பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

154

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


தொடர்பானவையே என்பது புலப்படும். ஆதலால் கோவலன் பூம்புகாரை விட்டு மதுரை செல்லத் துணிந்தான். தன்னுடைய பழக்கங்களை மாற்றிக் கொள்ளத் துணிவில்லாமல், எங்கேயாவது, யாருக்கும் தெரியாமல் பொருளை ஈட்டி, வாழ்க்கையை நடத்தினால் சரி என்ற முடிவுக்கு வந்துவிடுகிறான். அதனால், கோவலனின் தனித் திறன்கள் செய்லபடாமையால்தான் இங்கேயும் ஊழ் வெற்றி பெறுகிறது.

கோவலன் சிலம்பினை விற்றுச் சிறு தொழில் செய்து வாழ்க்கையை நடத்தலாம் என்ற எண்ணத்துடன் மதுரைக்கு வருகிறான். ஆயர் குலத்துப் பெருமக்கள் வாழும் ஆயர்பாடியில் தங்குகிறான். அவனுடைய சென்ற காலத் தவறுகளை நினைத்து வருந்துகின்றான். ஆனாலும், கண்ணகி அவனைத் தேற்றுகிறாள்.

மதுரை மாநகருக்குள் சிலம்பினை விற்கும் பொருட்டுச் செல்கிறான். கோவலன், நாடு விட்டு நாடு வந்திருந்தாலும் அவனுடைய குடும்பத்தின் பழைய பெருமையை நினைத்துப் பார்க்காமல் இருக்க முடியவில்லை.

கோவலன் சிலம்பை விற்கப் புறப்படும்பொழுது கண்ணகியைப் பிரிகின்ற துயரம், பெருமை இழந்து வறுமை நிலையில் சிலம்பு விற்கச் செல்லும் வருத்தம் ஆகியன நெஞ்சை உறுத்த உலகத்தார்க்கு ஒத்துவராத நடையோடு மதுரைக்குள் செல்கிறான். மதுரைக்குள் சென்றவன், வாணிகர் தெருக்களுக்குச் சென்று வெளிப்படையாக விற்றிருக்கலாம். அங்ஙனம் அவன் முயற்சி செய்யவில்லை.

அவனுடைய பழைய பெருமை உணர்வுகளும் இன்றைய அவனுடைய இழிநிலையும் அவன் எண்ணத்தில் அலைமோதின. அதன் காரணமாக அவன் தயங்கித் தயங்கி நடக்கிறான். அது மட்டுமா? சிலம்பினை, பொற் கொல்லனிடம் விற்கும் முயற்சியில் கோவலன்