பக்கம்:செயலும் செயல்திறனும்.pdf/28

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.

26

செயலும் செயல் திறனும்2. எண்ணித் தொடங்குதல்

எனவே, ஒரு செயலைச் செய்யத் தொடங்குவதற்கு முன் நாம் அதைப் பற்றி நன்கு எண்ணி முடிவு செய்தல் வேண்டும். நாம் இந்த வினையைச் செய்ய இவ்விவ் வகையில் தகுதியுடையவர்; அல்லது இன்னின்ன அடிப்படையில் இந்த வினை நமக்குத் தகுதியுடையது; இதனை மேற்கொண்டால் நாம் இன்ன வகையில் அதனை வெற்றியுடன் நடத்துவோம்; நம் வாழ்க்கையும் இன்ன வகையில் பயனுடையதாகும் என்றெல்லாம் ஒரு வினையைப் பற்றி நாம் தீர எண்ணி அதனை மேற்கொள்ளுதல் வேண்டும். இவ்வகையிலன்றி நாம் ஏதோ ஒரு வினையில் ஈடுபடுதல் வேண்டும் என்றபடி, நமக்குப் பொருந்தாத வினைகளில் போய் ஈடுபட்டுத் தோல்வியையும் இழுக்கையும் தேடிக் கொள்ளுதல் கூடாது.

இனி, எண்ணத்தால் நாம் ஒரு வினையைத் தேர்ந்து அதில் ஈடுபடுவதென்றாலும், அவ்வினையை முழுமையாக நாம் செய்யத் தொடங்கும் பொழுதும், அதைச் செய்து கொண்டிருக்கும்பொழுதும், நமக்கும் அந்த வினைக்கும் பல வகையான பொருத்தமின்மைகள் தோன்றும் ஒரு செயலை எண்ண அளவில் நாம் விரும்பினாலும், அதில் ஈடுபட ஆர்வம் கொண்டிருந்தாலும், செயலளவில் நமக்கு அது விருப்பத்தையோ ஆர்வத்தையோ குறைப்பதாக இருக்கலாம். அப்பொழுது, இதில் நாம் ஏன் இவ்வளவு விரைவுப்பட்டு ஈடுபட்டு விட்டோம் என்று வருந்த வேண்டி வரும் அப்பொழுது நாம் ஒருவரிடமும் சொல்லிக் கொள்ளாமல் அவ்வேலையைக் கைவிட்டு விலக வேண்டியிருக்கும். இதைத்தான் திருக்குறள்,

எனைவகையான் தேறியக் கண்ணும் வினைவகையான்
வேறாகும் மாந்தர் பலர் (514)

என்று குறிப்பிடுகின்றது. "எத்தனை வகையாக எண்ணிப் பார்த்து. ஒரு வினையை நமக்குப் பொருத்தமுடையது என்று தேர்ந்து அதிலே சிலர் ஈடுபட்டாலும், வினை செய்யத் தொடங்கிய பின்போ, செய்து கொண்டிருக்கும் பொழுதோ, அத்தேர்வு நிலைக்கு மாறாகப் போய், அந்த வினை நிலைகளில் நெகிழ்ச்சி ஏற்பட்டுவிடுபவர்களும், அதைக் கைவிட்டு விலகி விடுபவர்களும் இவ்வுலகில் பலராவர்” என்பது இதன் கருத்து. எனவே, வினை தொடங்கியபின், அல்லது ஈடுபட்ட பின் மனவேறுபாடோ, வினைவேறு பாடோ அடைவது உலக வழக்கமாகலின், அதற்கு முன்பே நன்கு ஆராய்ந்து எண்ணி ஒரு வினையில் ஈடுபடுவது மிகவும் இன்றியமையாததாம் என்க.

இனி இவ்வாறு ஒரு வினையைப் பலவாறானும் எண்ணி, இவ்வினையை நாம் கட்டாயம் செய்யலாம். இது தான் நமக்குத் தக்கது. இதில்தான் நம் வாழ்க்கை முழுமைபெறும், உயிர் நிறைவு பெறும், என்று தேர்ந்து கொண்ட பின், அதில் முழுமையாக நம்மை ஈடுபடுத்திக்