பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

196

திருக்குறள்



பொறை-சுமை; இறைவன்-அரசன்: இறை-வரி; ஒருங்கு- முழுவதும்; நேர்வது-தருவது.

பொறையொருங்கு தாங்குதலாவது ஏனைய நாடுகளில் உள்ள குடிகள் போர் காரணமாகவோ, கொடிய பஞ்சங் காரணமாகவோ திரண்டு தன் நாட்டுக்கு வந்தால், தாங்கிக் கொள்ளுதல். 733

4. உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்

சேரா தியல்வது நாடு.

மிக்க பசியும், நீங்காத நோயும், அயல் நாடுகளிலிருந்து வந்து தாக்கி அழிவு செய்யத் தக்க பகையும் தன்னிடம் சேராமல் இனிது நடப்பதே நாடாகும். 734

5.பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும்

கொல்குறும்பும் இல்லது நாடு.

மாறுபட்ட கொள்கைகளையுடைய பல் வகையான கூட்டங்களும், உடனிருந்தே பாழ்படுத்தும் உட்பகையும், அரசனைத் துன்புறுத்தும் கொலைத் தொழில் பொருந்திய குறும்பரும் இல்லாததே நாடாகும். 735

6.கேடறியாக் கெட்ட இடத்தும் வளங்குன்றா

நாடென்ப நாட்டின் தலை.

பகைவரால் கெடுதி அடையாததாய், அங்ஙனம், கெட்டாலும், செழுமையில் குன்றாததாய் உள்ள நாடே எல்லா நாட்டிலும் சிறந்த நாடு என்று அறிஞர் கூறுவர். 736

7. இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்

வல்லரணும் நாட்டிற்கு உறுப்பு.

நிலத்தின் மேல் உள்ள நீர், நிலத்தின் கீழ் உள்ள ஊற்று நீர் ஆகிய இருவகை நீர் நிலைகளும் வாய்ப்பு உடைத்தாக விளங்கும் மலையும், அந்த மலையிலிருந்து பெருகி வரும் ஆற்று நீரும், வலிய கோட்டையும் நாட்டுக்குச் சிறந்த உறுப்புக்களாகும்.

இருபுனல்-பூமிக்கு மேலிருந்தும், அடியிலிருந்தும் கிடைக்கத் தக்க இருவகை நீர்; மழை நீர், ஊற்று நீர்