பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/321

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
301
மூன்று ஐயங்கள்


மண்டபத்தைச் சுற்றியும் தாழ்வாரத்தை உடையது. மேற்கூரை கல்தளத்தை உடையது. சுவர்கள் மீதும் தூண்கள்மீதும் சமண சித்திரங்கள் தீட்டப்பெற்றிருக்கும்.[1] இவ்வமைப்பை ஏறத்தாழ இன்றுள்ள காவிரிப்பூம்பட்டினத்துக் கோவில்களிற் காணலாம்: மாமல்லபுரத்தில் உள்ள ‘மண்டபங்கள்’ எனப்படுபவை அனைத்தும் இவ்வமைப்பை உடையனவே. பண்டைச் சமணர் மூன்று சிறு அறைகளைக் கொண்ட கோவில்களை (மண்டபங்களை)யும் அமைத்தனர்; அவ்வறைகளில் நடுவில் தீர்த்தங்கரரையும் இருபாலும் இயக்கர் இயக்கியரையும் வைத்தனர். நடுஅறையும் அருகதேவரும் வடக்கு அல்லது தெற்கு நோக்கி இருக்கும்படி அமைத்தனர்.[2] இம்முறையில் அமைந்தவையே மகேந்திரன் குடைவித்த கோவில்கள் ஆகும். “இங்ஙனம் சமணர் அமைத்த மண்டபம் கோவில் முறை அதன் திராவிட அமைப்புடன் எல்லோரா வரை கி.பி. 7, 8ஆம் நூற்றாண்டுகளிற் பரவிவிட்டது. இம்முறை சாளுக்கியராற் பின்பற்றப் பட்டது.[3] “சில பெரிய சமணர் கோவில்கள் திருச்சுற்றில் பல சிறிய அறைகளைக் கொண்டவை; அவற்றில் சமனவுருவச் சிலைகள் வைக்கப்பட்டன.[4] இம்முறைப்படி அமைந்ததே இராசசிம்மன் கட்டிய கயிலாசநாதர் கோவில் ஆகும்.

மகேந்திரன் அமைத்த குகைக்கோவில்கள் ஏறத்தாழச் சிதம்பரத்தில் உள்ள பொன்னம்பலம் என்னும் சபையையும் தில்லைக் கோவிந்தராசர் உள்ள இடத்தையும் அமைப்பில் ஒருவாறு ஒத்துள்ளன. இவன்மகனான நரசிம்மவர்மன் அமைத்த ஒன்றைக்கல் கோவில்கள் மெய்யாகவே தமிழ் நாட்டில் இருந்த தேர் வடிவில் அமைந்த கோவில்களைப் பார்த்துச் சமைத்தவையே ஆகும், சிற்றுார் அம்மன் கோவிலுக்கும் மாமல்லபுரத்தில் உள்ள துர்க்கையின்


  1. Annual Report of the A.D.S. Circle, 1913-14, p.14.
  2. Ananda Alwar’s “Indian Architecture,” p.209.
  3. Fergusson’s “History of Indian and Eastern Architecture’ Vol.II, pp.21-22.
  4. Ibid.