பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சூது

253



சூதாட்டத்தில் ஒரு பொருளைப் பெற்ற ஆசையாலே மேலும் மேலும் பொருள் பெறலாம் என்று எண்ணிச் சூதாடி, நூறு மடங்குப் பொருளை இழந்து வருந்தும் சூதாட்டக்காரருக்கும் அவர் நலம் பெற்று வாழும் ஒரு வழி உண்டாகுமோ? உண்டாகாது.

சூதர்-சூதாடிகள்; கொல்-ஐயத்தைக் குறிக்க வந்த இடைச் சொல்; நன்று-நன்மை; ஆறு-வழி. 932

3.உருளாயம் ஓவாது கூறின் பொருளாயம்

போஒய்ப் புறமே படும்.

உருளுந் தன்மை வாய்ந்த சூதாடு கருவியை வைத்துக் கொண்டு ஒருவன் இடைவிடாது (பகடை பன்னிரண்டு, தாயம் என்பன போன்றவற்றைக்) கூறிச் சூதாடினால், பொருள் வருவாய் அவனை விட்டுத் தொலைந்து போய்ப் பிறனொருவனிடம் தங்கும்.

உருள் ஆயம்-உருளுந் தன்மை வாய்ந்த சூதாடு கருவி; ஓவாது-ஒழியாது; கூறுதல்-தனக்கு வேண்டும் எண்களை வாயால் சொல்லிக் கொண்டேயிருத்தல் ஆயம்-வருவாய்; புறமே படும்-பிறரிடம் சேரும். 933


4.சிறுமை பலசெய்து சீரழிக்கும் சூதின்

வறுமை தருவதொன்று இல்.

ஒருவனுக்குத் துன்பம் பலவற்றையும் செய்து, அவனுடைய புகழையும் கெடுக்கின்ற குதினைப் போல வறுமையைத் தருவது வேறொன்றும் இல்லை. 934

5.கவறும் கழகமும் கையும் தருக்கி

இவறியார் இல்லாகி யார்.

சூதாடு கருவியையும், அஃது ஆடும் இடத்தையும், ஆடும் கைத்திறனையும் மதித்துக் கைவிடாதவர் வறியராயினார்.

கவறு-சூதாடும் கருவி; கழகம்-சூதாடும் இடம்; கை-சூது ஆடும் கைத்திறமை; தருக்குதல்-மதித்தல்;. இவறுதல்- விடாது பற்றுதல், விரும்புதல்; இல்லாகியார்- வறியராயினார். 935