பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/31

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
11
பல்லவர்க்கு முற்பட்ட தமிழகம்


சமயங்களில் பொது நோக்குடையவனாக இருந்தான் என்பதும், கி.பி.8ஆம் நூற்றாண்டில் திருமங்கை ஆழ்வார் இவனைப் பாடி 70 கோயில்களைக் கட்டியவன்[1] எனப் பாராட்டலால், இவன்திருமால் கோயில்களையும் கட்டியவன் என்பதும் நன்குஉணரலாம். கி.பி. 7ஆம் நூற்றாண்டிலேயே இவனைப் பற்றிய புராணக் கதைகள் பலவாறு கிளம்பின என்பதிலிருந்து இவன் அப்பர் - சம்பந்தர் காலத்திற்குப் பல நூற்றாண்டுகள் முற்பட்டவன் என்பது நன்கு விளங்குமன்றோ?[2] சுருங்கக் கூறின், நாயன்மார் காலச் சைவ சமய வளர்ச்சிக்கு அடிப்படை இட்ட சிறந்த சைவன் இப்பேரரசன் என்றே கூறுதல் வேண்டும். கோச்செங்கட் சோழற்குப் பிறகும் களப்பிரர் புகுவுக்கு முன்பும் (கி.பி.225-250) சோணாட்டை ஆண்ட பேரரசர் புகழ்ச்சோழ நாயனார் என்பவராதல் வேண்டும். என்னை? இவர் பேரரசர்; பல நாடுகளை வென்றவர் எனச் சேக்கிழார் கூறலாலும், சோணாடு களப்பிரர் கைக்குப் போன கி.பி.3ஆம் நூற்றாண்டின் இடைக்கால முதல் விசயாலயச் சோழன் தோன்றிய கி.பி. 580 வரை சோழர் சிற்றரசராக இருந்தனர் என்பது வரலாறு கூறும் உண்மை ஆதலாலும் என்க.[3]

இனிக் கரிகாலன் காலம் முதல் புகழ்ச்சோழர் காலம் வரை (கி.மு.60-கி.மு.250) சோணாட்டின் வடபகுதியாக இருந்த தொண்டை மண்டலம் எங்ஙனம் இருந்தது என்பதை நூல்களைக் கொண்டு காண்போம்.

காஞ்சியின் பழைமை

வடமொழிப் புராணங்களின் கூற்றுப்படி காஞ்சிமா நகரம் இந்தியாவில் உள்ள புண்ணியப் பதிகள் ஏழனுள் ஒன்றாகும். இயூன்-சங் கூற்றுப்படி, புத்தர் கி.மு.5ஆம் நூற்றாண்டில் காஞ்சிபுரத்தில் வந்துசமய உண்மைகளை உரைத்தார்; அசோகன் பல


  1. திருவானைக்கா, திருஅம்பர், நன்னிலம், வைகல், காடக்கோயில் முதலியன இவனால் கட்டப்பட்டன.
  2. R.Gapalan’s “Pallavas of Kanchi’, p.31.
  3. C.V.N. Iyer’s “Origin and Development of Saivism in S.India,’ p.183