பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

232

திருக்குறள்



தானும் வலிமையில்லாதவனாகவும் இருப்பானேயானால், அவன் பகைவனுடைய வலியை எவ்வாறு தொலைக்க முடியும்; (சிறிதும் இயலாது என்பது கருத்து.)

ஆன்ற அமைந்த-வலிமை பொருந்திய துவ்வான்-வலிமை யற்றவன்; என் பரியும்-எங்வனம் தொலைக்க முடியும்? ஏதிலான்-பகைவன் துப்பு-வலிமை. 862

3.அஞ்சும் அறியான் அமைவிலன் ஈகலான்
தஞ்சம் எளியன் பகைக்கு.

அஞ்ச வேண்டாதவைக்கு அஞ்சுவான்; அறிய வேண்டியவற்றை அறியான்; பிறரோடு இணங்கி நடக்க மாட்டான்: பிறருக்கு ஒன்றும் ஈய மாட்டான: இத்தகைய குணமுடைய ஒருவன் பகைவர்க்கு மிகவும் எளியன்.

அமைவு-அமைதியான தன்மை, இணங்கி நடக்கும் குணம்; தஞ்சம் எளியன்-மிக எளியன். 863

4.நீங்கான் வெகுளி நிறையிலன் எஞ்ஞான்றும்
யாங்கணும் யார்க்கும் எளிது.

சினம் நீங்காதவனாய்த் தன் மனத்தை அடக்கி ஆளும் தன்மையில்லாதவனாய் ஒருவன் இருந்தால், அவன் எக்காலத்தும் எவ்விடத்தும் யாவர்க்கும் எளியன்.

நிறை-உள்ளத்தை அடக்கி ஆளும் தன்மை. 864

5.வழிநோக்கான் வாய்ப்பன செய்யான் பழிநோக்கான்
பண்பிலன் பற்றார்க்கு இனிது.

காரியங்களைச் செய்யத் தக்க நல்ல வழிகளை ஆராய்ந்து பாரான்; பொருத்தமானவற்றைச் செய்யான்; தனக்கு வரத் தக்க பழியையும் எண்ணிப் பாரான்: நல்ல குணமும் இல்லான்; இத்தகைய ஒருவன் பகைவர்க்கு எளியவனாவான்.

வழிநோக்குதல்-தக்க நல்ல வழிகளை ஆராய்ந்து பார்த்தல்; வாய்ப்பன செய்தல்-பொருத்தமான செயல்களைச் செய்தல்; பண்பு-நற்குணம்; பற்றார்-பகைவர்; இனிது-இங்கே எளிமை என்னும் பொருளில் வந்தது. 865