பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



2. சில முன்னோடிகள்


மொழியில் மறுமலர்ச்சி ஏற்படுத்தவும், இலக்கியத்தில் புதுமையும் வளமும் சேர்க்கவும் விரும்பும் படைப்பாளிகள், தங்கள் சோதனை முயற்சிகளை எல்லாம் பிரசுரிப்பதற்குத் தங்களுக்கென்று தனிப் பத்திரிகை தேவை என்று கருதுவது இயல்பாக இருந்து வருகிறது. வசதி உள்ளவர்கள் ஏதாவதொரு காலகட்டத்தில் சொந்தமாக ஒரு பத்திரிகையைத் தொடங்கி நடத்துவதும், அதுவே பெரும் சோதனையாக அமைந்து விடுவதும் நியதியாக அமைந்துள்ளது.

சொல்லில், பொருளில், சொல்லும் முறையில் புதுமைகள் சேர்ப்பதில் ஆர்வம் கொண்டிருந்த மகாகவி சுப்பிரமணிய பாரதியார் ‘இந்தியா‘, ‘சக்கிரவர்த்தினி‘ என்ற பத்திரிகைகளை நடத்தினார்.

தமிழ் நாவலுக்கு முதன் முதலாக இலக்கிய அந்தஸ்து அளித்த படைப்பாளி எனும் சிறப்பைப் பெற்றுள்ளவர் பி. ஆர். ராஜமையர், ‘கமலாம்பாள் சரித்திரம்‘ என்ற நாவலை எழுதிய அவர் ‘விவேக சிந்தாமணி‘ என்றொரு பத்திரிகையை நடத்தியிருக்கிறார். அதில் அவர் தொடர்கதை, கட்டுரைகள் முதலியன எழுதினார்.

ராஜமையர் காலத்திலேயே வாழ்ந்து, ‘பத்மாவதி சரித்திரம்‘ நாவலை எழுதிப் புகழ்பெற்ற பெருங்குளம் ஆ. மாதவையா சமூக சீர்திருத்த நோக்குடன் வேறு பல நாவல்களும் ‘குசிகர் குட்டிக் கதை‘ களும் எழுதினார். தமது எழுத்துக்களைப் பிரசுரிப்பதற்காக அவர் ‘பஞ்சாமிர்தம்‘ என்ற பத்திரிகையை நடத்தினார். இது 1924-ல் பிரசுரமாயிற்று என்று தெரிகிறது.

தமிழ்ச் சிறுகதைக்கு முக்கிய வடிவம் தந்த முதல்வரும், தமிழ் இலக்கிய விமர்சனத்தின் முன்னோடியுமான வ. வே. சு. ஐயர் உலக இலக்கியங்களில் நல்ல தேர்ச்சி பெற்றிருந்தார். உலக இலக்கியங்களைத் தமிழ்நாட்டினருக்கு அறிமுகப்படுத்துவதற்காகவும், தமிழிலும் மேல்நாட்டு இலக்கியங்களுக்கு இணையாகக் கூடிய படைப்புக்களை ஆக்க வேண்டும் என்ற ஆசையோடும் அவர் ‘பால பாரதி‘ என்ற பத்திரிகையைத் தொடங்கி நடத்தினார்.

வ. வே. சுப்பிரமணிய ஐயர் நாட்டின் விடுதலைக்குப் பாடுபடுவதைத்