பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/9

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
vii
அணிந்துரை

மேலும், கல்வெட்டுச் சாசனங்களுக்கும் பல்லவர் முதன்மை தந்தார்கள். இவர்கட்கு முன் கல்வெட்டுகள் வெகு குறைவு. அவை பிராமி எழுத்தில் இருந்தன. பல்லவர் காலத்தில் பல்லவ கிரந்தம் என்று கூறும் அழகிய எழுத்துக்கள் ஆளப்பட்டன. அவ்வெழுத்துக்களின் அழகு பார்த்தால்தான் தெரியும். (கயிலாசநாதர் கோவிலிற் காண்க.) பிறகு தமிழை அதிகமாகப் போற்றத் தொடங்கியவுடன் பல்லவர்கள் தமிழிலேயே எழுதினார்கள். அன்றுமுதல் இப் புது இயக்கம் வெற்றியடைந்தது. ஆகவே, பல்லவர்களாலே சமயமும் தமிழும் போற்றப்பட்டதை நாம் அறியவேண்டும்.

இத்தன்மையான ஒரு பெரிய மன்னர் குடும்பத்தைப் பற்றி நாம் நன்றாக அறிய வேண்டாவோ! அதனை அறிவிப்பதற்காகவே திரு.வித்துவான் மா.இராசமாணிக்கம் பிள்ளை. பி.ஓ.எல். அவர்கள் இவ்வரிய நூலை வெளியீட்டுள்ளார்கள். தமிழ் மக்கள் இதனை நன்றாகப் படித்துத் தம் பண்டைப் பெருமையை அறிவார்களாக அறிவது மாத்திரம் அன்றிப் பல்லவர் நாகரிகம் தோன்றிநின்ற நிலையங்கள், ஊர்கள், சான்றுகள் முதலியவற்றை முற்றும் தெரிந்துகொண்டு, அங்கங்கே சென்று அவற்றைப் பெருமிதத்துடன் நோக்குவார்களாக

நம் மக்கள் இந்த முயற்சியில் இன்னும் அதிகமாக ஈடுபட்டுத் தமிழர் நாகரிகம் முழுவதையும், பலவிதங்களிலும் வெளியிட்டும் அறிந்தும் போற்றுவார்களாக.

சென்னை. கோவைகிழார்,

25-2-44.