்திய இசையின் சுவடுகளிலிருந்து நாம்உணர முடிகிறது.

வெளிநாடுகளை இந்திய இசை எவ்வகையில் மாற்றியது என விரிவாக ஆராய்வது இந்திய நாட்டின் பல வேறு மொழித்தொகுதிகள், பண்பாட்டுத் தொகுதிகள் ஆகியவற்றிற்கும், இந்திய இசை முறைகளுக்கும் உள்ள உண்மையான தொடர்புகளை அறிய உதவலாம். ஏனெனில் வெவ்வேறு மரபுகளையும் முறைகளையும் கொண்ட இந்திய இசை வகைகளை ஒன்றுபடுத்த இடைக் காலத்தில் நடந்த முயற்சிகளால் இந்திய இசையின் வரலாறு மிகக் குழப்பமானதாய்விட்டது. மேலெழுந்த வாரியாகப் பார்க்குமிடத்து இக்குழப்பத்திலிருந்து உண்மையை உணர முடிவதில்லை.

மேளங்களின் பாகுபாட்டில் மூர்ச்சனைகளையும் ஜாதிகளையும் கையாண்ட கந்தருவ அல்லது பரத இசை முறையொன்று வடஇந்தியாவிலிருக்கும் அடிப்படையான ஒளடவ ராகங்களையும், இவைகளை அனுசரித்துத் தோன்றிய சம்பூர்ண ராகங்களையும் கொண்ட சைவ இசைமுறையொன்று கலிங்கம் அல்லது தென்னிந்தியாவிலிருந்து இந்தோனீசியத் தீவுக்குப் பரவியது என்பதில் ஐயமே இல்லை. சி. ச.


இசை-கட்டுரைகள்  : பார்க்க : இசை என்ற தலைப்பின்கீழ் உள்ள முக்கியக் கட்டுரைகள்: இராகம், இராகலட்சணம், மேளங்கள், மேளகர்த்தா, சுருதி சுரம் இடைநிலை, இசைக்குறியிடல், இசைவகை, கருநாடக இசை, பிறநாடுகளில் இசை, இந்திய இசையும் பிற நாட்டு இசையும். மற்ற முக்கியமான தனிக்கட்டுரைகள்: இசைத்தமிழ், இசை நாடகம், இந்துஸ்தானி இசை, இசைக்கருவிகள், தாளம். இந்தியாவிலும் பிற நாடுகளிலும் தோன்றிய முக்கியமான இசைக்கருவிகளைப் பற்றியும் இசைப்பாட்டாசிரியர்களைப் பற்றியும் தனிக்கட்டுரைகள் உண்டு.


இசைக் கருவிகள் இசை தோன்று முன்னரே இசைக் கருவிகள் தோன்றிவிட்டன என்று கூறவேண்டும். ஏனெனில் இயற்கையில் தோன்றும் பல ஒலிகள் இசைவகையைச் சேர்ந்தவை. மரத்திலிருந்து பிரிந்து தொங்கும் பட்டையும், புதராக வளர்ந்த நாணலும் காற்றில் அசைந்து ஒலியைத் தருவதைக் கண்டும். உட்டுளையான மரத்தின்மேல் தற்செயலாகக் கற்களும் மழைத் துளிகளும் விழும்போது உண்டாகும் ஒலியைக் கேட்டும் ஆதி மனிதன் தன் இசைக் கருவிகளை அமைத்திருக்க வேண்டும். வேட்டையாடும் ஆதிமனிதன் தன் வில்லின் நாணை இழுத்துவிடும்போது அது செய்த ஒலியில் ஈடுபட்டு, நரம்புக் கருவியைக் கண்டுபிடித்திருக்க வேண்டும். கைகளைத் தட்டியும், அதிர்வுடன் குதித்தும், மனிதன் முதல் இசையொலிகளைத் தோற்றுவிக்க முயன்றான். கல்லினாலான செண்டையும் கம்புகளும் முதலில் தோன்றிய இசைக் கருவிகளாகும். கல்லினைக் குடைந்து, அதன்மேல் விலங்குகளின் தோலை இழுத்துக்கட்டி, அதை இசைக் கருவியாக்கவும், உலோகத்தாலான செண்டை, தாளம்போன்ற கருவிகளைச் செய்யவும் அவன் பின்னர்க் கற்றான். முரசு போன்ற தோற் கருவிகளே மிகப் பழமையான இசைக் கருவிகள். கொம்பு, மகுடி, சங்கு போன்ற தொளைக் கருவிகள் இதன் பின்னரும், யாழ்போன்ற நரம்புக் கருவிகள் கடைசியாகவும் தோன்றியிருக்கவேண்டும்.

தற்கால இந்தியாவில் சுமார் ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட இசைக் கருவிகள் உள்ளன. இவை ஒவ்வொன்றும் தனிப்பட்ட வடிவும் அமைப்பும் கொண்டவை. நாட்டுப் புறங்களில் தந்திபானை, கும்மடி முதலிய தனிவகைக் கருவிகள் வழக்கத்தில் உள்ளன. இந்திய இசைக்குக் கமகமே முக்கியமாகையால் கமகத்தைத் தரவல்ல கருவிகளே முன்னேற்றமடைந்து இன்றுவரை நிலைத்துள்ளன. இந்திய இசை முறைக்கு இராகம் முக்கியமானது. இதனால் நிலையான சுருதியுள்ள பியானோ, ஆர்கன் போன்ற மேனாட்டு இசைக் கருவிகள் இந்தியாவில் தோன்ற வழியில்லை. தொளைக் கருவிகளில் கிளாரினெட், ஓபோ போன்ற கருவிகளில் சாவிகள் உண்டு. ஆனால் இவற்றையொத்த நாகசுரம், குழல் முதலிய இந்தியக் கருவிகளில் சாவி-