பக்கம்:கால்டுவெல் ஒப்பிலக்கணம்.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

206

கிரீயர்ஸன் மொழியாராய்ச்சிக் குறிப்புக்கள்



அன்றியும், பண்டைய ஆரியமொழிகளும், பண்டைய இந்திய உள்நாட்டு மொழிகளை யொப்பத் திருந்தா மொழிகளே யாம் என்பதும் விளக்கமுறும். இதனால் திருத்தஞ் செய்யப்பெற்றுப் புத்துருக் கொண்ட ”சமஸ்கிருத” மொழியி னின்றும் வேறெம் மொழியுங் கிளைத்திருக்க முடியா தென்பது தெளிவு; குறிப்பிட்ட ஒரு மொழியும் வடமொழியாகிய ”சமஸ்கிருத” மும் ஒரே பண்டைய மொழியி லிருந்து பிறந்து பிரிந்தவை என்று வேண்டுமானால் வலிந்து கூறிக்கொள்ளலாம்.

”மத்திய தேச”த்திற்கு மேற்கிலும் தென்மேற்கிலும் வந்துறைந்த ஆரியர்கள் பேசிவந்த மொழிகள் காஷ்மீரி,[1] கோஹிஸ்தானி[2], லஃண்டா[3], சிந்தீ[4] என்பனவாம். இவ்விரு திறத்தாருக்கு மிடையே வசித்துவந்த மக்கள் இம்மொழிச் சொற்களைத் தத்தம் சொந்த மொழிகளுடன் கலந்து பேசி வந்தனர்; அதனால், அம்மொழிகள் பின்னர்த் தனியுருவேற்றுத் தனிப் பெயர் பெறுவவாயின. இராஜஸ்தானி[5], பஹாரி[6], குஜராத்தி[7], பஞ்சாபி[8] என்பன அம்மொழிகளாம்.

இனி, தொகை மிகுதியாலும், மண்ணசையாலும் ”மத்திய தேச”த்திலும், அதன் மேலைத் திசையிலுமிருந்த ஆரிய மக்கள் கிழக்கிலும், தென்கிழக்கிலும் நாளாவட்டத்தில் பரவி அங்குள்ள மக்களுடன் உறைவாராயினர். அதனால் ஆங்காங்கிருந்த மொழிகள் ஆரியமொழிக் கலப்புற்றுத் தத்தம் தனிச் சிறப்பைச் சிறிதுசிறிதாக இழக்கலாயின. மேற் கூறியாங்கு ஆரிய மொழித் தாக்கை நேரே எதிர்த்துநின்று தம் தலைமை இழவாமலிருந்த மொழிகள் தென்னிங்கியத் திராவிட மொழிகளேயாம். அதிலும் இன்றளவும் புறங் கொடுக்காது உயர்தனிச் செம்மொழியென்று மொழியாராய்ச்சி


  1. Kashmiri
  2. Kohistani
  3. Lahnda
  4. Sindhi
  5. Rajasthani
  6. The Pahari
  7. Gujarati
  8. Panjabi