பக்கம்:கால்டுவெல் ஒப்பிலக்கணம்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20

கால்டுவெல் ஒப்பிலக்கணம்

கேட்டிராதிருந்திருக்க முடியாது; ஆனால், கேட்டவற்றைப் பிறழ உணர்ந்து ஒன்றைவிட் டொன்றாக மாற்றிக் கூறியிருத்தில் கூடும். எனினும், அவர் பாண்டிய நாட்டைப் பாணடுவோடு பொருத்திக் கூறியிருத்தல் ஒப்பத் தகுந்த தேயாம். மகாபாரதக் கதை இக்காலை யுள்ள விரிவான நிலையில் அக்காலை இருந்திருக்கக் கூடும் என்று உறுதி கூறுதற்கில்லை. அவ்வாறு இருந்திருக்கக் கூடும் என்று வைத்துக் கொண்டால், அதன்கண் காணப்படும் வரலாற்றுக் குறிப் பொன்றையே மெகாஸ்தெனீசும் குறித்துள்ளார் என்று எளிதில் நம்பலாம். ஐம் பெரும் பாண்டவர்களுள் ஒருவன் அருச்சுனன்; அவன் கிருஷ்ணனின் சிறந்த நண்பன். அவன் “தீர்த்த யாத்திரை” செய்து வந்த காலத்துப் பாண்டியன் ஒருவன் மகளை மணந்துகொண்டான். இது மகாபாரதக் கதை. மெகாஸ்தெனீஸ் கூறியுள்ள நாட்டு வளமெல்லாம் இப்பாண்டியன் நாட்டிற்கே முற்றிலும் பொருத்தமாக உள்ளது. அதிலும் முத்துக் கொழிக்கும் நாடு என்று அவர் கூறியிருப்பது கொண்டு பாண்டிய நாடுதான் அஃது என்பது உறுதியாகக் கொள்ளப்படும்.

இனி மெகாஸ்தெனீசுக்குப் பின் வந்த பிளைனி என்பார் இந்தியாவிலுள்ள பலவகுப்பு மக்களுக்குள் ஒரு வகுப்பினர் [1]பாண்டி என்னும் பெயரினர் என்றும், அவ் வகுப்பினர் இராணிகளால் ஆளப்பட்டு வருகின்றனர் என்றும் குறித்துள்ளார். மலையாள நாட்டில் மருமக்கள் தாயம் இன்றுகாறும் வழங்கி வருவது கொண்டு பிளைனி கூறியது மலையாள நாட்டைத்தான் என்று கொள்ளலாகாதோ எனின், அம் மலையாள நாட்டிலும் தம் காலத்திற் பாண்டியர் ஆட்சி பல இடங்களிற் பரவி யிருந்தது என்று அவரே கூறியுள்ளமையால், அவரும், அவருக்கு முன் வந்த மெகாஸ்தெனீசும்


  1. Pandie