பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/358

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புதுச்சேரி கம்பன் விழாத் தலைமை உரை

347


இருக்கிறது; நெறிமுறை இருக்கிறது. ஒவ்வொரு மரத்திற்கும் உத்திரவாதம் அளிக்கப்பட்ட உரமும் தண்ணீரும் கிடைக்கும். நம்முடைய மானுட சமுதாயம் சமுதாயமாக உருவெடுத்துவிட்டதென்றால் ஒரு பழத்தோட்டத்தைப் போல இருக்க வேண்டும். இன்றைக்கு நாம் இருப்பது மக்கள் கூட்டம்! அது காடு போல இருக்கிறது. எனக்குள்ளதுதான் எனக்குத் தெரிகிறதே தவிர மற்றவர்க்கு என்ன தேவை என்பது எனக்குத் தெரிவதில்லை.

மனம் போன போக்காக இருக்கின்ற சமுதாய அமைப்பு, வாழ்வதற்கு தகுதியுடையதாக இல்லை என்றால் அதனை மாற்றியமைக்க வேண்டும். மாற்றியமைப்பதற்குப் பதில் சில சமயங்களில் சமாதானமாகப் போகலாமா? என்று சிலர் சொல்வார்கள். இவர்கள் வெண்ணெய்க்கும் சுண்ணாம்புக்கும் கூடச் சமாதானம் செய்வார்கள். அந்தச் சமாதானத்திற்குப் பெயர்தான் பழைமையைச் சீர்திருத்தம் செய்வது என்பது. ஆனால் கூர்ந்து கவனித்துப் பார்த்தால் மிகவும் பாழாய்ப்போன வீட்டை பழுதுபார்ப்பதைவிட இடித்துக் கட்டிவிட்டால் நல்லது போலத் தெரிகிறது. ஏனெனில் அதைப் பழுது பார்ப்பதற்கு ஏராளமான செலவு செய்யவேண்டும். ஏராளமான ஆற்றல் வேண்டும். ஒருவன் ஒரு கைமரத்தைக் காப்பாற்றவேண்டும் என்று சொன்னால் இன்னொருவன் போட்டிபோட்டுக் கொண்டு எனக்கு இந்தக் கைமரத்தைக் காப்பாற்றவேண்டும் என்று சொல்வான். புரட்சி என்பது ஒட்டுறவே இல்லாமல் மாற்றியமைப்பது; காய்தல் உவத்தல் இல்லாமல் மாற்றியமைப்பது. அந்தப் புரட்சி நமது நாட்டில் எளிதாகத் தோன்றாது. தயவுசெய்து மன்னித்துக் கொள்ளுங்கள். நமது நாட்டில் புரட்சி தோன்றாது. காரணம் நாம் துன்பங்களையெல்லாம் சகித்துக் கொள்ளப் பழக்கமாகிவிட்டோம். மலங்களில் கிடந்து புரளுகின்ற பன்றிகளைப்போல, நமது துன்பங்களை யெல்லாம் சகித்துக் கொண்டு சுரணையில்லாமல், சூடு