பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/47

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26


ஒருவர் என்னும் சொல் 'ஒரு' என்னும்பகுதியால் ஒருமையினையும் 'அர்' என்னும் விகுதியால் ஆண் பெண் இருவருக்குமுரிய உயர்திணைப் பன்மையினையும் உணர்த்தும் இயல்பினைப் பெற்றுள்ளமையால், அச்சொல் ஒருவன் ஒருத்தி என்னும் இருபாற்கு முரிய பொதுமையினைப் பெற்ற இயற்றமிழ்ச் சொல்லாகும் என்பது,

ஒருவர் என்னும் பெயர்நிலைக் கிளவி
இருபாற்கும் உரித்தே தெரியுங் காலை

என வரும் தொல்காப்பியச் சூத்திரத்தால் இனிது விளங்கும். ஒருவர் என்னும் இல்வியற் சொல் பொருளுணர்த்தும் திறத்தைத் தெளிய உணர்ந்த வள்ளலார்,

ஒன்றுமலார் இரண்டுமலார் ஒன்றிரண்டும் ஆனார்
உருவும் அலார் அருவும் அலார் உருஅருவும் ஆனார்
அன்றும் உளார் இன்றும் உளார் என்றுமுளார் தமக்கோர்
ஆதியிலார் அந்தமிலார் அரும்பெருஞ் ஜோதியினார்
என்று கனல் மதியகத்தும் புறத்தும் விளங்கிடு வார்
யாவுமிலார் யாவுமுளார் யாவும் அலார் யாவும்
ஒன்றுறுதாம் ஆகிநின்றார் திருச்சிற்றம் பலத்தே
ஓங்குகின்ற தனிக் கடவுள் ஒருவர் உண்டே கண்டீர்

(திருவருட்பா. 3282)