பக்கம்:செயலும் செயல்திறனும்.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

239



விண்ணில் ஏவும் செயற்கைக் கோள் போன்றவற்றிற்கு இவ்வனைத்தும் அறிவுக் கூறுகளும் இயைந்து இயங்குதல் எத்துணை இன்றியமையாதது என்பதை எண்ணிப் பாருங்கள்.

அவ்வாறு அனைத்துக் கூறுகளும் இணைந்து இயங்கிய ஒரு செயல் திறன் நாம் சிறிதே ஆழமாகக் காட்டுவதன் வழியாக, ஒரு செயல் வெற்றியுற முழுமையும் எத்தனை வகையான அறிவு முயற்சிகள் தேவை என்பதையும், அவை எவ்வெவ்வாறு ஒன்றினோடொன்று இயைந்து, இயங்க வேண்டும் என்பதையும் பார்ப்போம்.

3. திறன்கள் இயைந்து இயங்க வேண்டும்

அமெரிக்காவில், நியூயார்க்குத் துறைமுகத்திற்கு வரும் வெளிநாட்டினரை வரவேற்குமாறு, அதன் அருகிலுள்ள பெட்லோ தீவில் உள்ள உரிமைச் சிலை செய்யப்பெற்ற செயல்திறத்தை நாம் கொஞ்சம் நினைவு கூர்தல் வேண்டும்.

பேரழகும், பெருமிதமும் பொழிந்து தோன்றும் ஒர் உரிமைப் பெண் போலும் வடிவமைந்த அந்த உரிமைச் சிலை (Liberty Statue) செய்வதிலும், அதை அங்கு கொண்டு வந்து நிறுவுவதிலும்தான் எத்துணை அறிவியல் திறம், மாந்த அறிவு, உடலுழைப்பு, தொழில்நுட்பம், கலைத்திறம், பொறியியல், வேதியல், கணக்கியல் முதலிய ஆற்றல்கள் செயல்பட்டிருக்கின்றன என்பதை எண்ணுகையில் மாந்தமனம் வியப்பிலும் வியப்பு எய்திக் களிக்கிறது.

அந்தச் சிலையை உருவாக்குவதில்தான் எத்தனைப் பேரறிஞர்கள், செயலறிவுடையவர்கள், பொறியியல் வல்லுநர்கள், கலைஞர்கள், தொழிலாற்றல் உடையவர்கள், தொழில் நுட்பம் சான்றவர்கள், அறிவியலாளர்கள் போன்றவர்கள் இரவும் பகலும் ஏறத்தாழ ஒன்பதாண்டுகள் உழைக்க வேண்டியிருந்தது. அதில் தாம் எத்தனைச் சிக்கல்கள்; இடர்ப்பாடுகள்; துன்பங்கள் துயரங்கள் அப்பப்பா!

ஒரே ஒரு சிலையை உருவாக்குவதில் இத்தனைச் சிக்கல்களா? இத்தனை நுட்பங்களா? இத்தனை அறிவாற்றல்களா? பல்வேறுபட்ட அத்தனை அறிவாற்றல்களும் ஒருங்கிணைந்து, ஒன்றுக்கொன்று மாறுபடாமலும் வேறுபடாமலும் இயங்க வேண்டியுள்ளனவே. இத்தனைக்கும் உயிரற்ற சிலை அது. உடலியக்க உள்ளுறுப்புகள் அனைத்தும் அற்ற உள்ளே ஒன்றுமில்லாமல், புறத்தோலாக மட்டும் ஒரு மாழைத்தகடு போர்த்தப் பெற்ற சிலைக்கே இத்தனை அறிவுத் திறன்கள் தேவைப்படுமானால், ஓர் உயிருள்ள உடலை - அவ்வாறு