பக்கம்:தமிழ்ச் சொல்லாக்கம்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

8





முன்னோரைப் போற்றுவார்; முன்னேற்றம் தரும் அரியவற்றையும் போற்றுவார். எடுத்தெறிந்து பேசும் துணிச்சலும் கொண்டவர். சாதியைக் கேட்டுக் குடைந்தெடுக்கும் சுரதா சாதிப்பித்து அற்றவர்.

முரண்பாடுகளின் மொத்த உருவாய்ச் சொல்லாடும் சுரதா அவர்கள், முழுமையான பெருங்கவிஞர் என்பதில் யாருக்கும் கருத்து மாறுபாடு இல்லை. இதுவே இவரது வெற்றி வாழ்வு எனத்தக்கது.

மறைந்த சொல்லாட்சிகளை எளிதாய் அமைத்து அவற்றுக்கு மறுபிறப்பு தருவதில் வல்லவர். புதிய புதிய உத்திகளில் உவமைகளைத் தந்த சிறப்பால் உவமைக்கவிஞர் எனும் புகழைப் பெற்றார். உரையாடும் பொழுதில் புதிய புதிய செய்திகளைக் கொட்டுவார். மேலும் தம் பெயரையும் புதிதாய் அமைத்துக் கொண்டவர் சுரதா. அவ்வாறே பல புதுமைகளையும் செய்து வருகிறார்.

சிலர் முதலில் வெறுப்பர்; சிலர் வீண் வேலை என்பர். ஆனாலும் சுரதா தளராமல் செய்துகாட்டுவார் தொடர்ந்தும் செய்கிறார்.

அறிஞர், கவிஞர், கலைஞர் போன்ற பலதுறை சார்ந்த சாதனையாளர்களை எந்தவித வேறுபாடும் கருதாமல் போற்றச் செய்வது, அடையாளங் காட்டுவது, நினைவுபடுத்துவது, அவர்கள் பிறந்த ஊரில், வாழுமிடத்தில் மண் எடுத்து வைப்பது இவரது பெரு முயற்சிகளாகும்.

விமானக் கவியரங்கம், கப்பல் கவியரங்கம், படகுக் கவியரங்கம், சிலைக் கவியரங்கம், குதிரை மீது கவியரங்கம், வண்டிக் கவியரங்கம், குன்றுக் கவியரங்கம் என்பன இவரது தனிக் கண்டுபிடிப்புகள்; சாதனைகள், வீடுகளில் கருத்துக் கல்வெட்டுகள் பதிக்கச் செய்ததும் புதிய வரலாறே.

பிறந்தநாள் பட்டியல், திருமண நாள் பட்டியல் அச்சிடச் செய்து பரப்பி வருவதும் புதுமைகளல்லவா!

நல்லோரையும் சிறந்தோரையும் பாடும் சுரதா, நடிகர் - நடிகையையும், பல்வேறு தரப்பினரையும் பாடுவார். பொரி, கடலை வறுப்போரையும் மறவாது போற்றுவார். தொழில் வேறுபாடுகளைக் கருதாமல் செய்திகளைப் பாடுவது இவர் வழி.