பக்கம்:செயலும் செயல்திறனும்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

130

செயலும் செயல் திறனும்



வலிவாகவும் தெளிவாகவும் வலியுறுத்துகிறார் திருக்குறள் பேராசான்.

செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்து

இல்லாளின் ஊடி விடும்.

(1039)

மனைவியைப் பேணுதல் செய்யவில்லையானால், அவள் எவ்வாறு கணவனிடம் ஊடிக் கொள்வாளோ, அவ்வாறு நிலமும் தன்னைப் பேணிக் காத்தல் செய்யவில்லையானால் நிலக்கிழானிடம், வேறுபட்டுத் தன் பயனைத் தராது என்று நுட்பமாகவும் நயமாகவும் உணர்த்திக் காட்டுவார் பேராசான். இங்குச் செல்லுதல் என்னும் ஒரே சொல்லுக்குச் சென்று வருதல், சென்று கண்காணித்து வருதல், நாள் தோறும் அவ்வாறு செய்து வருதல், மனைவி கருவுயிர்க்கும் காலங்களில் அருகிருந்து கவனமுடன் கண்காணிப்புச் செய்வது போல், நிலத்தின் விளைவுக்காலங்களில் அவ்வாறு அருகிருந்து கணகாணித்து வருதல் . என்னும் வகையில் பலவாறு மேன்மேலும் பொருள் பெருகிக் கொண்டே போதலைக் கண்டு திருக்குறள் ஐயனின் நுணுகிய பேரறிவை உற்றுணர்ந்து மகிழலாம். இக்குறளின் மிக விரிவான நுட்பமான, மாந்தர் மனவியல் தழுவிய சிறந்த பொருளை, யாம் எழுதவிருக்கும் திருக்குறள் மெய்ப்பொருள் உரையில் கண்டு நிறைவு பெறுக)

இதில் உழவியலுக்குப் பொருந்திய பொருள் மட்டுமன்று உளவியலுக்கும், உலகியலுக்கும், அவை பொருந்திய வாழ்வியலுக்கும் ஒத்த பொருளைக் கண்டு உள உவகை கொள்ளலாம். உழவும் ஒரு தொழிலாதலால், தொழிலியலுக்கும் இக்கருத்து மிகவும் பொருந்துவதாகும். தொழிலுக்கும் இத்தகைய கண்காணிப்பு மிகமிகத் தேவையாகும்.

சவளி விற்பனையாளர், பெரும் முதலீடு செய்து, ஏராளமான துணிமணிகளை அணியணியாக அடுக்கி வைத்தால் மட்டும் போதாது. நாளடைவில் அவற்றைப் பூச்சி அரித்திடாமல் கண்காணிப்புச் செய்தல் வேண்டுமன்றோ? பொத்தகக் கடை, தாள் கடை வைத்திருப்பவர்களும் நாள்தோறும், இன்னுஞ் சொன்னால் பொழுதுதோறும், அவற்றைக் கண்காணிப்புச் செய்தல் வேண்டும்.

தலைமுடியை நாள்தோறும் கழுவித் துய்மை செய்ய வில்லையானால், தூசியும் துகளும் காற்றீரமும் படிந்து, தலைமுடி பிசுக்கேறிப் போவதுமட்டுமன்று, முடியொடு முடியிணைந்து, திரிந்து, சடைந்து போகுமன்றோ? பின்னர் அதில் ஈரும் பேனும் இனம் பெருக்கி வாழ்ந்து தலையையே மொட்டையடிக்கத் செய்துவிடும் அன்றோ? அதனாலன்றோ நாள்தோறும் எச்சரிக்கை உணர்வொடு தலைகழுவுவதும் எண்ணெய் தடவிப் பிசுக்கேறா வண்ணம் கண்காணிப்பதும் செய்கின்றோம். இவ்விரண்டு உணர்வுகளும் வாழ்வியல் கடமைகளில் ஒன்றாகக் கலந்துவிட்டன என்பதை எண்ணுக