பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/234

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
214
பல்லவர் வரலாறு


அரசுக்கு ஏற்ற மைந்தன் இல்லாத காலங்களில் அரசனுடைய தம்பி மகன் பட்டத்தைப் பெறுதல் இயல்பாக இருந்தது. அரசன் திடீரெனப் பிள்ளை இன்றி இறந்தபோது, அமைச்சர் முதலிய பொறுப்புள்ள மக்கள் ஒன்று கூடி எண்ணிப் பார்த்து அரச மரபில் ஒருவரைத் தேர்ந்தெடுத்து முடி புனைதல் வழக்கம். இச் செய்திகளை எல்லாம் முன்கண்ட பகுதிகளிலிருந்து நன்குணரலாம்.

அரசர் பட்டப் பெயர்கள்

பல்லவ அரசர்கள் தத்தம் தகுதிக் கேற்றவாறு பட்டயங்களைப் பெற்றிருந்தார்கள். மகாராசன், தரும மகாராசன். மகா ராசாதிராசன் என்று பட்டங்களைப் பட்டயங்களிற் காணலாம். முற்காலப் பல்லவருள் சிறந்து விளங்கிய சிவஸ்கந்தவர்மன் தன்னை ‘அக்நிஷ்டோம-வாஜ பேய-அஸ்வமேத ராஜ்’ என்று பட்டயத்தில் கூறிக்கொண்டதைக் காணப் பல்லவ வேந்தர் தாம் செய்த வேள்விப் பெயர்களையும் தங்கள் பட்டப்பெயர்களாகக் கொண்டமை நன்கறியலாம். பல்லவர் வீட்டுப் பெயர் ஒன்றாகும்; பட்டம் ஏற்றவுடன் கொண்ட பெயர் வேறாகும். அதனை ‘அபிடேக நாமம்’ என்னலாம். இராசசிம்மன் என்பது இயற்பெயர்; அவனுக்கிருந்த (இரண்டாம்) நரசிம்ம வர்மன் என்பது அபிடேகப் பெயர். பரமேசுவரன் என்பது இயற்பெயர் அவனுக்கிருந்த (இரண்டாம்) நந்திவர்மன் என்பது அபிடேகப் பெயர்.[1] இவை அன்றிப் பல்லவப் பேரரசர் பெற்றிருந்த் விருதுப் பெயர்கள் மிகப் பல ஆகும். அவை ஆங்காங்கே முன்னரே காட்டப்பட்டுள்ளன. அப் பெயர்கள் அவ் வேந்தர்தம் பலவகை இயல்புகளை நமக்கு விளக்குவனவாகும்.

அரசரும் சமயநிலையும்

பல்லவ வேந்தர் நல்ல உடற்கட்டு உடையவர்கள்; உயரமானவர்கள்: மணிமுடி தரித்த மன்னர்கள் என்னும் விவரங்கள் மகாமல்லபுரத்தில் உள்ள உருவச் சிலைகளைக் கொண்டு


  1. S.I.I Vol.IV Vaikuntaperumal Koil Inscription.