பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/240

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
220
பல்லவர் வரலாறு


மகனுமான ‘பரமேசுவரன்’ எனப்பட்டவன். இத்தகைய புலவர் ‘காரணிகர்’[1] எனப்பட்டனர்.

பல்லவர் படைகள்

தேர்ப்டை பல்லவரிடம் இருந்ததென்பதை மெய்ப்பிக்கக் கல்வெட்டு - பட்டயச் சான்றுகளோ, ஓவிய - சிற்பச் சான்றுகளோ இதுகாறும் கிடைத்தில. அவர்கள் யானைகள், குதிரைகள், வீரர்கள் பெற்றிருந்தார்கள் என்பது தேற்றம். சிறந்த துறைமுகப்பட்டினமாகிய மாமல்லபுரத்தில் பழைய காலத்திலிருந்தே மேனாட்டுக் குதிரைகள் இறக்குமதி செய்யப்பட்டு வந்தமை இலக்கியம் கண்ட சான்று. வைகுந்தப் பெருமாள் கோவில் சிற்பங்கள் வாயிலாகப் போர்ப்பரிகள் பல இருந்தன என்பது தெளிவாகும். சிறந்த சேனைத் தலைவர்கள் பல்லவர் காலத்தில் இருந்தனர். சிம்மவர்மன் காலத்தில் விஷ்ணுவர்மன் என்னும் தானைத்தலைவன் சிறந்திருந்தான்; நரசிம்மவர்மன் காலத்தில் வாதாவி கொண்ட சிறுத்தொண்ட நாயனார் சிறந்த சேனைத் தலைவராக விளங்கினார். இரண்டாம் நந்திவர்மன் காலத்தில் அப் பேரரசனைத் பகைவர் முற்றுகையி லிருந்துகாத்த பெருவீரனான உதய சந்திரன் என்பவன் படைத்தலை வனாக இருந்தான். மூன்றாம் நந்திவர்மனிடம் பூதிவிக்கிரம கேகரி என்பவன்தானைத்தலைவனாக இருந்தான். -

பண்பட்ட படைகள்

பல்லவர் படைகள் போரில் வன்மை பெற்றவை. இடைக்காலப் பல்லவர் காலத்தில் வடபகுதியில் மேன் மதுரை, தசனபுரம் முதலிய இடங்கட்குச் சென்று போர் நடத்தி வெற்றிபெற்றன; பிற்காலப் பல்லவர் காலத்தில் கடம்பரை நிலைகுலையச் செய்தன. புகழ் பெற்ற சாளுக்கியரை அடக்கின; தமிழ் வேந்தரைப் பின்னடையச் செய்தன;


  1. இறையனார் அகப்பொருளுக்கு ‘இன்ன உரைதான் சரி’ என்பதை உணர்த்தக் ‘காரணிகள்’ ஒருவன் வேண்டும் என்று இறைவனிடம் குறை இரந்த செய்தி களவியல் உரையிற் காண்க. எனவே ‘காரணிகள்’ பட்டயம் தீட்டுவதிலும், படிப்பதிலும் தேர்ந்தவன் என்பது தேற்றமாதல் காண்க.