பக்கம்:பூமியின் புன்னகை.pdf/24

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22

பூமியின் புன்னகை

சாமியை நம்பித் தொழுதபின்னே-இங்கு
சத்தியம் ஜெயிக்க வேணும் என்றே

பூமியில் முழுதும் தேடியபின்-காலில்
புழுதியும் படிந்தே வாடியபின்

காமக் குரோத லோபத்தால்-வீண்
கயமைக் குணத்தொடு தாபத்தால்

மாமிசம் விற்பவர் நடுவினிலே-நான்
மலர்களைத் தேடித் தவிக்கின்றேன்

பித்தர்கள் நிறைந்த உலகினிலே-நான்
பேதைமை நீங்கித் தவிக்கின்றேன்

எத்தர்கள் மலிந்த இந்நாளில்-நான்
ஏழ்மையில் நலிந்து கொதிக்கின்றேன்

கொள்கையை விடவும் முடியவில்லை-ஊரைக்
கொள்ளை இடவும் துணியவில்லை.

உண்மையைத் தேடி ஓய்ந்துவிட்டேன்-உயிர்
உள்ளதை நாடி மாய்ந்துவிட்டேன்

பூமியில் வல்லவர் நடுவினிலே-நான்
பொய்யை எதிர்த்துக் கொதிக்கின்றேன்

மாமிசம் விற்பவர் நடுவினிலே-நான்
மலர்களைத் தேடித் தவிக்கின்றேன்.