பக்கம்:செயலும் செயல்திறனும்.pdf/16

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14

செயலும் செயல் திறனும்திருக்குறளின் மீதும் திருவள்ளுவர் மீதும் மீமதிப்பும் பெருவணக்கவுணர்வும் நிறைந்த நெஞ்சத்தைத் தாம் பெற்றிருப்பதை ஐயா அவர்கள் இந்நூலின் பல்வேறிடங்களில் பதித்துள்ளார்கள்.

திருக்குறளை உலகநெறி நூல் : புகழுரை , திருவள்ளுவர் திருவாய்மொழி: மெய்யுரை பொய்யாமறை ; தெளிவுரை பொன்னுரை: வாயுரை, திருவள்ளுவம் , வாய்மையுரை ; குறளுரை : அறிவுமொழி: குறள்மொழி; வாய்மைமொழி பொய்யாமொழி என்றவாறு பதினைந்து வகைகளிலும்

திருவள்ளுவரை - பொய்யாமொழிப் புலவர்; திருவள்ளுவர் பெருமான்: திருவள்ளுவப் பேராசான்; குறளார்; திருவள்ளுவப் பெருந்தகை, திருவள்ளுவப் பெரியார்: பேரறிஞர்; பொய்யாமொழிப் புலவர்; குறள் பெருமான் ; பேரறிஞர் திருவள்ளுவர் ; திருக்குறள் பயந்த செம்மலார்; குறளாசான்; மெய்யுணர்வாசான்; மெய்ந்நூலறிவர்; திருக்குறள் ஐயன்; திருக்குறள் ஆசான்; ஆசான்; மெய்ப்பொருளாசிரியர் என்றவாறு பத்தொன்பது வகைகளிலும் உள்ளமெல்லாம் நிறைவு ததும்பும் பற்றுணர்வோடு இந்நூலாசிரியர் நூலில் பதித்துள்ளார்.

இவ்வாறு வேறெந்நூலினும் இவ்வளவு வேறுபட்ட வகைபாடுகளில் திருக்குறளோ திருவள்ளுவரோ சுட்டப்பெற்றிருப்பதாகத் தெரியவில்லை.

முந்நூற்றுக்கும் மேற்பட்ட திருக்குறள் மேற்கோள்களை முறையுற்ற விளக்கங்களோடு ஆங்காங்கே தெளிவாக நிறுத்தி வைத்துள்ளார்.

செயல் என்பது பற்றி ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரேயே இத்தமிழ்ப்புலத்தில் எத்தகு நிலையளவுக்கு அஃகியகன்ற நுண்மாண் துழைபுலம் தழைத்திருந்தது என்பதை இக்கட்டுரைத் தொகுப்புள் ஊடாடும் திருக்குறள் மேற்கோள்களே வெள்ளிடை மலையென விளங்கிச் சான்று நாட்டுகின்றன.

சிறப்புத் தலைப்புக் கொண்ட அதிகாரங்களின் கீழ் படிந்துள்ள குறள்களினுள்ளும், வினை செயல் தொடர்பான நுட்பச் சிறப்புச் செய்திகளிருப்பவற்றை நுணித்துப் பார்த்துப் பாகுபடுத்திக் காட்டி விளக்கங்களினூடேயே முறையுற அவற்றைப் பிணைத்து நிலைநாட்டி, சொல்லவந்த கருத்துகளுக்கு ஊற்றமும் உரமும் ஊட்டமும் ஊட்டி நிற்கும் தனிப்பெருந்திற நிலைகளின் பதிவுகளை, நூலின் ஒட்டத்திடையில் பல இடங்களில் பார்க்கவியல்கின்றது.

தம் வாழ்வில் தாமே பட்டறிந்து தெளிந்த பல்வேறு உண்மைகளின் சார நிலைகளையும் இலைமறைகாயாகக் கருத்துகளோடு கருத்துகளாக இந்நூலாசிரியர் மொழிந்து நிற்கும் அழகே தனி!