பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

214

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


களத்திற்குச் செல்கிறாள். இங்கு இளங்கோவடிகள், இயற்கை இகந்த நிலையில் கோவலனின் வெட்டுண்ட தலை கண்ணகியுடன் பேசுவதாக காட்சி அமைத்திருக்கிறார். இந்தக் காட்சி அவசியமானது.

நேரிடையான வாக்கு மூலம் - சாட்சி இல்லாமல் எப்படி வழக்கை நடத்த இயலும்? ஆட்சிமுறைச் சட்டங்களுக்கு இசைய இலக்கியம் அமைந்துள்ளமை சிலம்பில் உள்ள புதுமை. கண்ணகி, கோவலனிடம் நடந்தவையனைத்தும் கேட்டுணர்ந்த நிலையில் பாண்டியன் தவறு செய்துவிட்டான் என்று உணர்கிறாள். உடன் பாண்டியனிடம் வழக்குரைக்கப் புறப்படுகிறாள்.

ஒரு அரசு தனிப்பட்டதல்ல. சமுதாயம் தழீஇயது தானே அரசு. சமுதாயத்தில் உள்ளவர்கள் பிழைகள் செய்யின் அரசு கெடும். எனவே கண்ணகி பாண்டிய நாட்டின் சமுதாயத்தை ஆய்வு செய்கிறாள். “பத்தினிப் பெண்டிரும் உண்டுகொல்” என்று வினவுகிறாள்.

எங்கு பத்தினிப் பெண்டிர் உண்டோ அங்குக் காமுகன் இருத்தல் இல்லை. காமுகன் இல்லாத சமுதாயம் தரமுடையது. அச் சமுதாயத்தில் தவறுகள் நிகழா.

அடுத்துத் “தெய்வமும் உண்டு கொல்?” என்று கேட்கிறாள். தெய்வச் சிந்தனை உடைய சமுதாயம் தெய்வ நம்பிக்கை காரணமாக நல்லவர்களை உடையதாக அமையும். அதன் காரணமாகத் தவறுகள் செய்ய அஞ்சுவர்.

அடுத்துச் “சான்றோரும் உண்டு கொல்?” என்று வினவுகிறாள். ஆன்று அவிந்து அடங்கிய கொள்கைச் சான்றோர் வாழும் ஊரில் உள்ள மக்கள் சான்றோர் நெறிப்படுத்துதலின் காரணமாக நன்னெறி நின்றொழுகுவர். கோவலன் கொலை நடந்த மதுரையில் இவர்களில் யாருமில்லை. அதன் காரணமாகவே கோவலன் முறை கேடாகக் கொல்லப்பட்டான் என்று துணிகின்றாள்.