பக்கம்:திருவள்ளுவர் திருக்குறள் மணக்குடவருரை.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாயிரம்.

இ-ள்:- துப்பார்க்கு துப்பாய துப்பு ஆக்கி - (பிறவற்றை) உண்பார்க்கு அவர் உண்டற்கான உணவுகளையும் உண்டாக்கி, துப்பார்க்கு துப்பாவதும் மழை - (தன்னை) உண்பார்க்குத் தானே உணவாவதும் மழை.

இது, பசியைக் கெடுக்கு மென்றது, ௧௯.

வானின் றுலகம் வழங்கி வருதலால்,
தானமிழ்தம் என்றுணரும் பாற்று.

இ-ள்:- வான் நின்று உலகம் வழங்கி வருதலால்-மழைவளம் நிலைநிற்றலானே உலகநடை தப்பாது வருதலான், தான் அமிழ்தம் என்று உணரும் பாற்று-அம்மழைதான் (உலகத்தார்) அமுதமென்று உணரும் பகுதியது.

இஃது, அறம் பொருள் இன்பங்களை உண்டாக்குதலானும், பல வகைப்பட்ட உணவுகளை நிலை நிறுத்தலானும், தானே உணவாதலானும் மழையினை மற்றுள்ள பூதமாத்திரையாக நினைக்கக் கூடாதென்று அதன் நிலைமை கூறிற்று. ௨0.

௩-வது.-- நீத்தார் பெருமை.

நீத்தார் பெருமையாவது துறந்த முனிவரது பெருமை. இது, கடவுளரை வணங்கினாற் போல முனிவரையும் வணங்க வேண்டுமென்பதனானும், மழையையும் அவர் அடக்கத்தக்கவ ரென்ற கருத்தினானும், அவையிற்றின் பின் கூறப்பட்டது.

ழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு.

இ-ள்:- ஒழுக்கத்து நீத்தார் பெருமை - ஒழுக்கத்தின் பொருட்டு (எல்லாப் பொருள்களையும்) துறந்தாரது பெருமையை, பனுவல் துணிவு விழுப்பத்து வேண்டும் - நூல்களின் துணிவு விழுப்பத்தின் பொருட்டு வேண்டும். [விழுப்பம் - மேன்மை].