பக்கம்:செயலும் செயல்திறனும்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

153



கொள்ளுவதையும், அந்தச் செயலுக்கு அடிப்படையான தேவைகளில் ஒன்றாகக் கருதுதல் வேண்டும். அந்நிலை, அவர்களை மேலும் அச்செயலில் ஊக்கமுடன் ஈடுபடுத்திக் கொள்ள உதவும் என்பதை நன்கு மனத்தில் இருத்திக் கொள்ளுதல் வேண்டும். அப்பொழுதுதான் உடல் நலத்தோடிருந்து நாம் எடுத்துக் கொண்ட செயலுக்குத் தகுதியாக நம்மை ஆக்கிக்கொள்ள இயலும்.

4. நாள்தோறும் எளிமையான உடற்பயிற்சி செய்தல்

உடல் உழைப்பே ஒருவகையான உடற்பயிற்சிதான். இருப்பினும், மனத்தை இயல்பாக இயங்க விடுவது ஒன்று; அதை நாம் சில நிலைகளில் இயக்க விரும்புவது ஒன்று. நாம் செய்யும் உழைப்பு, மனத்தை இயல்பாக இயங்க விடுவதைப் போன்றது. நாம் மனத்தைச் சில நிலைகளில் பயிற்றுவிப்பதைப் போன்றதே, உடலைச் சில நிலைகளில் பயிற்சியால் வளர்தெடுப்பதும், தகுதி பெற வைப்பதும்.

குறிப்பிட்ட உழைப்பால், உடல் ஒரே தன்மையில்தான் இயங்கிக் கொண்டிருக்க முடியும். ஒருவர் நெசவுத் தறியில் பணி செய்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அதால் குறிப்பிட்ட சில செயல் நிலைகளில் தாம் அவர் தம் உடலை இயங்க வைக்க முடியும். அதேபோல் தையல் பொறியில் பணியாற்றுபவரின், இயக்கம் எப்பொழுதும் ஒரே படியாகத் தான் இருக்கும். எழுத்தாளர்களுக்கோ, வலக்கையும், கண்கள் மட்டுமே இயங்க முடியும். பிற உறுப்புகளெல்லாம் இயங்காமல் இருப்பின் காலப்போக்கில் அவை தம் வலிமையில் கொஞ்சம் கொஞ்சமாகக் குறையும் அன்றோ? அதற்காகத்தான் இதுபோலும் ஒரேவகைச் செயலைச் செய்பவர்கள், நாளுக்குச் சிறிது நேரமாகிலும் எளிய உடற்பயிற்சிகளால், தங்களின் பிற உறுப்புகளையும் இயக்கி, அவற்றையும் நன்னிலையில் வைத்துக் கொள்ளுதல் வேண்டும்.

மேலும் வலிமையான செயல்களில் ஈடுபடுபவர்களுக்கே வலிமையான உடல் அமையும். உடலை நாம் எந்தச் செயலில் பழக்குகிறோமே அந்தச் செயலுக்குத் தக்கபடி தன்னை வடிவமைத்துக் கொள்கிறது. நோஞ்சான் உடலை உடைய சிலர், கொஞ்ச காலத்துக்குக் கடின உடலுழைப்புள்ள வினையைச் செய்து வருவார்களானால், அவ்வுழைப்புக் கேற்றவாறு, உடலும் வலிமைபெற்று விடுகிறது. உடல் இயக்கமற்ற பணிகளுக்கு உடல் வலிமை தேவையில்லாமல் போவதால், உடல் வலிமை குன்றுகிறது. இந்தப் பொது அறிவை நாம் உணர்ந்து கொண்டு, அதற்கேற்றவாறு நம் உடலை இயக்கக் கற்றுக் கொள்ளுதல் மேலும் மேலும் ஒரு செயலைச் செய்கின்ற வகையில் தம் உடலை வலுப்படுத்திக் கொள்ள உதவும்.

எழுத்துப்பணி போலும் மென்மையான, அறிவுழைப் புள்ள