பக்கம்:வைணமும் தமிழும்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

126

வைணவமும் தமிழும்


பெறும் அர்ச்சாரூபத்தில் எம்பெருமானைத் திருக்குருகூரில் கண்ட ஆழ்வார் 'இவனை உலகோர் அநுபவியாமல் உள்ளனரே' எனக் கழிவிரக்கம் கொள்ளுகின்றார் இப்பாசுரத்தில்'

ஐந்தாம் திருநாள் : அரையர் இன்று சேவிக்கும் பாசுரங்கள் திருவாய்மொழி ஐந்தாம் பத்து. 'எங்ஙனேயோ அன்னை மீர்காள்!' (5.5;1) என்ற பாசுரத்தின் அபிநய வியாக்கியானம் சேவிக்கப்பெறும். திருவாய்மொழி அபிநய வியாக்கியானங்களில் இதுவே முதல் அகப்பொருள் பாசுரம், தாய்[1] மகளை நோக்கி “நீ எம்பெருமானை உலகு அறிய ஆசைப்படுவது உனக்கும் அவனுக்கும் இழுக்கு தருவதாகும். பெண்ணிற்கு உரிய நாணம் துறந்து உன் ஆசையை வெளிப்படுத்தல் ஆகாது. அவ்வாறு வெளிப்படுத்திய பின்பும் அவன் வாராதிருப்பதால் உலகோர் அவனை இரக்கம் அற்றவன் எனக் கூற ஏதுவாகும்; அவனுக்கு உண்டாகும் பழிச் சொல் நம்மையும் சாரும் அன்றே?” என்று கூறிச் சினம் கொள்ளுகின்றனர். உருவெளிப்பாடு கண்ட தலைவியின் விடையாக அமைவது இப்பாசுரம்.

ஆறாம் திருநாள்: இன்று அரையர் சேவிக்கும் பாசுரங்கள் திருவாய்மொழி ஆறாம் பத்து. அபிநயவியாக்கியானம் 'உலகம் உண்ட பெருவாயா' (6.10:1) என்ற பாசுரத்திற்கு இத்திருவாய் மொழியில் திருவேங்கடமுடையானின் குணங்களைக் கூறி, இதன் இறுதிப் பாசுரத்தில் அவனைச் சரணம் அடைகின்றார்.


  1. தலைவிக்கு ஐவகைத் தாயர் இருப்பதாகக் கொள்ளுதல். தமிழ்க்கவி மரபு. பெற்றதாய், ஊட்டும் தாய், முலைத்தாய், கைத்தாய், செவிலித்தாய். இவர்களேயன்றி தாய் முறையில் உள்ள அனைவரையும் விளித்துக் கூறுகின்றாள்.