பக்கம்:செயலும் செயல்திறனும்.pdf/202

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.

200

செயலும் செயல் திறனும்இயற்கை உணர்வாக உள்ளது. அவ்வாறு விரும்புவது பிழையன்று என்பதுடன், தம் திறமையும் ஆர்வமும் அவ்வாறு ஈடுபட இடங்கொடுப்பின், அது சிறப்பாகவும் கருதப்பெறும்.

பெரும்பாலும் அறிவுடையவர்கள், தம் ஆற்றலுக்கும், ஆர்வத்திற்கும், இயல்கின்ற தன்மைக்கு ஏற்ப, ஒன்றுக்கு மேற்பட்ட துறைகளில் சிறந்து விளங்குவது இயலுவதாகவே உள்ளது. தொழில் திறமும் கலைத்திறமும் பல்வேறு வகைப்பட்டனவாக இருப்பினும், பெரும்பாலான தொழில்களும் கலைகளும் ஒன்றுக்கொன்று தொடர்புடையனவே. எனவே, ஒன்றில் ஈடுபட்டால் அதற்கு இணையான அல்லது தொடர்பான தொழிலிலோ கலையிலோ ஈடுபடுவது பிழையாகாது; சிறப்பே ஆகும். ஒன்றில் இருக்கும் பொதுவான அறிவுத் திறனைச் சிறப்பான அறிவுத் திறனாக வளர்த்துக் கொள்வதென்பது அத்துணைக் கடினமானதன்று. சிறிது முயற்சியிலேயே பெரிதும் பயன் தருவது ஆகும். எடுத்துக்காட்டாக நூற்பும் (Spinning) , நெய்வும் (Weaving) அவை தொடர்பான அனைத்துத் தொழில்களும் சாயத்தோய்ப்பு (Dyeing), உருஅச்சடிப்பு (Disign Printing) முதலியவை இணைவானவையும் இணக்கமானவையுமான தொழில்களே. அதேபோல், ஓவியமும், சிற்பமும் இணைவுக் கலைகளே. ஒளிப்படப்பிடிப்பும் (Photography), படக்கட்டை (Block Making) செய்வதும் இணைவானவையே. இவைபோல் உள்ள தொழில்களும் கலைகளும், கலைத் தொழில்களும் அறிவியல் தொழில்களும் நிறைய உள.

5. துணைத் தொழிலானால் இணைத் தொழில்

இவ்வடிப்படை உண்மைகளை உணர்கின்ற அளவில் நாம் தெரிந்து கொள்ள வேண்டுவது என்னெனில், ஒருவர் ஒரு துறையில் திறமையுற்று, அது தொடர்பான செயலில் ஈடுபட்டு ஓரளவு வெற்றியுடன் நல்ல வருவாயை உடையவராக இருந்து, அவர் மேலும் வருவாயை ஈட்ட விரும்பி, வேறு ஏதாகிலும் துணைத் தொழிலில் ஈடுபடக் கருதினால், அவர் ஏற்கனவே செய்து கொண்டிருக்கும் தொழிலுக்கு அல்லது செயலுக்குத் தொடர்புடைய அல்லது இணைவுடைய தொழிலில் அல்லது செயலிலேயே ஈடுபடுவது நல்லது என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்பதுதான்.

தனிநிலையில் ஈடுபட விரும்புவார்க்கும் இந்த முறைதான், பொது நிலையில் ஈடுபட விரும்புவார்க்கும் இந்த முறைதான் உகந்தது என்று நாம் அறிதல் வேண்டும். பொது நிலையில் அஃதாவது பொதுத் தொண்டில் ஈடுபட விரும்புவார் ஒருவர் தம் துணை வருவாயைப்