பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மன்னரைச் சேர்ந்தொழுகல்

185



காலத்தையும் எண்ணிப் பார்த்து அறிந்து, வெறுப்பு இல்லாதனவாயும் அவனுக்குத் தேவைப்படுவனவாயும் உள்ள செய்திகளை அவன் விரும்பும் வகையில் சொல்லுதல் வேண்டும். 696

7.வேட்பன சொல்லி வினையில எஞ்ஞான்றும்
கேட்பினும் சொல்லா விடல்.

மன்னனைச் சார்ந்தவர்கள் அவன் விருப்பத்தோடு கேட்கக் கூடிய பயனுள்ள செய்திகளை அவன் தம்மைப் பார்த்துச் 'சொல்லுக’ எனக் கேளாவிடினும் சொல்லுதல் வேண்டும். பயனற்ற செய்திகளை அரசன் கேட்டாலும், எந்தக் காலத்தும் சொல்லாதிருத்தல் வேண்டும். 697

8.இளையர் இனமுறையர் என்றிகழார் நின்ற
ஒளியோ டொழுகப் படும்.

அரசரை, 'இவர் எம்மினும் இளையர்; இன்ன முறையினை யுடையவர்’ என்று எண்ணி இகழாமல், அவர் தம் அரச பதவியின் பெருமைக்கு ஏற்ப மன்னரைச் சார்ந்தோர் ஒழுகுதல் வேண்டும்.

இளையர்-வயது, உடலமைப்பு முதலியவைகளுள் இளையர்; இனமுறையர்-இன்ன முறையினையுடையவர் (அஃதாவது மகன் முறை, பெயரன் முறை, மைத்துனன் முறை முதலிய முறை); ஒளி-ஆட்சியின் சிறப்பு. 698

9.கொளப்பட்டேம் என்றெண்ணிக் கொள்ளாத செய்யார்
துளக்கற்ற காட்சி யவர்.

கலக்கம் அற்ற திண்ணிய அறிவினையுடையவர், "யாம் அரசனால் விரும்பி ஏற்றுக் கொள்ளப் பட்டோம்" என்று எண்ணி, விரும்பாதனவற்றைச் செய்ய மாட்டார்.

கொளப்பட்டேம்-(அரசனால் விரும்பி) ஏற்றுக் கொள்ளப் பட்டோம்; கொள்ளாத-அரசனால் விரும்பி ஏற்றுக் கொள்ளப் படாத செயல்கள்; துளக்கம்-உள்ளக் கலக்கம்; காட்சி-அறிவு. 699


தி.-13