பக்கம்:பூமியின் புன்னகை.pdf/31

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பா.

29

நாய்கள் சிரிக்கும் தெருக்கூத்தாய்
நானொரு படம் பார்த்தேன்
இல்லார் கொடுமையும் இந்நாட்டில்
இருப்போர் சுரண்டலும் இந்நாள்
கல்லார் வறுமையும் கற்றோர் கயமையும்
கலைகளின் நலிவும் கவிகள் பஞ்சமும்
சொல்லால் வேஷமிட்டு மேடைகளில்
சுகபோக அரசியலின் நடிகர்களாய்
எல்லார் கண்களிலும் மண்தூவி
இலஞ்சப் பதவிகளில் அட்டைகளாய்க்
கொல்லாமல் குருதி யுறிஞ்சிநிதம்
கொலைபா தகங்கள் புரிகின்ற
வல்லாளர் திறமெல்லாம் சிறிதுமின்றி
வானத்துத் திரிசங்கு சொர்க்கம்போல்
இல்லாத வாழ்வுக்குக் கலைக்களையாய்
நானொரு படம் பார்த்தேன் பட்டி
நாய்கள் சிரிக்கும் தெருக்கூத்தாய்
நானொரு படம் பார்த்தேன்.

(ஆகஸ்ட், 1970)