பக்கம்:வைணமும் தமிழும்.pdf/312

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நலம் அந்தம் இல்லதோர் நாடு

295


விளக்குவர் சுவாமிதேசிகன் (1) இராகு என்னும் பாம்பு பற்றிவிட்ட பிறகு கதிரவனின் ஒளி அதிகமாகும். (2) அழுக்கடைந்து நின்ற தரளம் தூய்மை செய்யப் பெற்றபிறகு தன் இயல்பான ஒளியுடன் ஒளிர்கின்றது. (3) கடலில் சென்ற கலம் திசை தப்பிச் சென்று கரைசேர்ந்தவுடன் அதிலுள்ள பயணிகள் அடையும் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. (4)காட்டுத் தீயில் சிக்கித் தவித்து நிற்கும் மதகரி தெய்விகமாய் தீ அணைந்தால் அதினின்றும் வெளியேறியவுடன் அஃது அடையும் மகிழ்ச்சி கூறுந் தரம் அன்று. (5) மடலூரும் தலைவன் தலைவியர் தம் விருப்பம் நிறைவேறப் பெற்றதும் பெருமிதம் கொள்வர். (6) ஒர் அரசன் தன் பிழையால் சிறிது காலம் ஒரு சிறையில் இருக்கப் பெற்றுப் பின்பு பிழையற்றவன் எனத் தீர்ந்து சிறை நீங்கி மீண்டும் தனது அரசுரிமையைப் பெற்றால் அவன் ஆனந்தக் கடலில் மூழ்கி நிற்பான்.அங்ஙனமே இதுகாறும் ஆன்மாவானவன் உண்மையான சொரூபத்தை அறியாமல் செய்து மறைத்து வந்த பிரகிருதியின் உறவு நீங்கப்பெற்றதும் ஆன்மா வைகுந்தத்தில் எம்பெருமானுடன் கலந்து அவனுக்கு அடிமை செய்து ஆனந்தத்தை அநுபவிக்கின்றது. (தே.பி. 151)

          கண்டேன் கமல
              மலர்ப்பாதம்; காண்டலுமே
          விண்டே ஒழிந்த
              வினையாயின எல்லாம்
          தொண்டே செய்து
              என்றுதொழுது வழியொழுகம்
          பண்டே பரமன்
              பணித்த பணிவகையே (திருவாய்.10.4:9)