பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அரண்

197



என்றும் கூறலாம். வருபுனல்-ஆற்று நீர்; வல்லரண்-உறுதி வாய்ந்த கோட்டை; உறுப்பு-அவயவம். 737

8.பிணிஇன்மை செல்வம் விளைவின்பம் ஏமம்
அணிஎன்ப நாட்டிற்கிவ் வைந்து.

நோயில்லாதிருத்தல், செல்வமுடைமை, விளைவுடைமை, இன்ப வாழ்வு, நல்ல பாதுகாப்பு ஆகிய இவை ஐந்தும் நாட்டிற்கு அழகு என்று கூறுவர். 738

9.நாடென்ப நாடா வளத்தன நாடல்ல
நாட வளம்தரும் நாடு.

தேடி வருந்தாமல் எளிதில் கிடைக்கத் தக்க செல்வத்தை யுடைய நாடுகளே சிறந்த நாடுகள் என்று நூலோர் சொல்லுவர்: தேடி முயன்றே பொருள் பெறத் தக்க நாடுகள் சிறந்த நாடுகள் ஆக மாட்டா.

நாடா வளம்-தேடி வருந்தாமல் எளிதில் கிடைக்கத் தக்க செல்வம்; நாட-தேட 739

10.ஆங்கமை வெய்தியக் கண்ணும் பயமின்றே
வேந்தமைவு இல்லாத நாடு.

மேற்சொன்ன வளங்களெல்லாம் உடையதாக இருந்தாலும், வேந்தனோடு ஒற்றுமையாக வாழ இயலாத குடிகளையுடைய நாடு, பயன் சிறிதும் இல்லாத நாடே ஆகும்.

வேந்து அமைவு என்பதற்குக் குடிகள் அரசனிடம் அன்புடையராதலும், அரசன் குடிகளிடம் அருளுடையனாதலும் ஆகிய இரண்டும் அடங்கும் என்று பரிமேலழகர் விளக்கம் தருவர். 740

75. அரண்


1.ஆற்று பவர்க்கும் அரண்பொருள் அஞ்சித்தன்
போற்று பவர்க்கும் பொருள்.

பிறர் மேல் படையெடுத்துச் செல்வார்க்கும் அரண் சிறந்தது; தம் மேல் படையெடுத்து வருவார்க்கு அஞ்சித் தம்மைப் பாதுகாத்துக் கொள்பவர்க்கும் அரண் சிறந்தது.