பக்கம்:செயலும் செயல்திறனும்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

125



என்னும் குறளுரையில் 'இளிவென்னும் ஏதப்பாடு' என்று குறிப்பிடுவது, எடுத்துக் கொண்ட வினைப்பாட்டைத் 'தாழ்ச்சியுறச் செய்யும் குற்றம்' என்பதாகப் பொருள்படும். இக்குற்றத்தை வராமற் செய்யும் தெளிவை, வினை செய்ய முற்படுபவர் பெற்றிருத்தல் வேண்டும்.

7. எச்சரிக்கையின் ஆறு கூறுகள்

எனவே முன்கூறியபடி, தாம் எடுத்துக்கொண்ட வினைக்கு இடையில் வரும் குற்றங்கள் வராமற் காக்கின்ற வகையில் கீழ்வரும் ஆறு எச்சரிக்கைகளையும் கட்டாயம் நினைவில் வைத்திருக்க வேண்டும்.

1. இதற்குப் பின் இது : இந்த வினையைச் செய்து முடித்த பின் இந்த வினையைச் செய்ய வேண்டும்; அதற்குப் பின்னர் இதைச் செய்ய வேண்டும் என்று வரிசை முறையாக, நிரல் முறையாகத் திட்டமிட்டுக் கொண்டு, ஒரு முறைக்குப் பலமுறையாக எச்சரிக்கையுடன் எண்ணிப் பார்த்துச் செய்ய முற்படுதல் வேண்டும். எடுத்துக்காட்டாக, மின்சாரத்தைப் (Bulb) போட்டுவிட்டுக் குமிழைப் பொருத்த முற்படுதல் கூடாது. குமிழைப் பொருத்திவிட்டே மின்சாரத்தைப் பாய்ச்சுதற்குச் சொடுக்கியைப் (Switch) போட வேண்டும். பேருந்து ஒட்டுநர் சிலர், இயந்திரம் ஒடிக் கொண்டிருக்கையிலே, வண்டியினின்று இறங்கி வேறு வேலை செய்வதைப் பார்த்திருக்கலாம். இயந்திரம் ஒடிக் கொண்டிருப்பதை நிறுத்திவிட்டே வண்டியினின்று இறங்க வேண்டும் என்பதே இதற்குப் பின் இது என்னும் எச்சரிக்கை முறையாகும். ஆங்கிலத்தில் கூறப்பெறும் One by one, onething at a time என்னும் கருத்து மொழிகளும் இதையே வலியுறுத்தும்.

2. இதனால் இது : இந்தச் செயலால்தான் இந்தச் செயல் நிகழ்ந்தது அல்லது நிகழும் என்று எண்ணிப் பார்க்கும் உணர்வு இது.

எடுத்துக்காட்டாக, அடுப்பில் சமையல் செய்தபின் நெருப்பு முழுவதையும் அணைக்காமல், அர்ை. குறையாக அணைத்துவிட்டுவந்தால், அதிலுள்ள அணைக்கப்படாத ஒரு சிறு நெருப்பே, காற்றினால் மெதுவாகக் கனன்று பெரு நெருப்பாக மாறி, வீடு தீப்பற்றி எரியும் அளவுக்குக் கூட வளர்ந்துவிடும் என்ற வகையில் எண்ணிப்பார்க்கும் உணர்வு எச்சரிக்கையின் இரண்டாம்படி உணர்வாகும். புகைப்பிடிப்பவர்கள் தீயை அணைக்காமல் சுருட்டை எரிந்து விடுவதாலும் இத்தகைய தீமைகள் வரலாம் அன்றோ?

இவை போலவே, பொறிக்கு எண்ணெயிடாமல் ஒட்டினால், அதன் சுழலும் உறுப்புகள் எளிதில் இயங்காமல், அழுத்தமான உராய்தல் ஏற்பட்டு, அதனால் சூடு உண்டாகி, இரண்டு உராய்வு உறுப்புகளும் சூட்டினால் விரிவடைந்து, ஒன்றை ஒன்று சுழலவிடாமல் இணைந்து, இறுகல் (lam) ஆகிப் பிடித்துக் கொள்ளும்படியான நிலை ஏற்படும்