பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

254

திருக்குறள்



6.அகடாரார் அல்லல் உழப்பர் சூதுஎன்னும்
முகடியான் மூடப்பட் டார்.

சூது என்னும் மூதேவியால் மறைக்கப்பட்டவர் வயிறு நிறைய உண்ண மாட்டார்; மிக்க துன்பப்பட்டு வருந்துவர்.

அகடு-வயிறு; ஆர்தல்-உண்டல்; அல்லல்-துன்பம்; உழப்பர்- வருந்துவர்; முகடி-மூதேவி; மூடப்படுதல்-மறைக்கப்படுதல். 936

7.பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும்
கழகத்துக் காலை புகின்.

ஒருவனுடைய காலமானது சூதாடும் இடத்தில் கழியுமானால் அது தொன்று தொட்டு வந்த செல்வத்தையும், இயல்பான நற்குணத்தையும் கெடுக்கும்.

பழகிய செல்வம்-மூதாதையர் சேர்த்து வைத்த செல்வம், பழமை யாய் இருந்து வந்த செல்வம்; காலை-காலம், இளம் பருவம் என்றும் பொருள் கொள்வர். 937

8.பொருள்கெடுத்துப் பொய்மேற் கொளீஇ அருள்கெடுத்து
அல்லல் உழ்ப்பிக்கும் சூது.

சூதானது தன்னைப் பற்றினவனது பொருளைத் தொலைத்துப் பொய்யை மேற்கொள்ளச் செய்து, அவனது இரக்க குணத்தையும் கெடுத்துத் துன்பத்திலும் வருந்தச் செய்யும்.

மேற்கொளீஇ-மேற்கொள்ளச் செய்து, அருள்-கருணை; அல்லல் -துன்பம்; உழப்புதல்-வருந்தச் செய்தல். 938

9.உடைசெல்வம் ஊண்ஒளி கல்விஎன்று ஐந்தும்
அடையாவாம் ஆயம் கொளின்.

சூதாடுதலை ஒருவன் மேற்கொள்ளுவானானால் உடை, செல்வம், உணவு, புகழ், கல்வி என்னும் ஐந்தும் அவனைச் சேர மாட்டா.

ஊண்-உணவு; ஒளி-புகழ்; ஆயம்-சூதாடும் கருவி. 939