பக்கம்:காற்றில் வந்த கவிதை.pdf/117

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

116

காற்றில் வந்த கவிதை

யாரைத் தொழுது வணங்குவதென்றெல்லாம் வெகு நாட்களுக்கு முன்பே தீர்மானமாகிவிட்டது. பொங்கல் மங்கல நாளை எதிர்பார்த்து எல்லோருடைய உள்ளத்திலும் ஒரே இன்பக் கிளர்ச்சி.

பட்டி ஆவுடையாருக்குப் பொங்கல் வைத்து இரவு எட்டு மணிக்குத் துவரைமார் கொழுந்து விட்டெரியும் வெளிச்சத்திலே பட்டிக்குள்ளே ஆடு மாடுகளின் மேற் பார்வையிலே அவைகள் படுத்துறங்கும் அந்தப் புனித மண்ணிஉலே இலை போட்டுப் பொங்கல விருந்து நடக்கும்.

முதலிலே பட்டி ஆவுடையார்க்குத்தான் விருந்து. அவர்தானே உழவர்களுக்கு உயிர் கொடுப்பவர்? அதனல் அவருக்கு முதல் மரியாதை செய்துவிட்டுத்தான் விருந்துண்பார்கள்.

'கைகழுவு பட்டியாரே கைகழுவு' என்று சொல்லிக் கொண்டே மாட்டுக்காரன் ஒரு செம்பில் தண்ணிர் எடுத்துப் பட்டியைச் சுற்றி ஊற்றிச் செல்வான்.

‘அசனம் பட்டியாரே அசனம்' என்று மற்ருெருவன் கூறிக்கொண்டே அமுது படைப்பான்.

'உண்ணுண்ணு பட்டியாரே, உண்ணுண்ணு' என்று மற்ருெருவன் உபசாரம் செய்வான்.

'வாய் கழுவு பட்டியாரே வாய்கழுவு' என்று கடைசியில் ஒருவன் சொல்லிச் செல்லுவான். இப்படியாகப் பட்டி ஆவுடையாருக்கு முதலில் உபசாரம் செய்துவிட்டுப் பிறகு விருந்து நடக்கும். பட்டி என்ற சொல்லுக்குப் பொருள் சிலருக்கு விளங்காதிருக்கலாம். மூங்கிலால் வேய்ந்த படல்களைச் சதுரமாக வைத்து அதற்குள் ஆடு மாடுகளை அடைப்பார்கள். அதுதான் பட்டி.