பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/167

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஊக்கம் உடைமை

157ஊக்கம் உடையவர் தாம் எண்ணிய உயர்வுக்கு அழிவு வந்த போதும், உள்ளத் தளர்ச்சியடையாமல், தம் பெருமையை நிலை நாட்டுவர்.

உரவோர்-உள்ள வலிமையுடையோர், ஊக்கம் உடையோர்; பாடூன்றும்-பெருமையை நிலை நிறுத்தும்; களிறு-ஆண் யானை. 597

8.உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்து
வள்ளியம் என்னும் செருக்கு.

இவ்வுலகத்தாருள் யாம் வண்மையுடையோம் என்று எண்ணி மகிழும் பெருமிதத்தினை ஊக்கம் இல்லாதவர் அடைய மாட்டார்.

வள்ளியம்-வண்மையுடையோம்; வண்மை-ஈகைக் குணம்; ;செருக்கு-பெருமிதம். 598

9.பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை
வெரூஉம் புலிதாக் குறின்.

யானையானது பருத்த உடம்பினையுடையது; அன்றியும், கூர்மையான கொம்புகளையும் உடையது. அவ்விதம் இருந்தும் (ஊக்க மிகுதியினையுடைய) புலி தாக்கினால், அதற்கு யானை அஞ்சும்.

மிக்க உடல் வலியும், ஆயுதங்களின் சிறப்பும் உடையராயினும் ஊக்கம் இலராயின், அஞ்சுவர் என்பது பொருள்.

பரியது-பருத்த உடம்பினையுடையது; கோட்டது-கொம்பினை யுடையது; வெரூஉம்-அஞ்சும். 599

10.உரமொருவற்கு உள்ள வெறுக்கைஅஃ தில்லார்
மரமக்கள் ஆதலே வேறு.

ஒருவனுக்கு வலிமையாவது ஊக்கமிகுதியே ஆகும்; அவ்வூக்கம் இல்லாதவர் மரங்களுக்குச் சமமே ஆவர்; அவருக்கும் மரங்கட்கும் உள்ள வேறுபாடு உருவ வேறுபாடே ஆகும்; வேறு வேறுபாடு இல்லை .

உரம்-வலிமை; உள்ள வெறுக்கை-ஊக்க மிகுதி; வெறுக்கை-மிகுதி; மக்கள் ஆதலே வேறு-மரங்களுக்கும் இந்த மனித மரங்களுக்கும் உள்ள வேறுபாடு உருவ வேறுபாடே அன்றிப் பிறிது இல்லை.

நல்ல அறிவும், தொழில் முயற்சியும் இல்லாமையால் இவர் மரங்கட்குச் சமம் ஆவர் என்பது பொருள். 600