பக்கம்:கால்டுவெல் ஒப்பிலக்கணம்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

60

கால்டுவெல் ஒப்பிலக்கணம்

விட மொழிகளுக்கும் இடம்பெற உரிமை யுண்டு என்று கொள்வதோ, வடமொழியி லிருந்தே திராவிட மொழிகள் தோன்றி யிருத்தல் வேண்டும் என்ற கொள்கைக்கு முற்றிலும் வேறுபட்ட கொள்கைகளாகும். இலக்கண அமைப்பு முறைகளையும் சொற் றொகுதிகளையும் ஆராய்ந்தால், மேற் குறித்த இந்து - ஐரோப்பிய மொழியினத்தில் திராவிட மொழிகளுக்கும் இடமுண்டு என்று நிறுவுதல் ஒருவாறு இயலும். ஆரியர் வருகைக்கு முற்பட்ட காலத்திலேயே சித்திய[1] மொழியினத்திலிருந்து இந்து-ஐரோப்பிய மொழியினங்கள் பிரிந்துவிட்டன. இம் முடிபு பின்னிஷ்[2] மொழியிலும், துருக்கிய மொழியிலும் காணப்படும் சில பண்டை மூலச் சொற்களால் வலியுறுகிறது; அதுபோலவே, திராவிட மொழிகளிலும் ஆரியர் வருகைக்கு முற்பட்ட காலத்து வழங்கியிருந்தனவாகக் கருதக்கூடிய சில மொழிச் சொற்கள் பயின்று வருகின்றமை மேற்கூறிய முடிபை வலியுறுத்துவதாகும். அதனால், திராவிட மொழிகள் இச் சொற்களை வடமொழியிலிருந்து பெற்றன என்றே, அன்றி இரண்டு மொழிகளுக்கும் பொதுவான ஒரு பண்டைப் பாகத மொழியிலிருந்து பெற்றிருக்கக்கூடும் என்றே கொள்வது தவறென்பதும், அருகில் வழங்கிய திராவிட மொழிகளி லிருந்து வடமொழி பல சொற்களைப் பெற்றுப் பயன்படுத்தப் பின்வாங்கவில்லை யென்று கொள்வதே சரியான முடிபென்பதும், எளிதில் ஊகிக்கப்படும்.

எஃது எப்படியாயினும், வடமொழியிலிருந்து திராவிட மொழிகள் பிறந்திருக்கவேண்டும் என்று கொண்ட பழங் கொள்கை குருட்டுக் கொள்கையே என்பதில் ஐயமேயில்லை. இந்தி, வங்காளி முதலிய கெளரிய மொழிகள் வடமொழியிலிருந்து தோன்றியிருக்கக்கூடு மாதலால், திராவிட மொழி-


  1. Scythian
  2. Finnish