பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/787

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இந்தியாவில் போர்ச்சுக்கேசியர்

722

இந்திரசாலம்

காத்தார். கருநாடகப் போர்களில் ஆங்கிலேயருக்கு எப்போதும் விரோதமாகப் பிரெஞ்சுக்காரர் இருந்து வந்தனர். டூப்ளேக்குப் பிறகு வந்த கவர்னர்களுடைய முயற்சியால் பிரெஞ்சு ஆதிக்கம் இந்தியாவில் ஓங்கவில்லை. 1761-ல் புதுச்சேரியைக் கைப்பற்றிய ஆங்கிலேயர் அவ்வூரைப் பெரும்பாலும் அழித்தனர். பிரெஞ்சுக்காரரைவிட ஆங்கிலேயருக்குப் பண வசதி அதிகமாயிருந்தமையாலும், போர்த்திறமையில் அவர்கள் விஞ்சியிருந்தமையாலும் பிரெஞ்சுக்காரருடைய ஆதிக்கம் இந்தியாவில் குன்றியது. தே. வெ. ம.


இந்தியாவில் போர்ச்சுக்கேசியர் : 15-ஆம் நூற்றாண்டின் இடைப் பகுதியிலிருந்தே போர்ச்சுக்கேசியர் ஆப்பிரிக்காவோடும் தென் ஆசிய நாடுகளோடும் வாணிகத் தொடர்பு ஏற்படுத்திக்கொண்டனர். தென் ஆப்பிரிக்காவிலுள்ள நன்னம்பிக்கை முனையைச் சுற்றி இந்தியாவின் மேலைக் கரையை முதன் முதல் அடைந்த வாஸ்கோடகாமாவைப் பின்பற்றிப் பல வணிகர்கள் கள்ளிக்கோட்டைக்கருகே வந்து போர்ச்சுக்கேசிய வாணிகத்தைப் பெருக்கினர். அவர்கள் வந்த காலத்தில் விஜயநகர இராச்சியம் வலுவடைந்திருந்தது. போர்ச்சுக்கேசியர் தங்கள் படையில் இந்தியத் துருப்புக்களையும் சேர்த்துக்கொண்டனர். 1503-ல் கோவாவைக் கைப்பற்றிய போர்ச்சுக்கேசியர் ஆல்பகர்க் என்னும் கவர்னர் காலத்தில் 1510-ல் கொச்சி இராச்சியத்தின் உள்நாட்டு விஷயங்களில் தலையிடத் தொடங்கினர். அல்மேடா, ஆல்பகர்க் என்னும் கவர்னர்கள் முறையே கண்ணனூரிலும் கோவாவிலும் பல கொடிய செயல்களைப் புரிந்து, தங்களுக்குத் தேவையான காரியங்களைச் சாதித்துக் கொண்டனர். கடற்கொள்ளையடித்து நாட்டினரை அச்சுறுத்துவது அவர்களுடைய தொழிலாயிருந்தது. போர்ச்சுக்கேசியர் 15ஆம் நூற்றாண்டினிறுதியில் மற்ற ஐரோப்பியருடைய போட்டியில்லாமல் இருந்ததால் தங்கள் விருப்பப்படிப் பல அரசியல், வாணிகக் காரியங்களைச் சாதித்துக்கொள்ள முடிந்தது. பிற்காலத்தில், அதாவது 17ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து ஆங்கில டச்சுப் போட்டிகளால் போர்ச்சுக்கேசியருடைய ஆதிக்கம் சிறிது சிறிதாக மறையத் தொடங்கிற்று. போர்ச்சுக்கேசிய ஆள் பலக் குறைவும், மற்ற ஐரோப்பிய நாடுகளுடைய போட்டியும், 1580-1640 வரையில் ஸ்பெயினோடு அந்நாடு இணைந்திருந்ததும் அவர்களுடைய ஆதிக்க வீழ்ச்சிக்கு முக்கியக் காரணங்களாம். 1663-ல் அநேகமாக இந்தியாவில் அவர்களுக்குச் சொந்தமாயிருந்த பகுதிகள் எல்லாம் கைப்பற்றப்பட்டன; 1739-ல் பாசீனை மகாராஷ்டிரர் கைப்பற்றினர். அவர்களிடம் இதுவரையில் எஞ்சியுள்ள பகுதிகள் கோவா, டையூ, டாமன் என்னும் இடங்களே. தே. வெ. ம.


இந்தியாவில் யூதர்: கி.பி. 71-ல் ரோம் நாட்டினர் எருசலேம் நகரத்தைத் தாக்கி அழித்தார்கள். அப்போது பல யூத குடும்பங்கள் (சுமார் 10,000 யூதர்) இந்தியாவில் மேற்குக்கரையில், மலையாளத்தில் குடியேறின. எட்டாவது நூற்றாண்டில் (சிலர் பத்தாவது நூற்றாண்டு என்று கருதுகிறார்கள்) பாஸ்கர ரவிவர்மன் என்னும் சேரநாட்டு மன்னன் யூதருக்குக் கொடுத்த சாசனம் இவர்களுடைய வரலாற்றைக் குறிக்கும் பழைய ஆதாரமாகும். இவர்கள் நிலச்சுவான்தார்களாகவும் வியாபாரிகளாகவும் இருந்ததாகத் தெரியவருகிறது. பம்பாய்க் கடற்கரையில் கொலாபாவில் குடியேறின யூதர் அரேபியாவிலுள்ள யெமன் (Yemen) நாட்டலிருந்து வந்தவர்கள். கி.பி.இரண்டாவது நூற்றாண்டில் இவர்கள் குடியேறினரென நம்பப்படுகிறது.

கொச்சியில் யூதர் வசிக்கும் பாகம் ஒன்று இப்போதும் பேர்பெற்றதாயுள்ளது. அங்கு அவர்களுடைய தேவாலயங்கள் (Synagogues) இருக்கின்றன. அவர்கள் வெள்ளை யூதர், கறுப்பு யூதர் என்ற இரு வகுப்பாகப் பிரிந்திருக்கிறார்கள். இந்நாட்டுக் குடிகளுடன் கலப்புமணம் செய்து கொண்டவர்களாகையால் ஒரு சாராருக்குக் கறுப்பு யூதர் என்ற பெயர் வந்ததுபோலும். கூ. ரா. வே.


இந்திரகாளி வெண்பாப்பாட்டியலின் முதல் நூல். ஆசிரியர் பெயர் தெரியவில்லை (வெண்பாப் பாட்டியல் உரைப்பாயிரம்).


இந்திரகாளியம் யாமளேந்திரர் செய்த பழைய இசைத் தமிழ் நூல் (சிலப். உரைப்பாயிரம்). இந் நூல் இப்பொழுதில்லை.


இந்திரகோபம் சிவப்பு நிறமான சிறு பிராணி. அரை யங்குல நீளம் வரையில் இருக்கும். உண்ணி போன்ற வடிவுள்ளது. எட்டுக் கால்களுள்ளது. இளம் பருவத்தில் ஆறு கால்களே இருக்கும். அவற்றின் உதவியால் தரையில் ஊர்ந்து செல்லும். சுதந்திர வாழ்க்கையுள்ளது. இதன் உடல் முழுவதும் இரத்தம் போலச் செந்நிறமான நுண்ணிய மயிர் அடர்த்தியாக மூடியிருப்பதால் இது சிவப்பு மகமல் போர்த்தது போலத் தோன்றும். இந்தக் காரணத்தால் என்று ஒரு இதை வெல்வெட்டுப் பூச்சி என்றும் சொல்வார்கள். சீதாப் பிராட்டியார் வெற்றிலையை மென்று உமிழ்ந்தது இந்த அழகிய உயிராக மாறிற்று கதை வழங்குகிறது. இதனால் இதைத் தம்பலப் பூச்சி என்றும் அழைப்பதுண்டு. இந்தப் பிராணி கணுக்காலித் தொகுதியிலே சிலந்தி வகுப்பிலே அக்காரினா என்னும் உண்ணி வரிசையில் சிற்றுண்ணி (Mite) என்று பொதுவாகச் சொல்லப்படும் வகையில் திராம்பிடியம் என்னும் சாதியைச் சேர்ந்தது. கொச்சினியல் என்னும் சப்பாத்திப் பூச்சியும் மின்மினியும்கூட இந்திரகோபம் எனப்படுவதுண்டு.

இந்திரகோபம் வெளிவந்து உலவுவது மழை காலத்துக்கு அறிகுறி என்று இந்தியக் கவிகள் அணிசெய்துரைப்பார்கள்.


இந்திரசாலம்: தத்தாத்திரேய தந்திரம், நித்தியநாதர் எழுதிய இந்திரசாலம் என்ற பண்டைய வட மொழி நூல்கள் இந்திரசாலத்தைப் பற்றிக்கீழ்க்கண்டவாறு கூறுகின்றன: ‘இந்திரன்’ என்னும் சொல் திறமையைக் குறிப்பதாகும். ஒருவன் தன் திறமையால் காண்போர் கண்ணை மறைத்தல் இந்திரசாலம் எனப்படும். உள்ளதை உள்ளபடி பார்க்குஞ் சக்தியை மறைத்து, வேறு விதமாகப் பார்க்கும்படி பிறரைச் செய்தல் இந்திரசாலத்தின் நோக்கமாகும். இனி இந்திரசாலம் என்னும் சொல்லுக்கு இந்திரனின் வலை என்று பொருகொளலுமாம். இங்கு ‘இந்திர’ என்னும் சொல் கண்ணைக் குறிப்பதாகக் கொண்டு, கண்ணுக்கு வலை போட்டுச் சரியான பார்வையை மறைத்தல் இந்திரசாலம் என்று பொருள் கூறுவர். இந்திரசாலத்தின் துணையால் நோயையும் வறுமையையும் கொள்ளலும், பிறப்பிறப்புக்களினின்றும் விடுபடுதலும், பிறரை ஒறுத்தலும், அருளலும், விரும்பியதை