பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/359

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

348

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


இல்லாமல் வெட்கமில்லாமல் வாழ்கிற செளஜன்யமான பழக்கத்திற்கு நாம் ஆளாகிவிட்டோம். அவமானம், இழிவு, வறுமை, ஏழ்மை இவற்றையெல்லாம் சகித்துக்கொண்டு “இப்படித்தான் இருக்கும்” என்று ஒரு சமாதானம். “திடும் என்று ஒரு நாளிலே உலகம் மாறிவிடுமா?” - நாய் வாலை நிமிர்த்திட முடியுமா? என்ன?” என்று சமாதானம். இப்படி என்னென்ன சமாதானம்? இந்த நாட்டிலே புரட்சியாவது? அது வருவதாவது?

புரட்சி என்பதற்கு ஒரு சிறிய சான்று சொல்லி விளக்க நான் ஆசைப்படுகிறேன். கோழி முட்டை பலருக்குத் தெரிந்த ஒரு பொருள். அந்த முட்டைக்குள்ளே குஞ்சு உருவாகி இருக்கிறது. அந்தக் குஞ்சால் அந்த முட்டையினுள் உள்ள அந்த பரிணாம எல்லை இருக்கிறதே அந்தக் குறுகலான எல்லைக்குள் வாழமுடியவில்லை; குஞ்சுக்கு வாழப் பிடிக்கவில்லை; விருப்பமில்லை. பரந்த உலகத்திற்கு வந்து சுதந்திரத்தை அனுபவிக்க வேண்டும் என்று விரும்புகிறது. அந்த ஆவேசத்தால் உள்ளிருந்தபடியே முட்டையின் ஓட்டை உடைக்கிறது. அப்படியே ஓட்டை உடைத்து வெளியே வருகிறதே அதுபோன்றது புரட்சி.

நாமெல்லாம் இப்படி உடைப்போமா? “என்னவோ நம் தலையிலே எழுதினபடி நடக்கிறது” என்று சமாதானம் கூறிவிடுவோம். நான் கடவுள் நம்பிக்கையும் மதநம்பிக்கையும் உடையவன்தான். ஆனால் இடைக்காலத்தில் மதப் புரோகிதர்கள் மதத் தலைவர்கள் இந்தச் சமூகம் எழுந்து நிற்பதற்குரிய தெம்பும் திராணியும் இல்லாமல் போகும்படி குப்பைக் கூளங்களை மூளையிலே ஏற்றி விட்டார்கள். ஆதலால் எழுந்திருக்கவே மனமில்லாமற் போய்விட்டது. “ஆகா என்றெழுந்தது பார் யுகப்புரட்சி” என்று சொல்கிறான் பாரதி! நாமாவது புரட்சியாவது செய்கிறதாவது? பக்கத்தில் இருக்கிற வீட்டிலே இருப்பவருடன் சண்டைபோடாமல் இருந்தாலே பெரிய காரியம். இந்த அளவுக்கு நாம்