பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மன்னரைச் சேர்ந்தொழுகல்

183


 விடுமாற்றம்-ஓர் அரசன் பிறிதோர் அரசனுக்குச் சொல்லி அனுப்பும் சொற்கள், அஃதாவது துாதுரை; வடு-குற்றம்; வாய் சோர்தல், அச்சத்தினாலோ பிற காரணங்களினாலோ வாய் தவறித் தகுதியற்ற சொற்களைச் சொல்லுதல்; வன்கண்-உள்ள உறுதி. 689


10.இறுதி பயப்பினும் எஞ்சாது இறைவற்கு

உறுதி பயப்பதாம் தூது.

தன் அரசன் மாற்றரசனுக்குச் சொல்லி விடுக்கும் வார்த்தை தன் உயிருக்கே அழிவு தருவதாய் இருப்பினும், தான் சொல்ல வேண்டுவனவற்றில் சிறிதும் குறைக்காது தன் அரசன் சொல்லியவாறே சொல்லித் தன் அரசனுக்கு நன்மையைத் தருபவனே தூதனாவான். 690

70. மன்னரைச் சேர்ந்தொழுகல்



1.அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க

இகல்வேந்தர் சேர்ந்தொழுகு வார்.

என்றும் போர்த்தொழிலிலேயே ஈடுபாடுடைய ம்ன்னரைச் சார்ந்து ஒழுகும் அமைச்சர், தூதர் முதலியவர்கள் அந்த மன்னரை மிகவும் நீங்கியிராமலும், மிகவும் நெருங்கியிராமலும் நெருப்பினிடமிருந்து குளிர் காய்கின்றவர்கள் போல இருத்தல் வேண்டும்.

இகல்வேந்தர் என்பதற்கு அடிக்கடி மாறுபடுதலையுடைய அரசர் என்றும் பொருள் கொள்ளலாம். 691

2.மன்னர் விழைப விழையாமை மன்னரான்

மன்னிய ஆக்கம் தரும்.

அரசரால் விரும்பப்படுபவைகளை அவரைச் சார்ந்தவர்களும் விரும்பாதிருத்தல் வேண்டும்; அவ்வாறு இருத்தல் நிலையான செல்வத்தை அவர்கட்குப் பெற்றுத் தரும்.

விழைக-விரும்பப்படுபவைகள்; அவை அரசரால் நுகரப்படும் பொருள்கள், அலங்காரங்கள் முதலியவை. 692