பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/311

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

300

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


ஐயத்திற்கிடமில்லாத விபீடணன் இராவணனை விட்டுப் பிரிந்து இராமனைச் சென்றடைந்தமையால் விபீடணன் போருக்குப் பயந்து விட்டான்! கோழை! உடன்பிறந்த அண்ணனுக்குத் துரோகம் செய்து விட்டு, இராமனுடன் சேர்ந்து ஆட்சியை, அதிகாரத்தைப் பற்றிக் கொள்ளத் திட்டமிட்டான்’ என்றெல்லாம் பழி வரும் என்பதை எண்ணி விபீடணனை ஐயத்திற்கு இடமளிக்காத ஒழுகலாறுடை யவன்; அறநெறி ஒன்றே அவன் சார்பு என்பதை நிலைநிறுத்த ‘ஐயறு தம்பி’ என்று கம்பன் கூறினான். சீதையை விடுதலை செய்து விபீடணனுடன் உறவு கலந்து வாழவில்லையாயின் நம்முடைய பல வலிமைகளையும் ஒன்று சேர்த்துக் கொண்டு போராட வேண்டும் என்று கும்பகருணன் கூறினான்.

“தையலை விட்டு? அவன் சரணம் தாழ்ந்து, நின்
ஐயறு தம்பியோடு அளவளாவுதல்
உய்திறம்; அன்று எனின் உளது, வேறும் ஓர்
செய்திறம்: அனையது தெரியக் கேட்டியால்”

(கம்பன் - 7359)

“பந்தியில் பந்தியில் படையை விட்டு, அவை
சிந்துதல் கண்டு, நீ இருந்து தேம்புதல்
மந்திரம் அன்று நம் வலி எலாம் உடன்
உந்துதல் கருமம்” என்று உணரக் கூறினான்.

(கம்பன் - 7360)

என்ற பாடல்கள் பலகாலும் எண்ணத்தக்கன.

கும்பகருணன் கூறிய இந்த அறிவுரைகளால் இராவணனிடத்தில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. அதற்குப் பதிலாக இராவணன் போருக்குப் போகப் புறப்பட்டான். கும்பகருணன் இராவணனை விலக்கி விட்டு, தானே போருக்குப் போகத் தலைப்பட்டான். அப்போது கும்பகருணன், ‘அண்ணா! போருக்குச் செல்கிறேன். நான்