பக்கம்:திருவள்ளுவர் திருக்குறள் மணக்குடவருரை.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இல்லற வியல்

இது, தமக்கு இன்னா செய்தார்க்கும் தாம் இன்னா செய்யலாகா தென்றது. ௧௬௨.

செய்யாமை செற்றார்க்கும் இன்னாத செய்தபின்
உய்யா விழுமம் தரும்.

இ-ள்:- செய்யாமை செற்றார்க்கும் இன்னாத செய்தபின்-(தான்) ஒரு குற்றம் செய்யாதிருக்க (த் தனக்கு) இன்னாத செய்தவர்க்கும் இன்னாத செய்தபின், உய்யா விழுமம் தரும்-(அஃது) உய்வில்லாத நோயைத் தரும்.

[உய்வு - உய்தல் - பிழைத்தல்.]

இது, காரணமின்றி இன்னா செய்தவர்க்கும் பொல்லாங்கு செய்தலைத் தவிரவேண்டு மென்றது. ௧௬௩.

சிறப்பீனும் செல்வம் பெறினும், பிறர்க்கின்னா
செய்யாமை மாசற்றார் கோள்,

இ-ள்:- சிறப்பு ஈனும் செல்வம் பெறினும்-மிகுதியைத் தருகின்ற செல்வத்தைப் பெற்றும், பிறர்க்கு இன்னா செய்யாமை மாசு அற்றார் கோள்-பிறர்க்கு இன்னாதவற்றைச் செய்யாமை குற்றமற்றார் கோட்பாடு.

பழிவாராத செல்வம் பெறினும், இன்னாத செய்தலைத் தவிர வேண்டும் என்றது. ௧௬௪.

னைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானும்
மாணா செய்யாமை தலை,

இ-ள்:- எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் - யாதொன்றாயினும் எந்நாளும் யார்மாட்டும், மனத்தானும் மாணா செய்யாமை தலை-மனத்தினாலும் இன்னாதவற்றைச் செய்யாமை நன்று.

[யாதொன்றாயினும் - ஒருசிறிதாயினும். எனைத்தானும் என்பதில் ஆயினும் என்பது ஆனும் எனக்குறைந்து நின்றது.]

இஃது, இன்னாசெய்யாமை தலையான அறமாமென்றது. ௧௬௫.

௬0