உள்ளடக்கத்துக்குச் செல்

பதிற்றுப்பத்து/எட்டாம் பத்து

விக்கிமூலம் இலிருந்து
(பதிற்றுப்பத்து எட்டாம்பத்து இலிருந்து வழிமாற்றப்பட்டது)


பெருஞ்சேரல் இரும்பொறையை
அரிசில்கிழார் பாடியது.


எட்டாம் பத்து


பதிகம்

பொய்யில் செல்வக் கடுங்கோ வுக்கு
வேளாவிக் கோமான் பதுமன்தேவி ஈன்றமகன்
கொல்லிக் கூற்றத்து நீர்கூர் மீமிசைப்
பல்வேல் தானை அதிக மானோடு
இருபெரு வேந்தரையும் உடனிலை வென்று
முரசும் குடையும் கலனும் கொண்டு
உரைசால் சிறப்பின் அடுகளம் வேட்டுத்
துகள்தீர் மகளிர் இரங்கத் துப்பறுத்துத்
தகடூர் எறிந்து கொச்சிதந் தெய்திய
அருந்திறல் ஒள்ளிசைப் பெருஞ்சேரல் இரும்பொறையை
மறுவில் வாய்மொழி அரிசில் கிழார்
பாடினார் பத்துப் பாட்டு.

பாட்டின் பெயர்கள் : 1. குறுந்தாள் ஞாயில், 2. உருத்தெழு வெள்ளம், 3. நிறந்திகழ் பாசிழை, 4. நலம்பெறு திருமணி, 5. தீஞ்சேற்றியாணர், 6, மாசிதறிருக்கை, 7, வென்றாடு துணங்கை, 8. பிறழநோக்கியவர், 9. நிறம்படு குருதி, 10. புண்ணுடை எறுழ்த்தோள்.

பெருஞ்சேரல் இரும்பொறை அரசுவீற்றிருந்த ஆண்டுகள், பதினேழு. பாடிப் பெற்ற பரிசில், தானும் கோயிலாளும் புறம் போந்து நின்று, 'கோயிலுள்ள எல்லாம் கொண்மின்' என்று, காணம் ஒன்பது நூறாயிரத்தோடு அரசு கட்டில் கொடுப்ப, அவர் 'யான் இரப்ப இதனை ஆள்க’ என்ற அமைச்சுப் பூண்டார்.

தெளிவுரை : பொய்மையற்றவன் செல்வக் கடுங்கோ வாழியாதன். அவனுக்கு அவன் மனைவியான வேளாவிக் கோமான் பதுமனின் மகள் பெற்றுத்தந்த மகன், பெருஞ் சேரல் இரும்பொறை. அவன், கொல்லிக் கூற்றத்திலுள்ள நீர்மை மிகுந்த மலையின் உச்சிப் பகுதியான இடத்திலே நிகழ்ந்த போரில், பல வேற்படை வீரர்கள் நிறைந்த படையினையுடையவனான அதிகமானோடு, சோழ பாண்டியராகிய இருபெரு வேந்தரையும் ஒருசேர வெற்றிகொண்டவன்; அவர்தம் முரசங்களையும் குடைகளையும் அணிகலன்களையும் பறித்துக் கொணர்ந்தவன்; புகழமைந்த சிறப்பினையுடைய போர்க்களத்தே களவேள்வியும் வேட்டவன்; குற்றமற்ற மகளிராகிய பகையரசரின் மனைவியர் இரங்கி வருந்துமாறு, அதிகனின் வலிமையை மீளவும் சென்று ஒழித்தவன்; தகடூர் கோட்டையை முற்றி அதனையும் கைப்பற்றியவன்; இத்தகைய புகழமைந்த அரிய வலிமையையும், ஒள்ளிய புகழையும் கொண்டவன் அவன் ஆவான். அத்தகையானாகிய பெருஞ்சேரல் இரும்பொறையைக் குற்றமில்லாத வாய்மையே மொழிவோரான அரிசில்கிழார் என்பார் பத்துப் பாட்டுகளாற் பாடினார்.

சொற்பொருளும் விளக்கமும்: கொல்லிக் கூற்றம் என்பது கொல்லி மலையைச் சூழ்ந்திருந்த நாட்டுப் பகுதி; இதற்கு உரியோனாக இருந்தவன் வல்வில் ஓரி; இவன் அதிகனுக்கும் இருபெரு வேந்தருக்கும் நண்பனாதல்பற்றி அவர் படையணிகள் இவனுக்கு உதவியாகச் சென்றிருக்கலாம்: ஓரியைச் சேரமான் அழித்த காலையில் அவனுக்கு உதவியாயிருந்தவன் திருக்கோயிலூர் மலையமான் திருமுடிக்காரி ஆவான்; காரியை இப்போரின் பின்னர்ச் சோழனும் அதிகனும் சேர்ந்து அழித்தனர். காரியின் அழிவுக்குப் பின்னர் பெருஞ்சேரல் இரும்பொறை தகடூரை முற்றி அழித்தான் எனல் பொருந்தும். இப்போரின் பெருமை தோன்றத் தகடூர் யாத்திரைச் செய்யுட்கள் எழுந்துள்ளன. பதுமன் தேவி - பதுமனின் மகள். நீர் கூர் - நீர்வளம் மிகுந்த, மீமிசை - உயர்த்த மலையுச்சியில். உடனிலை வென்று - ஒருசேர வெற்றி கொண்டு. உரைசால் சிறப்பு - புகழமைந்த சிறப்பு. அடுகளம் - பகைவரை அட்ட களம். களம்வேட்டல் - அடுகளத்தில்போர்த் தெய்வமான காடுகிழாளுக்கு நிணச்சோறு சமைத்துப் படைத்து வழிபடுதல். அருந்திறல் - பகைவரால் வெற்றி கொள்ளுதற்கரிய பெருந்திறல். ஒள்ளிசை - ஒளியோடு விளங்கும் புகழ் சிறந்த புகழ்.

71. குறுந்தாள் ஞாயில்!

துறை : செந்துறைப் பாடாண் பாட்டு. வண்ணம் : ஒழுகு வண்ணமும் சொற்சீர் வண்ணமும். தூக்கு : செந்தூக்கு. சொல்லியது : பெருஞ்சேரலின் வென்றிச் சிறப்புக் கூறி, அவனுக்குப் பகைவர்மேல் அருள் பிறப்பித்தது.

[பெயர் விளக்கம் : கோட்டை மதிலின் அடியிடங்களைப் பார்க்க, அவற்றில் குறுகிக் குறுகியிருக்கும் படியையுடைய ஞாயில் என்றதனால் 'குறுந்தாள் ஞாயில்' என்றனர் இவ்வாறு கூறின சாதிப் பண்பாலும் படியைத் தாளென்று ஆதினபடியாலும், இதற்குக் 'குறுந்தாள் ஞாயில்' எனப் பெயர் தந்தனர்.]

அறாஅ யாணர் அகன்கண் செறுவின்
அருவி யாம்பல் நெய்தலொடு அரித்துச்
செறுவினை மகளிர் மலிந்த வெக்கைப்
பரூஉப்பகடு உதிர்த்த மென்செந் நெல்லின்
அம்பண அளவை உறைகுவித் தாங்குக் 5

கடுந்தேறு உறுகிளை மொசிந்தன துஞ்சும்
செழுங்கூடு கிளைத்த இளந்துணை மகாரின்
அலந்தனர் பெரும நின் உடற்றி யோரே!
ஊரெரி கவர உருத்தெழுந்து உரைஇப்
போர்சுடு கமழ்புகை மாதிரம் மறைப்ப 10

மதில்வாய்த் தோன்றல் ஈயாது தம்பழி ஊக்குநர்
குண்டுகண் அகழிய குறுந்தாள் ஞாயில்
ஆரெயில் தோட்டி வெளவினை ஏறொடு
கன்றுடை ஆயம் தரீஇப் புகல்சிறந்து
புலவுவில் இளையர் அங்கை விடுப்ப 15

மத்துக்கயிறு ஆடா வைகற்பொழுது நினையூஉ
ஆன்பயம் வாழ்நர் கழுவுள் தலைமடங்கப்
பதிபா மாக வேறுபுலம் படர்ந்து
விருந்தின் வாழ்க்கையொடு பெருந்திரு அற்றென அருஞ்சமத்து அருநிலை தாங்கிய புகர்நுதல் 20

பெருங்களிற்று யானையொடு அருங்கலம் தரா அர் மெய்பணி கூரா அனங்கெனப் பராவலின்
பலிகொண்டு பெயரும் பாசம் போலத்
திறைகொண்டு பெயர்தி வாழ்கநின் ஊழி!
உரவரும் மடவரும் அறிவுதெரிகந் தெண்ணி 25

அறிந்தனை அருளா யாயின்
யாரிவண் நெடுந்தமை வாழு மோரே?

தெளிவுரை : பெருமானே! இடையறுதலில்லாத புது வருவாயினையுடையதும், அகன்ற இடப்பரப்பை உடையதுமான வயலிலுள்ள நெற்கதிரோடு, அரிய பூக்களைக்கொண்ட ஆம்பலையும் நெய்தலையும் ஒருசேரச் சேர்த்து, வயல்வேலை செய்யும் மகளிர் அரிவர். அங்ஙணம் அரிந்த கதிர்கள் வயலை அடுத்துள்ள களத்திலே மிகுதியாகச் சேர்ந்திருக்கும். அவற்றைப் பெரும் பகடுகொண்டு மிதிப்பித்து, மென்மையான செந்நெல்லைப் பிரித்து எடுப்பர். அந் நெல்லைத் தூற்றிப் பொலியிட்டு மரக்காலால் அளந்து அம்பாரமாகக் குவித்து வைப்பர். அங்ஙணம் விளங்கும் செந்நெல்லின் அம்பாரக் குவியலைப்போலக் கடுமையாகக் கொட்டும் இயல்பினையுடைய செங்குளவிக் கூட்டம் மொய்த்திருக்கும் கூடு தொங்கும். நின்னோடு மாறுபட்டு நின்னைச் சின்ங்கொள்ளச் செய்த பகைவர்கள், அச் செங்குளவிகளின் கூட்டைக் கலைத்த இளஞ்சிறார்கள் அவற்றால் வெருட்டி வெருட்டிக் கொட்டப்பட்டுத் துன்புற்றாற் போலத், தாமும் நின்மறவராலே தாக்கப் பெற்றுத் துன்பமுற்றனர்.

ஆயர் குடியினரின் தலைவன் கழுவுள் என்பவன். அவனுக்கு உரியதான ஊரினை எரியூட்டி அழித்தாய். அத்தீயானது ஊரைச் சுற்றிச் சூழ்ந்து, அங்கிருந்த நெற்போர்களையும் சுட்டெரித்தது.அதனின்றும் எழுந்த புகையானது நாற்றிசைகளையும் மூடி மறைத்தது. அக் கழுவுளும் அவனைச் சார்ந்தோரும் கோட்டையுட் சென்று அடைத்துக் கிடந்தாராய், வெளிவந்து போரிடலைச் செய்யாது, தம் பழியான சூழ்ச்சிச் செயல்களைப் பற்றியே முயற்சிகள் செய்தவாறிருந்தனர். ஆழமான இடத்தையுடைய அகழியாற் குழப்பெற்றதும், குறுகிய படிகளைக் கொண்டதுமான ஞாயில் என்னும் உறுப்பையுடைய அவ்வரிய, மதிலின் காவலையழித்து, நீயும் அதனைக் கைப்பற்றிக் கொண்டனை. அவ்விடத்தேயுள்ள எருதுகளோடு கன்றுகளையுடைய பசுக்களையும் கைப்பற்றி நின் படைமறவர்க்குத் தந்தனை. அவற்றைப் பெற்ற அவரும் நின்னைப் போலவே தாமும் கொடுத்தலில் விருப்பம் மிகுந்தவராகப், புலால் நாற்றம் கமழும் வில்லினையுடையராகி அம்மறவர்கள், அவற்றைத் தாமும் தம்பால் வந்திரந்தோருக்கு வழங்கி மகிழ்ந்தனர். கோட்டையினின்றும் தப்பிச்சென்ற, பகக்களின் பால் தயிர் மோர் நெய் முதலிய பயனைக் கொண்டு வாழும் ஆயர்களின் தலைவனகிய அக் கழுவுள்: தன்னைச் சார்ந்தவர் வீடுகளிலே தயிர்கடையும் மத்தின் கயிறு ஆடுதலற்று விளங்கும் காலைப்பொழுதை நினைந்தான். தன் பகைமையைக் கைவிட்டு, நின்முன் வந்து பணிந்து தலைவனங்கியும் நின்றான்.

கழுவுள் அவ்வாறு வண்ங்கவும், நீதான் அவன் தந்த இறைப்பொருளை ஏற்று அவன் ஊரைவிட்டு நின்னைப்பகைத்த வேறு அரசர்களின் நாடுகளை நோக்கிச் சென்று, அவர் ஊர்களையும் பாழாக்கினாய். புதிதாகத் தாம் சேர்த்துள்ள செல்வத்தோடு முன்னோர் சேர்த்து வைத்துள்ள பெருஞ்செல்வமும் எல்லாம் இனி அழிந்தே போயின எனக்கருதி அவர்கள் அஞ்சினர். அரிதான போரிடையே தாங்குதற்கரிய நிலையையும் தாங்கியபடி உறுதியோடு நின்றதும், புள்ளிகள் பொருந்திய நெற்றியை உடையதுமான பெருங்களிற்று யானையோடு, தம்மிடமுள்ள அருங்கலன்களையும் நினக்குத் தாரார் ஆயினர் அவர். எனினும், உடல் நடுக்கமுற்றவராக, நின்னைத் தம்மைத் தாக்கி வருத்துதற் பொருட்டு வந்த தெய்வமாகக் கொண்டு, தம்மைக் காத்தருளுமாறு வேண்டிப் பரவினர். தனக்கிட்ட பலியை ஏற்றுக்கொண்டு, அவருயிரை வருத்தாது அவ்விடம் விட்டு அகன்றுபோகும் பேயினைப் போல, நீயும் அவர் பணிந்து தந்த திறைப்பொருளை ஏற்றுக் கொண்டு, அவர் நாட்டைவிட்டு அகன்று செல்வாய். நெடுந்தகையே! நின் வாழ்நாள் வாழ்வதாக அறிவாளரையும் மடமையாளரையும் தெரிந்து, அவர்தம் அறிவின் தரத்தை ஆராய்ந்து அறிந்தாயாகி, அவரவர்க்குத் தகுந்தவாறு அருள் செய்யாதே, அனைவருக்கும் ஒருப்போலவே அருள் செய்வாயானால், இவ்வுலகிலே யார்தாம் பரிசில் வாழ்க்கையினராக வாழ்வோராக இருப்பார்கள்! இதனால், அவரவர் தகுதியறிந்து, அவரவர்க்கு ஏற்றவாறு வழங்குக. பெருமானே!

சொற்பொருளும் விளக்கமும் : அறாஅ யாணர் - இடையராத புதுவருவாய்; அது இடையில் தீய்வுற்றுப் போகாதே தொடர்ந்து நல்ல விளைச்சலைத் தருகின்ற தன்மை. கண். இடம். செறு - வயல். அருவி - அரிய பூக்கள்; 'வீ' என்பது 'வி' என்றாயிற்று. ஆம்பல் - செவ்வல்லி. நெய்தல் - நீல மலரினைக் கொண்ட நீர்த்தாவர வகை. செறுவினை மகளிர் - வயலில் வேலைசெய்யும் மகளிர். உழத்தியர் - உழவர் மகளிர். மலிந்த - அடுத்துள்ள. வெக்கை போரடிக்கும் களமும்; நீர்வளமிக்க வயல்களையடுத்துக் காய்ந்துள்ள மேட்டுப் பகுதியாக இருத்தலின் வெக்கை என்றனர். பரூஉப் பகடு - பெரும் பகடு; பெரிய எருமைக்கடாக்கள். மென் செந்நெல் - மென்மை வாய்ந்த செந்நெல்; மென்மை சமைத்தபின் தோன்றுவது; அதனை நெல்லுக்கு ஏற்றிக் கூறினர். அம் பணம் - மரக்கால் என்னும் அளவு கருவி. உறை - அம்பாரம். தேறு - தெறுதல்; கொட்டுதல்; விகுதி கெட்டு முதல்நீண்டது. மொசிதல் - மொய்த்தல். துஞ்சும் - தூங்கும். கிளைத்த - கலைத்த. அலந்தனர் - சிதறியோடிப் புண்பட்டு வருந்தினர். இளந்துணை மகார் - அறிவற்ற சிறுவயதுப் பிள்ளைகள். அவர் குளவிக்கூட்டைப் பின்விளைவு கருதாராய் வேடிக்கை மாகக் கலைக்க, அவற்றால் தாக்கப்பட்டுத் துன்புறுவார். அவ்வாறே நின் திறலை அறியாதே வந்து நின் கோட்டையைத் தாக்கியவரும், நின் படை மறவரால் தாக்கப்பட்டுப் புண். பட்டுச் சிதறியோடுவாராக வருந்தினர் என்பதாம்.

எரி கவர்தல் - எரியானது ஊரைச் சூழ்தல். உருத்து சினங்கொண்டு. உரைஇ - பரந்து, மாதிரம் - திசைகள். தோன்றலீயாது - வெளிப்பட்டுத் தோன்றிப் போரிடாதே. பழி - பழிச்செயல்; போர்மரபுக்கு மாறுபட்டதான செயல்; அதுதான் எயிலுள்ளிருந்து சுருங்கைவழி அனைவரும் தப்பியோடல். ஊக்குநர் - முயல்வோர். குண்டுகண் - ஆழமான இடம். குறுந்தாள் - குறுகலான படிகள். ஞாயில் - மதிலின் உறுப்புக்களுள் ஒன்று; மறைந்திருந்து கோட்டையை முற்றியவர்மேல் அம்புகளை எய்தற்கேற்ற வசதிகளமைந்த உயரமான இடம். ஆர் எயில் - எளிதாக அழித்தற்கருமையுடைய கோட்டை மதில். ஏறு - எருது. ஆயம் - பசுமந்தை. புகல் சிறந்து - விருப்பம் மிக்கு கைவிடுப்ப - தானமாகத் தர. வைகற் பொழுது - விடிகாலைப் பொழுது. நினையூ - நினைந்து; செய்யூ என்னும் வாய்பாட்டு வினையெச்சம். ஆன் பயன் பால் தயிர் மோர் நெய் முதலியன. ஆன் பயத்தால் வாழுநர் ஆயர் என்க; அவர்கள் தலைவன் 'கழுவுள்' என்பான். இவனுக்குரிய ஊர் ‘ஆமுர்' என்பர்.

வேறுபுலம் - வேற்று நாடுகள். படர்ந்து - சென்று. பதி - அவர்தம் நாட்டு ஊர்கள். விருந்தின் வாழ்க்கை புதிதான செல்வம். பெருந்திரு - வழிவழியாக வரும் முன்னோரால் தேடி வைக்கப்பெற்ற பெருஞ்செல்வம். அருஞ்சமம் - வெல்லுதற்கரிய கடும்போர். அருநிலை - தாங்கி நிற்றற்கரியதான நிலை. புகர் - புள்ளி. அருங்கலம் - அரிய அணிகலம். பனிகூரல் - நடுக்கம் கொள்ளல். அணங்கு - தாக்கி வருத்தும் தெய்வம். பாசம் - பேய். ஊழி வாழ்நாள். உரவர் - அறிவாளர். சினந்து உயிரைக் கவர் தற்கென வந்த பேயானது, அவர் நடுக்கத்தோடிட்ட பலியை ஏற்று, அவரை விட்டு விலகுவதுபோல, நீயும் அவரைக் கொன்றழிக்கச் சென்ற சினத்தை யுடையவனா யிருந்தும், அவர் திறைப்பொருளைத் தந்து பணிந்து நிற்க, அவரைப் பொறுத்து, அப்பொருளை ஏற்று அவ்விடம் விட்டு அகன்று போவாய் என்பதாம். அவரது பணிந்து பராவும் திறை தந்துநிற்கும் நிலையைக் கண்டதும், அவருக்கு இரக்கங் கொண்டு சினந்தணிவாய் என்பதாம்.


72. உருத்தெழு வெள்ளம் !

துறை:செந்துறைப் பாடாண் பாட்டு. வண்ணம்: ஒழுகு வண்ணம். தூக்கு:செந்தூக்கு. சொல்லியது: பெருஞ்சேரலின் சூழ்ச்சித்திறனும் வெற்றிச் சிறப்பும்.

[பெயர் விளக்கம்: பல்லுயிரையும் ஒருங்கே கொல்லுங் கருத்துடையதுபோலச்சினந்து எழும் ஊழிப் பெருவெள்ளம் என்று கூறிய சிறப்பால் இப்பெயர் தந்தனர்.]


இயல்பெரு மையின் படைகோள் அஞ்சார்
சூழாது துணிதல் அல்லது வறிதுடன்
காவல் எதிரார் கறுத்தோர் நாடென்
முன்திணை முதல்வர்க்கு அம்பினர் உறைந்து
மன்பதை காப்ப அறிவுவலி யுறுத்தும்

நன்றறி யுள்ளத்துச் சான்றோர் அன்னரின்
பண்புநன்கு அறியார் மடம் பெருமையின்


துஞ்சல் உறூஉம் பகல்புகு மாலை
நிலம்பொறை ஓராஅ நீர் ஞெமரவந் தீண்டி
உரவுத்திரை கடுகிய உருத்தெழு வெள்ளம் 10

வரையா மாதிரந்து இருள்சேர்பு பரந்து
ஞாயிறு பட்ட அகன்றுவரு கூட்டத்து
அஞ்சாறு புரையும் நின்றொழில் ஒழித்துப்
பொங்குபிசிர் நுடக்கிய செஞ்சுடர் நிகழ்வின்
மடங்கல் தீயின் அனையை 15

சினங்கெழு குருசில்! நின் னுடற்றிசி னோர்க்கே!

தெளிவுரை: நின்னைப் பகைத்தோர் தம் பகைமையே பெரிதாகக் கொண்டவராதலினால், நின்மேற் படைகொண்டு போரிட வருதற்கு அஞ்சமாட்டார்கள். அதுதான் நின்வலியும் தம் வலியும் ஆராயாது துணிந்த செயலேயாகும். அஃதல்லது, நீதான் அவரை அழிக்கச் சென்றனையாயின், அவர்தாம் பலர் ஒருங்கே கூடினும் தம்நாட்டைச் சிறிதேனும் காத்தற்கு வல்லமை யில்லாதார் என்பதனை அவரேன் அறியாதாராயினர்?

நின் குலத்தின்கண், நினக்கு முன்னே தோன்றிய தலைவர்கட்குப் பாதுகாப்பாக இருந்தவரும், மக்களினத்தைக் காப்பதற்கான அறிவுரைகளை வலியுறுத்திக் கூறுபவரும், நன்றே அறியும் உள்ளத்தவருமான சான்றோர்களைப் போன்ற நின் பண்பினை, அவர்தாம், தம் மடமையின் மிகுதியினாலே நன்றாக அறியாதாராயினர்.

அனைத்துயிரும் சாதலைப் பொருந்துவதான ஊழிக்காலப் பகற்போது கழிந்த மாலைப்பொழுதிலே, நிலத்தின் பாரமானது நீங்கும்படிக்கு, நீரானது எங்கணும் பரவலாக வந்து சேரும். வலிய அலைகள் கடுமையாக எழுந்து வருமாறு ஊழிப் பெருவெள்ளமானது சினத்தோடு பொங்கி எழும். எல்லையறியப்படாத திசையிடந்தோறும் இருளானது சேர்ந்து பரவி நிற்கும். அவ்வேளையிலே மீண்டும் அவ்வெள்ளமானது வற்றிக் காயும்படிக்கு ஆதித்தர் பன்னிருவரும் ஒருங்கே கூடித் தோன்றிக் காய்வர். அவ்வாறு காய்கின்ற அச்சூரியர்களது கூட்டத்தோடு சேர்ந்து எழுகின்ற வடவைத்தீயினை நீயும் ஒப்பாய். அவ்வடவையானது மிக்க நீர்த்துளிகளையுடைய வெள்ளத்தை வற்றச் செய்யும் பொருட்டுச் சிவந்த சுவாலைகளோடும் தோன்றும். நீயோ எல்லார்க்கும் மகிழ்ச்சியைச் செய்யும் அழகிய விழாவினைப் போன்றவன். அத்தகையனாகிய நீயும், நின் அத்தன்மையை ஒழித்துவிட்டு, நின்னோடு மாறுபட்ட பகைவருக்கு, ஊழிக் காலத்துச் சூரியரோடுங்கூடித் தோன்றும் ஊழிப்பெருந் தீயை ஒப்பவனுமாவாய்! அத்தகைய சினம் பொருந்திய தலைவனே, நீ வாழ்க!

சொற்பொருளும் விளக்கமும்: இகல் - மாறுபாடு. படை கோள் - படையெடுத்தல். சூழ்தல் - ஆராய்தல். துணிதல் - செய்தற்கு முற்படல். வறிது - சிறிது. உடன்- பலரும் உடன்கூடி. காவல் எதிரார்- காத்தற்குரிய வலிமையற்றார். கறுத்தோர்-பகைத்துச் சினங்கொண்டோர். திணை - குலம். முதல்வர் - முன்னோரான அரசர். ஓம்பினர் - பாதுகாப்பாளராக விளங்கி; முற்றெச்சம். மன்பதை - நாட்டு மக்கள் கூட்டம். அறிவு - அறிவுரை. வலியுறுத்தும் - வலியுறுத்திக் கூறும். நன்று - நன்மை; அறம். சான்றோர் - சான்றாண்மை யுடையோர்; அமைச்சர் முதலாயினோர். பண்பு - இயல்பு. மடம் பெருமையின் - மடமை மிகுதியினாலே.

துஞ்சல் உறூஉம் - இறந்துபடுதலைப் பொருந்தும். 'பகல்' என்றது ஊழிக்காலத்துப் பெரும்பகலை; 'மாலை' என்றது அதன் இறுதிப் பொழுதை. 'ஊழி' என்பது அனைத்தும் ஒடுங்குகின்ற சர்வசங்கார காலம். பொறை - பாரம். ஓராஅ - நீங்க; எச்சத் திரிபு. உரவுத்திரை - வலிய அலைகள். கடுகிய - கடுமையோடும் எழுந்து படர்கின்ற. உருத்து எழு - சினங்கொண்டு எழுகின்ற. வரையா - எல்லையறிய மாட்டாத. மாதிரம் - திசைகள். ஞாயிறு பட்ட - ஞாயிறு தோன்றிய. 'அகன்று வரு’ என்றது, பன்னிரு சூரியர் ஒக்கத் தோன்றித் தம் கதிர்களை விரித்துப் பரந்து வருகின்ற வெம்மையை. மடங்கல் தீ - கூற்றமாகிய கொடுந்தீ; வடவைத்தீ. அம்சாறு - அழகிய விழா. பிசிர் - துளிகள். 'பொங்கு பிசிர்’ என்றது ஊழி வெள்ளத்தை: வினைத்தொகைப்புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை. நுடங்கிய - அழிக்க: செய்யிய என்னும் வாய்பாட்டு வினை எச்சம்.

வடவைத்தீயை ஒத்த இரும்பொறை, சூரியர்களையொத்த தன் படைத்தலைவரோடும் சென்று, பொங்கிப் பெருவெள்ளமாக வரும் பகைவர் திரளை, ஒருங்கே அழிக்கும் வல்லமையாளன் என்பதாம்.

73. நிறம்திகழ் பாசிழை !

துறை: செந்துறைப் பாடாண் பாட்டு. வண்ணம்: ஒழுகுவண்ணம். தூக்கு: செந்தூக்கு. சொல்லியது: பெருஞ்சேரலின் வெற்றிக்கு அடிப்படையாகிய செல்வமும் ஆண்மையும் கைவண்மையும் ஒருங்கே கூறியவாற்றான் அவன் வெற்றிச் சிறப்புக் கூறப்பட்டது.

[பெயர் விளக்கம்: தன்னின் அழுத்திய மணியினும் தன் நிறம் திகழும் பசும்பொன் இழை என்று கூறிய சிறப்பானே இதற்கு இப்பெயர் ஆயிற்று; இதில் வரும் 3,4 ஆம் அடிகள் கிடைக்கவில்லை.]


உரவோர் எண்ணினும் மடவோர் எண்ணினும்
பிறர்க்குநீ வாயின் அல்லது நினக்குப்
பிறர் உவமம் ஆகா ஒருபெரு வேந்தே!
…………… கூந்தல் ஒண்ணுதல் பொலிந்த
நிறந்திகழ் பாசிழை உயர்திணை மகளிரும்
தெய்வந் தரூஉ நெஞ்சத் தான்றோர் 5

………………………………………………………………….
மருதஞ் சான்ற மலர்தலை விளைவயல்
செய்யுள் நாரை ஓய்யும் மகளிர்
இரவும் பகலும் பாசிழை களையார் 10

குறும்பல் யாணர்க் குரவை அயரும்
காவிரி மண்டிய சேய்விரி வனப்பின்
புகாஅர்ச் செல்வ! பூழியர் மெய்ம்மறை!
கழைவிரிந்து எழுதரும் மழைதவழ் நெடுங்கோட்டுக்
கொல்லிப் பொருந! கொடித்தேர்ப் பொறைய! நின் 15

வளனும் ஆண்மையும் கைவண் மையும்
மாந்தர் அளவிறந் தனவெனப் பல்நாள்
யான்சென் றுரைப்பவும் தேறார் பிறரும்
சான்றோர் உரைப்பத் தெளிகுவர் கொல்என
ஆங்குமதி மருளக் காண்குவல் 20

யாங்குரைப் பேனென வருந்துவல் யானே!

தெளிவுரை: அறிவுடையோர் எண்ணினாலும், மடமை உடையோர் எண்ணினாலும், பிறருக்கு நீதான் உவமமாக வாய்த்தல் என்பதல்லது, நினக்குப் பிறர் உவமமென ஆகாதபடி ஒப்பற்ற விளங்கும் பெருவேந்தனே!

மருதத்தின் வளத்தால் நிறைந்து, பரந்த இடத்தை யுடையதாக விளங்கும் நெல்விளையும் வயல்களாகிய நன்செய் நிலங்களுள் வந்து தங்கும் நாரைகளை மகளிர் ஓட்டுவர். அங்ஙனம் ஓட்டும் மகளிர், தாம் அணிந்துள்ள பசும்பொன் அணிகளைக் கழற்றாமலேயே அடுத்தடுத்துள்ள பலவிடங்கட்கும் சென்றாராய், இரவும் பகலும் குரவைக் கூத்தாடியவராக இன்புற்றிருப்பர். காவிரி நீரால் நிறைந்து பாய்தலைப் பெற்றதும், நெடுந்தொலைவுக்கும் பரந்து காணப்பெறும் அழகினையுடையதுமான புகார் நகரத்தை உரிமையாகவுடைய செல்வனே! பூழிநாட்டாரைக் காத்துப் பேணும் கவசம் போன்றவனே! மூங்கில்கள் பரந்து உயர்ந்து வளர்வதற்கு இடமாயிருப்பதும், மேகங்கள் படிவதுமான நெடிய உச்சிகளையுடைய கொல்லிமலைக்குரிய தலைவனே! கொடிவிளங்கும் தேரினைடைய பொறையனே!

'நின் வளமையும், ஆண்மையும், கொடையுமாகிய இவை மூன்றும் உலகத்து மாந்தரான் அளவிட்டறிய இயலாதவளவு பெருகின' எனப் பலநாள் சென்று எடுத்துச் சொல்லியும், நின் பகைவர் தெளிவுபெற்றிலர். பிற சான்றோரும் அவர் தெளிவு பெறுவார்களோவெனச் சென்று எடுத்துக் கூறினர். அதன் பின்னரும், அவர் மதிமயங்கி விளங்கவே காண்கின்றேன். இனியும் எவ்வாறு உரைத்து அவரைத் தெளிவித்து அவரைக் காப்பது என்றெண்ணியே யானும் வருந்துகின்றேன்!

சொற்பொருளும் விளக்கமும்: உரவோர் - அறிவாளர். மடவோர் - அறிவு மடம்பட்டோர். வாயினல்லது உவமமாகப் பொருந்துதல் அல்லாது. ஒருபெரு - ஒப்பற்ற பெருமையுடைய. மருதம் - மருதத்தன்மை. சான்ற - நிறைவாகப் பொருந்திய. மலர்தலை - பரத்த இடத்தையுடைய. வயல் செய் - வயலாகிய செய்; ஒருபொருட் பன்மொழி. ஒய்யும் - ஓட்டும். பாசிழை - பசும்பொன்னாலான அணிகலன்; பச்சிலைகளால் அமைந்த உடையும் அணியும் ஆம். களையார் - களை யாராய்; முற்றெச்சம். குறும்பல் குரவை - அணித்தணித்து நெருங்க இருக்கும் குரவையாடும் இடங்கள். யாணர் - புதுமை. அயரும் - ஆடுதல் செய்யும். மண்டிய நீர் நிறைந்து பாய்கின்ற. சேய்விரி வனப்பு - நெடுந்தொலைவுக்கும் பரந்து தோன்றும் அழகு. இவனைப் 'புகார்ச் செல்வ' என்றதனால், ஒரு சமயம் இவன் புகார் வரைக்கும் சென்று அதனை வெற்றி கொண்டானாதலும் பொருந்தும். மெய்ம்மறை - கவசம். கழை - மூங்கில். கோடு - மலையுச்சி.

வளன் - செல்வப் பெருக்கம். ஆண்மை - மறமாண்பு. ‘மாந்தர் அளவு இறந்தன' என்றது, மாந்தராலே அளவிட்டு அறியவும் இயலாதபடி மிகுந்தன என்பதாம். தேறார் தெளியார்; தெளிதல் நின் பெருமையறிந்து வந்து நின்னைப் பணிந்து போதல். பிறரும் சான்றோர் - பிறராகிய சான்றோரும். மதிமருளல் - மதிமயங்கல்.

பகைவரது அறியாமைக்கு இரங்குவதுபோலக் கூறி, அவர்க்கு இரங்கி அருளுமாறு அறவுரை பகர்வது இப்பாட்டு. அறியாமையால் பகைத்தாரன்றி, ஆண்மையாற் பகைத்தார் எவருமே அல்லர் என்பதாம்.


74. நலம்பெறு திருமணி !

துறை:செந்துறைப் பாடாண் பாட்டு. வண்ணம்: ஒழுகுவண்ணம். தூக்கு: செந்தூக்கு. இதனாற் சொல்லியது: பெருஞ்சேரல் இரும்பொறையின் நல்லொழுக்கமும் அதற்கேற்ற நல்லறிவு உடைமையும்.

[பெயர் விளக்கம்: மணியறிவாரால் இதுவே நல்லதென்று சொல்லப்படுதலையுடைய திருமணி என்ற சிறப்பால் இப்பாடல் இப்பெயர் பெற்றது.]



கேள்வி கேட்டுப் படிவம் ஒடியாது
வேள்வி வேட்டனை உயர்ந்தோர் உவப்பச்
சாயறல் கடுக்கும் தாழிரும் கூந்தல்
வேறுபடு திருவின் நின்வழி வாழியர்
கொடுமணம் பட்ட வினைமாண் அருங்கலம் 5

பந்தர்ப் பயந்த பலர்புகழ் முத்தம்
வரையகம் நண்ணிக் குறும்பொறை நாடித்
தெரியுநர் கொண்ட சிரறுடைப் பைம்பொறிக்
கலவமரம் கடுக்கும் கவலைய மருப்பிற்
புள்ளி இரலைத் தோலூன் உதிர்த்துத் 10


தீதுகளைந் தெஞ்சிய திகழ்விடு பாண்டில்
பருதி போகிய புடைகிளை கட்டி
எஃகுடை இரும்பின் உள்ளமைத்து வல்லோன்
சூடுநிலை உற்றுச் சுடர்விடு தோற்றம்
விசும்பாடு மரபின் பருந்தூறு அளப்ப 15

நலம்பெறு திருமணி கூட்டும் நற்றோள்
ஒடுங்கீர் ஓதி ஓண்ணுதல் கருவில்
எண்ணியல் முற்றி ஈரறிவு புரிந்து
சால்பும் செம்மையும் உளப்படப் பிறவும்
காவற் கமைந்த அரசுதுறை போகிய 20

வீறுசால் புதல்வன் பெற்றனை, இவணர்க்கு
அருங்கடன் இறுத்த செருப்புகல் முன்ப!
அன்னவை மருண்டனென் அல்லேன் நின்வயின்
முழுதுணர்ந் தொழுக்கும் நரைமூ தாளனை
வண்மையும் மாண்பும் வளனும் எச்சமும் 25

தெய்வமும் யாவதும் தவமுடையோர்க்கென
வேறுபடு நனந்தலை பெயரக்
கூறினை பெருமநின் படிமை யானே!

தெளிவுரை: யாகம் செய்வதற்குரிய வேதமுறைகளைக் கேட்டறிந்தாய். அவற்றிற்குரிய விரதங்களுள் குறைவின்றி ஒழுகினாய். வேள்வியினையும் இயற்றுவித்தனை. அதனால், தேவருலகத்தார் மிகவும் உவப்படைந்தனர். நுண்ணிய கருமணலைப்போல விளங்கும் தாழ்ந்து தொங்கும் கருமையான கூந்தலையுடையவள், திருமகளினும் வேறானவோர் திருமகளேபோல விளங்குபவள், நின் தேவி. அவள்தான் நின் கால்வழியானது நெடிது வாழும் பொருட்டாக—

கொடுமணம் என்னும் ஊரினிடத்தே செய்யப்பெற்ற தொல்வினையால் மாட்சியமைந்த அரிய பல அணிகலன்களையும், பந்தர் என்றும் ஊரிடத்தேயிருந்து பெற்றதும் பலரும் சிறந்ததெனப் புகழ்வதுமான முத்துக்களையும் கொண்டு அழகுபடுத்தினர். மலைப்பக்கத்தைச் சென்று அடைந்தும், குறுகிய பொற்றைப் பகுதிகளைத் தேடியலைந்தும், மானின் வகையினைத் தெரிந்தவர்கள் ஒரு கலைமானைப் பிடித்துக் கொணர்ந்தனர். சிதறிய செவ்விய புள்ளிகளைக் கொண்ட கலைமான் அது. கவைப்பட்ட மரக்கொம்பைப் போலத் தோன்றும் கவறுபட்ட கொம்பினையுடையது அது. அந்தப் புள்ளிமாளின் தோலையுரித்து, அதனின்றும் ஊனைப் போக்கினர். மற்றும் அதன்பாலுள்ள தீதானவற்றையும் களைந்தனர். எஞ்சிநின்ற தோலை வட்டமாக அறுத்து, ஒளிவீசுமாறு பாடஞ்செய்து கொண்டனர்.

அங்ஙனம் வட்டமாக அறுத்துக்கொண்ட மான்தோலின் ஓரங்களிலே மேலே சொல்லிய கலன்களையும் முத்துக்களையும் ஒன்றற்கொன்று இனமாகும்படி முறையே அமைத்துக் கட்டினர். கூர்மையுடைய இரும்பினாலே அத்தோலின் உட்புறத்தே வரைவதற்கு உரியவெல்லாம் முறையே வரைந்து செப்பமாக அமைத்தனர். அதன்பின்னர், யாகஞ் செய்யுஞ் தொழிலிலே வல்லோன், செவ்வொளி விட்டுவிட்டு ஒளிறும் தோற்றத்தையுடைய அதனை, நின் தேவியின் தோளிலே சூடுவதற்குரிய நிலையிலே அமையச் செய்தான். வானத்தே பறந்து திரியும் மரபினையுடைய பருந்துகள் அத்தோலை ஊனென மயங்கி அடையக் கருதின.

அத்தகைய மான்தோலோடு நல்ல ஒளிபெற்ற சிறந்த மணிகள் பொருந்திய அணிகலன்களையும் அணியப்பெற்ற நல்ல தோள்களை உடையவள்; சுருளமைந்த கூந்தலையும் ஒளியமைந்த நெற்றியினையும் உடையவள்; நின் தேவியாவாள். அவளுடைய கருவிலே தோன்றிப் பத்து மாதங்களும் முறையே நிரம்பியபின், பேரறிவு அமைந்தவனாகவும் மென்மையும் செம்மையும் உட்பட்ட பிற நற்குணங்கள் பொருந்தியவனாகவும், காவற்பணி பூண்பதற்கு அமைந்த அரசியல் துறைகளில் எல்லாம் முற்றவும் பயின்று நிரம்பியவனாகவும் விளங்கும் சிறப்புமிக்க நின் புதல்வனையும் நீதான் பெற்றனை! நின் குலம் தழைக்குமாறும் இவ்வுலகத்தோர் வாழுமாறும் நினக்குரிய அரிய கடமையைச் செய்து முடித்தவனாகிய, போரை விரும்புகின்ற தலைவனே!

நீதான் நல்ல புதல்வனை விரும்பி வேள்வி செய்தாய் என்றும், அதன் பயனாகப் புதல்வனைப் பெற்றனை என்றும் எண்ணி, யானும் மயங்குவேன் அல்லேன். நின்னிடத்தே பணி பூண்டு, தன் புரோகிதத்தொழிலை முழுதும் உணர்ந்து கடைப் பிடித்துவரும் நரைத்த முதியோனுக்கு, 'வண்மையும், மாண்பும், வளனும், மக்கட்பேறும், தெய்வ சித்தியும், மற்றும் பிறவான நன்மைகளும் முற்செய்த தவமுடையோர்க்கே வந்தடைவனவாகும்" என்று நீயே அறிவு கூறினை! அவனது கோட்பாட்டினும் வேறுபட்டதான பரந்த இடத்தையுடைய காட்டிற்குச் சென்று தவநெறியில் ஈடுபடுமாறும் நின் தவவொழுக்கச் செவ்வியாலே எடுத்துக் கூறினை! பெருமானே, அதனையே யானும் வியக்கின்றேன்!

சொற்பொருளும் விளக்கமும்: சாய் - நுண்மை: சாய்தலும் ஆம். அறம் - அறல்பட்ட கருமணல். இருங்கூந்தல் - கருங்கூந்தல் வேறுபடு. திரு - திருவினும் வேறானவோர் திருமகள். நின் வழி - நின் குடிமரபு. வாழியர் - வாழும் பொருட்டாக; செய்யியர் என்னும் வாய்பாட்டு வினையெச்சம். கொடுமணம் - ஓர் ஊர். பட்ட -செய்து கொள்ளப்பட்ட. வினைமாண் - தொழில் வினையாலே மாட்சியமைத்த. பந்தர் ஓர் ஊர். பலர்புகழ் - பலரும் புகழ்தலையுடைய. வரையகம் - மலைச்சாரற் பக்கம். குறும்பொறை - குறிய பொற்றைப் பகுதிகள். தெரியுநர் - மான்களின் இருப்பிடத்தையும் வகையையும் தெரிந்தோரான வேடர்கள். சிரறுதல் - சிதறுதல். பொறி - புள்ளி. கவைமரம் - கவறுபட்ட மரக்கொம்பு. கடுக்கும் - ஒக்கும். கவலைய - கவறுபட்டிருத்தலைடைய. புள்ளி இரலை - புள்ளிமான். தோல் ஊன் உதிர்த்து - தோலினின்றும் ஊனைப் போக்கி. தீது - குற்றம். திகழ்விடு - ஒளி விடுகின்ற. பாண்டில் - வட்ட வடிவாக அறுக்கப்பெற்ற தோல்.

மனைவி நல்ல மகனைப் பெறுவதற்கான ஒருவகைத் தெய்வச் சாந்தி முறை இப்பகுதியிற் கூறப் பெற்றுள்ளது.

பருதிபோகிய - வட்டமாக அறுத்துக்கொண்ட. புடை - ஓரங்கள். கிளைகட்டி - முத்துக்களையும் அணிகலன்களையும் இனமாகக் கட்டி. எஃகு - கூர்மை. இரும்பு - இரும்பாலாகிய கருவி. உள்ளமைத்து - உள்ளே கீறியமைத்து. 'வல்லோன்' அந்தச் சாந்தி செய்தலில் வல்லவன். சூடுநிலை - சூடுதற்கான நிலைமை. சுடர்விடு – ஒளிவிடுகின்ற. விசும்பாடு மரபு - விசும்பிற் பரந்து. பருந்து ஊறு அளப்ப - பருந்து அத்தோலை மாமிசமென்று கருதிக் கைப்பற்றுவதற்கு அடையக் கருத. ’எண்ணியல் முற்றி' என்றது பத்து மாதங்களும் நிறைந்து என்றதாம். ஈரறிவு - பேரறிவு; இம்மையறிவும் மறுமையறிவும். புரிந்து - அமைந்து. சால்பு - அன்பு, நாண், ஒப்புரவு, கண்ணோட்டம், வாய்மை முதலிய குணங்களின் நிறைவு. செம்மை - நடுநிலைமை. ‘அரசு துறைகள்’ படை குடி கூழ் அமைச்சு நட்பு அரண் போல்வன. வீறு - சிறந்த சிறப்பு. இவணர் - இவ்வுலகத்தார். கடன் - கடமை. இறுத்த - செய்து முடித்த. செறுப்புகல் - போரை விரும்பும். முன்பன் - வலியுடையோன்.

மருட்சி - மயக்கம்; வியப்பு. நின் வயின் - நின்னிடத்து. ஒழுக்கும் - கடைப்பிடித்துச் செலுத்தும். மூதாளன் - முதியவன். வண்மை - கொடை. மாண்பு - சிறந்த குணங்கள். வளன் - செல்வம். எச்சம் - மக்கள். வேறுபடு - நாட்டினின்றும் வேறுபட்ட காடு; புரோகித நெறியினின்றும் வேறுபட்ட தவநெறி. நனந்தலை - பரந்த இடத்தையுடைய காடு. படிமை - தவ்வொழுக்கப் பெருமை. இதனால், பெருஞ்சேரல் இரும்பொறை இராஜயோகியாக விளங்கினன் எனலாம்.


75. தீஞ்சேற்று யாணர் !

துறை:செந்துறைப் பாடாண் பாட்டு. வண்ணம் ஒழுகு வண்ணம். தூக்கு: செந்தூக்கு. பெயர்: தீஞ்சேற்று யாணர். சொல்லியது: பெருஞ்சேரலின் வென்றிச்சிறப்பு.

[பெயர் விளக்கம்: இனிய பாகானது இடையறவின்றிப் புதுவரவாய்க் கிடைப்பது என்னும் நயம் தோன்றத் ’தீஞ்சேற்று யாணர்' என்றதால், இப்பாட்டு இப் பெயரைப் பெற்றது.]


இரும்புலி கொன்று பெருங்களிறு அடூஉம்
அரும்பொறி வயமான் அனையை! பல்வேல்
பொலந்தார் யானை இயல்தேர்ப் பொறைய!
வேந்தரும் வேளிரும் பிறரும் கீழ்ப்பணிந்து
நின்வழிப் படாஅ ராயின் நென்மிக்கு 5

அறையுறு கரும்பின் தீஞ்சேற் றியாணர்
வருநர் வரையா வளம்வீங்கு இருக்கை
வன்புலந் தழீஇ மென்பால் தோறும்
அரும்பறை வினைஞர் புல்லிகல் படுத்துக்
கள்ளுடை நியமத்து ஒள்விலை கொடுக்கும் 10


வெள்வரகு உழுத கொள்ளுடைக் கரம்பைச்
செந்நெல் வல்சி அறியார் தத்தம்
பாடல் சான்ற வைப்பின்
நாடுடன் ஆடல் யாவணது அவர்க்கே

தெளிவுரை: பலவாகிய வேற்படை வீரர்களோடு, பொன்மாலை யணிந்த போர்க்களிறுகளையும், விரையச் செல்லும் தேர்களையும் உடையனான பொறையனே! நீதான் பெரிய புலியைக் கொன்றுவிட்டு, அதனையடுத்துப் பெரிய களிற்றையும் தாக்கிக் கொல்லும் வரிகளையுடைய வலிய சிங்கத்தினை ஒப்பாவாய்.

இருபெரு வேந்தராகிய சோழபாண்டியரும், வேளிர்குலத் தலைவர்களும், மற்றும் பிற குடித்தலைவர்களும் நின் திருவடிக் கீழ்ப் பணிந்து, நின் ஆணையின்படியே நடவாராயின்-

நெல்வளத்தால் மிகுதிப்பட்டதாகியும், அறுக்கலுற்ற கரும்பின் இனிய பாகமாகிய புதுவளத்தினை வருவார்க்கெல்லாம் அளவின்றிக் கொடுத்திருப்பதுமாகிய, வளம்மிகுந்த ஊர்களைக் கொண்டவான அவர் நாடுகள் எல்லாம் தம் மென்புலத் தன்மைகெட்டு வன்புலத் தன்மையைத் தழுவிவிடுமே! மருதப்பகுதியாகிய மென்புலப் பகுதிகள் தோறும் அரிய போர்ப்பறைகளைக் கொண்டோராகிய போர்த்தொழிலோர், அவ்வவ்விடங்களைக் காப்பவருடன் அங்கங்கே சிறுசிறு போர்களைச் செய்தபடியிருப்பர். அங்ஙனம் போரிட்டுப் பெற்ற பொருளைக் கள்ளுக் கடைகளையுடைய தெருவிடத்தே சென்று தாம் உண்ணும் கள்ளுக்குரிய சிறந்த விலையாகவும் தருவர். உழுது வெள்வரகு உணவையே கொள்ளும் வலிய காட்டுநிலப் பகுதிகட்குச் சென்று தங்கியிருத்தலையும் அப்பகைவர் அதன்பின் செய்பவராவர். செந்நெல் அரிசியாலான உணவினை உண்டறியாதாராகிய நிலையினையும் அடைவர். இத்தகைய நிலைமையை அடைந்துவிட்ட அவர்கட்குப் புலவர்களாற் பாடுதற்கு அமைந்த சிறந்த ஊர்களையுடையவான தங்கள் நாட்டினை ஒருங்கே ஆள்வதென்பதும் எவ்வாறுதான் இனி இயலுமோ?

சொற்பொருளும் விளக்கமும்: பணிந்து போகாத பகையரசர் தம்முடைய வளநாட்டை இழந்தவராக, எஞ்சிய தம்முடைய படைமறவருடன் காட்டுப் பகுதிக்குள் சென்று மறைந்துவாழும் புல்லிய வாழ்க்கையினராகிக் கழிவர் என்றனர். இரும்புலி - பெரிய புலி. பெருங்களிறு - பெரிய போர்க்களிறு. பொறி - கோடுகள். வயமான் - சிங்கம். சிங்கம் பெரும் புலியைக் கொன்றதாயினும், அதனாற் சோரிந்து களைத்துக் கிடந்துவிடாமல், அடுத்துவரும் பெருங்களிற்றையும் கொன்றுவிடும் ஆற்றலைப் பெற்றிருப்பது. அவ்வாறே பெருஞ்சேரலும் பகைவரை ஒவ்வொருவராக அழிக்கும் ஆற்றலையுடையவன் என்பதாம். அதனாற் சோர்வு கொள்ளான் என்பதும், வெற்றி அவனதேயாகும் என்பதும் இதனால் அறியப்படும். பொலந்தார் - பொன்மாலை. இயல்தேர்- விரையச் செல்லும் தேர். வேந்தர்-சோழபாண்டியர். அறையுறு கரும்பு - அறுத்தலையுடைய கரும்பு; இதுதான் நெல் வயல்களில் பயிருக்கு இடையிடையே கிளைத்திருப்பதாகலின், நெற்கதிர் முற்றி விளைவதற்கு முன்பாக இக்கரும்புகளை அறுத்துவிடுவர் என்பதாம். பயிரின் அறுவடைக்குப் பின்னர் கரும்பு பயன்தரும். அப்படி விளையும் துணைப்பயிரான கரும்பின் மிகுதியை, அதன் சாற்றை வருவார்க்கெல்லாம் வரையாது கொடுக்கும் வளமைச் சிறப்பாற் கூறினர். இருக்கை - ஊர்கள்; இருப்பிடங்கள். வன்புலம்-காட்டுப் பகுதி. மென்பால் - மருத நிலப்பகுதி. போரின் விளைவாலும் காப்பாரின்மையாலும் மென்புலம் வன்புலமாகத் திரியும் என்று கொள்ளுக. புல்லிகல் - சிறுசிறு சண்டைகள். நியமம் - கடைத்தெரு. 'ஒள்விலை' என்று சொன்னது, கள்ளுக்கு உரிய விலையைக் கணக்கிட்டுத் தராமல், தம்பாலுள்ள பொருளை அதற்குப் பன்மடங்கு அதிகமாகவே அள்ளித் தருதல். வெள்வரகு - வெள்ளை வரகு; வரகுத்தானியத்துள் இது ஒருவகை: இப்போது பரவலாகக் கிடைப்பது கேழ்வரகு; இது கருஞ்சிறப்பு நிறமானது. கொள்ளுடைக் கரம்பை - உணவாகக் கொள்ளுதலையுடைய காட்டுப்பகுதி நிலம்; தோற்றோர் தம் மருதநிலத்து ஊர்களை விட்டகன்று காட்டுப் பகுதிகளிற் சென்று மறைந்து வாழும் புல்லிய வாழ்வினர் ஆவர். பாடல் சான்ற - புலவராற் பாடுதல் பொருந்திய. வைப்பு-ஊர்.

இதனாற் பகையரசரது அழிவுகூறிப் பெருஞ்சேரலது வெற்றிச் சிறப்பை வியந்து உரைத்தனர்.

'வேந்தர்' என்றது சோழ பாண்டியரையும், ’வேளிர்' என்றது ஐம்பெரு வேளிரையும், 'பிறரும்' என்றது, இவரல்லாத பிற குறுநிலத்தலைவர்களையும், வேற்று நாட்டரசர்களையும் குறிக்கும் என்னலாம்.

76. மாசிதறு இருக்கை

துறை: செந்துறைப் பாடாண் பாட்டு. வண்ணம்: ஒழுகு வண்ணம். தூக்கு: செந்தூக்கு. இதனாற்சொல்லியது: பெருஞ்சேரலின் வென்றிச் சிறப்பு. [பெயர் விளக்கம்: பகைவரிடமிருந்து கொள்ளப்பெற்ற மாக்களை வரையாது வழங்கும் பாசறை இருக்கை எனச் சிறப்பித்துக் கூறியதனால், இப்பாட்டுக்கு இப்பெயர் தந்தனர்.]



களிறுடைப் பெருஞ்சமம் ததைய எஃகுயர்த்து
ஒளிறுவாள் மன்னர் துதைநிலை கொன்று
முரசுகடிப்பு அடைய அருந்துறை போகிப்
பெருங்கடல் நீந்திய மரம்வலி யுறுக்கும்
பண்ணிய விலைஞர் போலப் புண்ஒரிஇப் 5

பெருங்கைத் தொழுதியின் வன்துயர் கழிப்பி
இரந்தோர் வாழ நல்கி இரப்போர்க்கு
ஈதல் தண்டா மாசிற்று இருக்கை
கண்டனென் செல்கு வந்தனென் கால்கொண்டு
கருவி வானம் தண்தளி சொரிந்தெனப் 10

பல்விதை உழ்வின் சில்லே ராளர்
பனித்துறைப் பகன்றைப் பாங்குடைத் தெரியல்
கழுவுறு கலிங்கம் கடுப்பச் சூடி
இலங்கு கதிர்த் திருமணி பெறூஉம்
அகன்கண் வைப்பின் நாடுகிழ வோயே! 15

தெளிவுரை: மழைக்காலமானது கால் கொள்ளுதலைத் தொடங்கி, இடியும் மின்னலும் ஆகிய தொகுதிகளைக் கொண்ட மேகங்களும் குளிர்ந்த நீரைச் சொரியும். பலவாக விதைத்தலைத் தொடங்கும் உழவர் குடியினருள் சில ஏர்களையுடையோர், குளிர்ந்த நீர்த்துறைக்கண்ணே பூத்திருக்கும் பகன்றைப் பூவினாலே முறையாகத் தொடுக்கப் பெற்ற மாலையை அணிந்து கொள்வர். அங்ஙனம் அவர் சூடிக் கொண்டது, வெளுத்தலைப் பொருந்திய வெள்ளாடையை மேலே சூடிக்கொண்டது போன்றிருக்கும். அங்ஙனம் உழும் அவர்கள், உழவுசாலிடத்தே ஒளிக்கதிர் விளங்கும் சிறந்த மணிகளையும் பெறுவார்கள். இத்தகைய வளமுடையதும், அகன்ற இடத்தையுடையதுமான ஊர்களைக்கொண்ட சேர நாட்டிற்கு உரியோனே!

பகைவரின் போர்க்களிறுகளைக் கொண்ட பெரும் போரானது அழிவடையுமாறு, நீதான் நின் வேலினை உயர்த்தபடி, ஒளிசெய்யும் வாட்களை ஏந்திய அப் பகைமன்னர்கள் நெருங்கிப் போரிட்டு நின்ற அந்த நிலையினை அழித்து, அவரையும் கொன்றனை. நின் வெற்றிமுரசம் குறுந்தடியால் அடிக்கப்பெற்று முழக்கத்தைக் கொள்ளுமாறு, நீயும் அரிய போர்த்துறைகளை எல்லாம் சிறப்பாகச் செய்து முடித்தனை. பெருங்கடலிடத்தே சென்று வந்த மரக்கலத்தைப் பழுது பார்த்துப்பண்டங்களை விற்போரான வாணிகர், மீளவும் கடலிடைச் செல்லுதற்கேற்றவாறு அவற்றைச் செப்பனிட்டு வலிமைப்படுத்துதலைப்போல, போர் செய்தலினாலே புண்பட்ட பெருங்கையினையுடைய களிற்றுத்தொகுதியின் பெருந்துயரத்தை மருந்திட்டுப் போக்கி, அவற்றை மீளவும் போர்க் களத்திற்கேற்ற வலிமைபெறச் செய்தனை. நின்னிடத்தே வந்து இரந்தோருக்கு அவர் என்றும் வறுமை தீர்ந்து வாழுமாறு பெரும்பொருளை நல்கினை. மென்மேலும் வந்து இரப்போர்க்கும் ஈதலை ஒழியாதவனாக, பகைவரிடமிருந்து கொண்ட குதிரைகளை அவர்கட்கும் வாரி வழங்கினை. அத்தகைய நின் பாசறை இருக்கையினைக் கண்டு செல்வதற்காகவே, யானும் வந்தேன் பெருமானே!

சொற்பொருளும் விளக்கமும்: களிறுடைப் பெருஞ்சமம் களிறுகள் தம்முள் மோதிப் பொருகின்ற பெரும் போர்க்களப் பகுதி. எஃகு - வேல். துதைநிலை - நெருங்கி நிற்கும் நிலை. கொன்று - சிதைத்து அழித்து. கடிப்பு - குறுந்தடி. துறை - போர்த்துறை. போகி - செய்து முடித்து. நீந்திய - சென்று வந்த. மரம் - மரக்கலம். வலியுறுக்கும் - பழுது பார்த்து வலிமைப் படுத்தும். பண்ணிய விலைஞர் - பண்டங்களை விற்போர். புண் ஓரீஇப் - புண்களை மருந்திட்டுப் போக்கி, பெருங்கை - பெரிய கை. தொழுதி - கூட்டம். கழிப்பி - போக்கி. தண்டா- நீங்காத. சிதறு - வாரி வழங்குகின்ற. இருக்கை - பாசறையிருக்கை. செல்கு - செல்லும் பொருட்டு. கால்கொண்டு - மழை கால்கொண்டு. கருவி - இடி மின்னனாலாகிய தொகுதி. வானம் - மேகம். ஏராளர் - ஏர்களை உடையோர். பகன்றை - நீர்க் கொடிவகையுள் ஒன்று; வெள்ளைப்பூ பூப்பது. இப் பூமாலையை அவர் கழுத்திற் சூடிக் கொண்டது, வெளுத்த வெள்ளுடையைச் சூடியது போலத் தோற்றும் என்க. பாங்கு - முறைமை. தெரியல் - மாலை. மணி - செம்மணி. உழவர் - உழுது பயன் கொள்பவர்; அவர் அத்தொழிலைச் செய்யுங்காலத்தே எதிர்பாராதே கிடைக்கும் செம்மணிகளையும் பெறுவர் என்பதாம்; இது சேரநாட்டின் பலவகைச் செழுமையைக் குறிப்பதாம்.


77. வென்றாடு துணங்கை !

துறை: உழிஞை அரவம். வண்ணம்: ஒழுகு வண்ணம். தூக்கு: செந்தூக்கு.

[பெயர் விளக்கம்: ஊர்களிலே யாடும் துணங்கை போலன்றிப் போர்க்களத்தே பகைவரை வென்று ஆடிய துணங்கை என்ற சிறப்பால், இப்பாட்டு இப்பெயரைப் பெற்றது. “பொதுப்படப் படை எழுச்சி கூறியதனை உழிஞை அரவம் என்றது, அப்படை எழுங்காலத்துக் கோட்டை மதில்மீதிற் போர்குறித்து எழுந்ததை ஒரு காரணத்தால் அறிந்து போலும்” என்பது பழையவுரை.]


எனைப்பெரும் படையனோ சினப்போர்ப் பொறையன்
என்றனி ராயின் ஆறுசெல் வம்பலிர்
மன்பதை பெயர அரசுகளத் தொழியக்
கொன்றுதோள் ஓச்சிய வென்றாடு துணங்கை
மீபிணத் துருண்ட தேயா ஆழியின் 5

பண்ணமை தேரும் மாவும் மாக்களூம்
எண்ணற் கருமையின் எண்ணின்றோ இலனே!
கந்துகோள் ஈயாது காழ்பல முறுக்கி
உகக்கும் பருந்தின் நிலத்துநிழல் சாடிச்
சேண்பரல் முரம்பின் ஈர்ம்படைக் கொங்கர் 10

ஆபரந் தன்ன செலவின்பல்
யானை காண்பல்அவன் தானை யானே!

தெளிவுரை: வழியே செல்லும் புதியோரே! “சினத்தோடு போர்ச்செயலிலே ஈடுபடுவோனான நும் பெருஞ்சேரல் இரும்பொறை எத்துணைப் பெரும் படையணிகளை உடையவனோ?” என்று கேட்பீராயின்—

முன்பு, பல பகையரசரோடும் செய்த போர்களிலே. அவர்தம் படைமறவர் கூட்டம் அழிந்தொழியவும், அவ்வரசர்களும் அக்களங்களில்தானே செத்தொழியவும் கொன்று, அவ்வெற்றியின் களிப்பினாலே தோள்களை உயர்த்து வீசியாடுகின்ற துணங்கைக் கூத்தினை ஆடியவர் அவன் படை மறவர்கள். அப் பிணக்குவியல்களின் மேலாக உருண்டு சென்றும் தேய்ந்து போகாத சக்கரங்களை யுடைய, பண்ணுதலமைந்த தேர்களும், குதிரைகளும், காலாட்களும் இவ்வளவென எண்ணிக் காண்பதற்கான அருமையினை உடையவை. ஆதலின், யானும் அவற்றை எண்ணுதலில் ஈடுபட்டிலேன்.

கட்டுத் தறியின்கண்ணே கட்டுப்பட்டு அடங்கி நில்லாதனவும், குத்துக்கோல்கள் பலவற்றையும் அழித்தனவும். உயரத்தே வானிற் பறந்து செல்லும் பருந்துகளின் நிழல் நிலத்திலே விழக் காணின் அதனையும் தாக்குவதுமான, பரற் கற்களையுடைய உயர்ந்த வன்னிலத்திலே வாழும், நிலத்தைத் தோண்டும் படையினைக் கைக்கொண்டு செல்லும் கொங்கர்களது பசுக்கள் பரந்து செல்வதைப் போன்று பரந்து செல்லும் செலவினைக் கொண்டதுமான, பல போர் யானைகளை மட்டும் அவனது தானையிடத்தே யான் கண்டுள்ளேன்.

சொற்பொருளும் விளக்கமும்: சினப்போர் - சினத்தோடு செய்யும் போர்த்தொழிலையுடைய. பொறையன் - சேரன். ஆறு - வழி. வம்பலிர் - புதியரே. மன்பதை - காலாட்படை யினர். பெயர் - அழிய; இவ்வுலகைவிட்டு மேலுலகம் போய்ச் சேர. ஒழிய - செத்து அழிய. துணங்கை - கூத்து: தோள் ஓச்சியாடும் ஒருவகைக் களிக்கூத்து. மீபிணத்து - பிணத்து மேல். உருண்ட - உருண்டு சென்ற. ஆழி - சக்கரம். பண் அமை - பண்ணுதல் அமைந்த; பண்ணுதல் - அலங்கரித்தல். மா - குதிரை. மாக்கள் - காலாட்படையினர். கோள் ஈயாது - கட்டுப்பட்டு நில்லாது. கந்து - கட்டுத்தறி. காழ் - குத்துக் கோல். முருக்கி - பறித்து அழித்து. உகக்கும் - உயர்ந்து பறக்கும். சாடல் - மோதுதல். சேண் - உயர்ந்த. பரல்- பருக்கைக் கற்கள். முரம்பு - வலிய மேட்டு நிலம். ஈர்ம் படை - நிலத்தைத் தோண்டுதற்கான குந்தாலி போன்ற படை. கொங்கர் அளவற்ற பசுக்களை உடையோராயிருந்தனர்; இதுபற்றிச் சேரனின் யானைப்படையின் அளவைப் பரந்து செல்லும் அப்பசுக்களின் மிகுதியோடு ஒப்பிட்டுக் கூறினர். இதனாற் பெருஞ்சேரலது பெரும்படையினைப் பற்றியும் உரைத்தனர்.

78. பிறழ நோக்கியவர்!


துறை: விறலியாற்றுப்படை. வண்ணம்: ஒழுகு வண்ணம். தூக்கு: செந்தூக்கு. இதனாற்சொல்லியது: பெருஞ்சேரலிரும்பொறையின் வென்றிச் சிறப்பு.

[பெயர் விளக்கம்: தம் சினத்தினது மிகுதியாலே சேரனின் படைத்தோற்றத்தினை முறையாக நோக்கியுணராது பலபடப் பிறழ்நோக்கி, அதனால் தம் அழிவுக்குத் தாமே காரணமாகிய பல்இயம் உடையவர் எனப் பகைவரைச் சிறப்பித்தனர்; இதனால் இப்பாட்டு இப்பெயரைப் பெற்றது. விறலியைப் பெருஞ்சேரல் இரும்பொறையிடத்தே ஆற்றுப் படுத்தியமையால் விறலியாற்றுப்படை ஆயிற்று.]



வலம்படு முரசின் இலங்குவன விழூஉம்
அவ்வெள் ளருவி உவ்வரை யதுவே
சில்வளை விறலி செல்குவை யாயின்
வள்ளிதழ்த் தாமரை நெய்தலொடு அரிந்து
மெல்லியல் மகளிர் ஒல்குவனர் இயலிக் 5

கிளிகடி மேவலர் புறவுதொறும் நுவலப்
பல்பயன் நிலைஇய கடறுடை வைப்பின்
வெல்போர் ஆடவர் மறம்புரிந்து காக்கும்
வில்பயில் இறும்பின் தகடூர் நூறிப்
பேஎம் மன்ற பிறழநோக் கியவர் 10

ஓடுறு கடுமுரன் துமியச் சென்று
வெம்முனை தபுத்த காலைத் தம்நாட்டு
யாடுபரந் தன்ன மாவின்
ஆபரந் தன்ன யானையோன் குன்றே.

தெளிவுரை: சிலவாகிய வளையல்களை அணிந்த விறலியே! மெல்லிய இயல்பினரான மகளிர் அசைந்தசைந்து நடந்தவர்களாகச் சென்று மருதநிலத்துள்ள வள்விய இதழ்களையுடைய தாமரையின் மலர்களை, அயலேயுள்ள நெய்தற் பூக்களோடும் சேர்த்து அரிவார்கள். பின்னர்ப் புனத்தே வந்து படியும் கிளிகளை ஓட்டுவாராகச் செல்லும் விருப்பினராய்ப் புனத்திடந்தோறும் சென்று, அதற்கான குரல்களை எழுப்பு வர். இத்தகைய பலவகைப் பயன்களும் ஒருங்கே நிலைபெற்ற முல்லைநிலத்தின் கண்ணே அமைந்த ஊர்களையுடையதும், வெல்லும் போர்த்தொழிலையுடைய ஆடவர்கள் மறத்தையே விரும்பியவராகக் காத்துப் பேணுவதும், வில் வீரர்கள் நெருங்கியுள்ள காவற் காட்டை உடையதுமான தகடூர்க் கோட்டையை அழித்தவன் சேரமான். தாம் கொண்ட சினமிகுதியாலே சேரனின் படைத்திறனைப் பிறழ நோக்கியும், அச்சத்தால் நோக்கியும், அவனை எதிர்த்துநின்ற தகடூரினர், பலவகை வாத்தியங்களையும் உடையவர்கள். எதிரிட்ட போர்க்களங்களில் எதிர்த்த பகைவரைத் தோற்று ஓடச்செய்யும் கடுமையான வலிமையும் கொண்டவர்கள். அவர்களின் அந்த வலிமையானது அழியும்படியாக அவனும் அவர்மேற் படைகொண்டு சென்றான். கொடிய போர்முனையிலே அவர்களை அழித்தான். அங்ஙனம் அவன் அழித்த வேளையிலே அப்பகைவர் நாட்டிலேயுள்ள ஆடுகள் காப்பாரற்ற வையாய்ப் பரந்து நின்றாற்போல எங்கணும் பரந்து தோன்றும் குதிரைகளையும், அவர்களின் பசுக்கள் எங்கணும் பரந்து நின்றாற் போல விளங்கும் யானைகளையும் உடையவன் சேரமான். அவன் தங்கியிருக்கும் குன்றமானது—

வெற்றி பொருந்திய முரசினைப்போல ஒலியோடு விளக்கம் உடையனவாக வீழ்ந்து கொண்டிருக்கும் அழகிய வெள்ளிய அருவிகளை உடையதும், உவ்வெல்லையில் உள்ளதுமாகிய அதுவேயாகும். நீயும் அவ்விடத்தே செல்வாயாயின் அவனைக் காண்பாயாக!

சொற்பொருளும் விளக்கமும்: வலம் - வெற்றி. இலங்குவன விழூஉம் - விளக்கம் உடையனவாக வீழ்ந்துகொண்டிருக்கும். அவ்வெள்ளருவி - அழகிய வெள்ளிய அருவிகள். சில்வளை - சிலவாகிய வளைகள். வள்ளிதழ் - வளவிய இதழ்கள். மெல்லியல் - மென்மைத் தன்மை. ஓக்குதல் - அசைந்தசைந்து நடத்தல். இயலி - நடந்து. கிளிகடி மேவலர் - கிளிகடிதலை விரும்பியவராக. புறவு - முல்லை நிலம். நுவல - கிளியோப்புங் குரல்களை எழுப்ப. பல்பயன் - பலவகைப் பயன்கள்; தாமரை மருதப் பயனையும், நெய்தல் நெய்தற் பயனையும், கிளிகடிதல் முல்லைப்பயனையும் குறித்தன. கடறு - முல்லைநிலக் காடு. வைப்பு - ஊர். வெல்போர் ஆடவர் - வெற்றிப்போர் செய்த புகழுடைய ஆடவர். மறம் புரிந்து காக்கும் - மறச்செயலை விரும்பியவராகக் காத்து நிற்கும். வில்பயில் இறும்பு வில்வீரர் நெருங்கியுள்ள காவற்காடு. தகடூர் - தகடூர்க்கோட்டை; இது அதிகமானுக்கு உரியதாயிருந்தது. ஓடுறு கடுமுரண் - பகைத்து வந்தார் தோற்று ஓடுதற்குச் செய்யுமளவு கொண்ட கடுமையான வலிமை. துமிய - அழிய. பேஎம் - அச்சம். இயவர் - இயங்களை உடையோர்; போர் முரசமும் வெற்றி முரசமும் உடையோர்.

தகடூரின் பெருவளத்தையும், அதனைக் காத்து நின்ற மறவரின் பெருமறத்தையும் கூறி, அவர்தாம் சேரமானின் படைவலிமையைப் பிறழ நோக்கியதனாலேயே அழிந்தனர் எனவும் உரைத்தனர். அவ்வெற்றியோடு அவன் பாசறையிடத்தே இருத்தலால், அவனிடஞ் சென்றால் நீயும் பெரிதான பரிசில்களைப் பெறுவாய் என்று ஆற்றுப்படுத்தியதுமாம்.


79. நிறம்படு குருதி !

துறை: செந்துறைப் பாடாண் பாட்டு. வண்ணம்: ஒழுகுவண்ணம். தூக்கு:செந்தூக்கு. இதனாற் சொல்லியது: பெருஞ்சேரலின் பல குணங்களும் ஒருங்கு புகழ்ந்து வாழ்த்தியது.

[பெயர் விளக்கம்: நிறம்படு குருதி அல்லாத இடங்களிற் குருதி கொள்ளாமையின், நிறங்களைத் திறக்க அவ்விடத்தே உண்டான குருதி என்றதன் சிறப்பாலே, இதற்கு இப் பெயர் ஆயிற்று.]



உயிர்போற் றலையே செருவத் தானே
கொடைப்போற் றலையே இரவலர் நடுவண்
பெரியோர்ப் பேணிச் சிறியோரை அளித்தி
நின்வயின் பிரிந்த நல்லிசை கனவினும்
பிறர்நசை யறியா வயங்குசெந் நாவின் 5

படியோர்த் தேய்த்த ஆண்மைத் தொடியோர்
தோளிடைக் குழைந்த கோதை மார்ப
அனைய அளப்பருங் குரையை அதனால்
நின்னொடு வாரார் தம்நிலத்து ஒழிந்து
கொல்களிற்று யானை எருத்தம் புல்லென 10

வில்குலை யறுத்துக் கோலின் வாரா
வெல்போர் வேந்தர் முரசுகண் போழ்ந்தவர்
அரசுவா அழைப்பக் கோடறுத் தியற்றிய


அணங்குடை மரபின் கட்டில்மேல் இருந்து
தும்பை சான்ற மெய்தயங்கு உயக்கத்து 15

நிறம்படு குருதி புறம்படின் அல்லது
மடையெதிர் கொள்ளா அஞ்சுவரு மரபின்
கடவுள் அயிரையின் நிலைஇக்
கேடில வாக பெருமநின் புகழே!

தெளிவுரை: விளங்குகின்ற செம்மையிலே செல்லும் நாவினையும், வணங்காத பகைவரை அழித்த ஆண்மையினையும், தொடியுடையவளான நின் தேவியது தோள்களைத் தழுவுங்காலத்தே அதனாற் கசங்கி வாடிய மாலை விளங்கும் மார்பினையும் உடையோனே!

நீதான் போர்க்களத்திடத்தே நின் உயிரைப் போற்றிக் காக்கக் கருதாது, பகைவரை மேற்சென்று அழித்தலையே கருத்தாகக் கொண்டு செயற்படுவாய். நின்னை வந்து இரந்து நிற்பாரின் நடுவே அவர்கட்குக் கொடுத்தலாற் குறையும் பொருளைப்பற்றியாதும் கருதி, அதனைக் காத்துப் பேணுதற்கு நினைக்கமாட்டாய். நின்னினும் பெரியோரைப் பேணிக் காத்தும், 'நினக்குச் சிறியோரை அருள்செய்து காத்தும் வருபவன் நீ. நின்னிடத்தினின்றும் பிரிந்த நினது நல்ல புகழானது, தன் கனவினும் பிறரை விரும்பி அவரிடத்தே சென்று நிற்றலை அறியாது. இத்தகைய அளவிடற்கரிய சிறப்புக்களை உடையவனே!

நின்னோடும் ஒன்றுபட்டு வராதவர்கள், தம் நாட்டிடத்தேயே தங்கியிருப்பார்கள். அவர் போர்க்களத்தே ஏறியமர்ந்து வருகின்ற கொல்யானையின் பிடரிடம் பொலிவழிந்து போகுமாறு, அம்மன்னரை நீயும் கொல்வாய். அவருடைய வில்லின் நாணையும் அறுத்துச் சிதைப்பாய். அதுகண்டும் நின் ஆட்சியின் கீழாகப் பணிந்து வராதவரும், முன்பே பல வெற்றிப்போரைச் செய்தோருமாகிய வேந்தரின் வெற்றி முரசங்களின் கண்களைப் பிளந்தாய். அவரது பட்டத்து யானைகள் கதறுமாறு அவற்றின் கொம்புகளை அறுத்தாய். அவற்றைக் கொண்டு செய்தமைத்ததும், தெய்வத்தன்மை பொருந்திய இயல்பினையுடையதுமான கட்டிலைச் செய்தாய். அக்கட்டிலின்மேல் இருந்தவாறு, தும்பைப் போரின் தன்மை நிரம்பிய போரைச் செய்து வென்றமையால் தம் உடல் அசைகின்ற சோர்வினிடத்தே, தம் மார்பினைக் கிழித்து அதனின்றும் வெளிப்படும் குருதி யானது பலிபீடத்தின்மேல் வீழ்ந்தால் அல்லது, தனக்கிட்ட படையலை ஏற்றுக்கொள்ளாதவளும், அஞ்சத்தக்க இயல்பினையுடைய கடவுளுமான அயிரைமலையிலுள்ள கொற்றவைக்கு நின் மறவர் பலியூட்டுச் செய்வர். அத்தகைய கொற்றவையாள் வாழ்கின்ற அயிரை மலையைப்போல, நின் புகழும் என்றும் அழியாதாகி நிலைபெறுக, பெருமானே!

சொற்பொருளும் விளக்கமும்: செருவத்து - போர்க் களத்து. கொடை -கொடுத்தலாற் குறைபடும் செல்வம். பெரியோர் - வயதின் முதியோர். அளித்தி-அருள் செய்வாய். நல்லிசை – நற்புகழ். நசை - விருப்பம். வயங்குதல்- விளங்குதல்; செந்நா - செல்விய நா; அஃதாவது வாய்மையே பேசும் நா. படியோர் - படியாதாரான பகைவர். கொடியோர் - வளையணிந்த மகளிர்; என்றது அவன் தேவியை. கோதை - மாலை. 'குரை': அசைநிலை. 'வாரார்': முற்றெச்சம். நிலத்து - நாட்டில். எருத்தம் பிடரி. புல்லென - பொலிவற்றுப் போக.குலை-நாண். கோலின் வாரா - செங்கோன்மைக்கண் உட்பட்டு வாராத. கண் - அடிக்குமிடம். போழ்ந்து - கிழித்து. அரசுவா - பட்டத்து யானை. அழைப்ப - வருத்தத்தாற் கதற. கோடு - கொம்பு. அணங்கு - தெய்வத் தன்மை. உயக்கம் - சோர்வு. நிறம் - மார்பு. புறம் - படையலின் மேற்பக்கம். மடை - படையல்; சமைத்த சோறு. எதிர்கொள்ளா - ஏற்றுக்கொள்ளாத. கடவுள் - அயிரை மலையிலுள்ள கொற்றவை. அயிரை - அயிரை மலை; இதனை ஐவர் மலை என்பர் இந்நாளில்.

'நின் புகழ் கேடிலவாக' என்றது, 'நீயும் கேடற்று நெடிது வாழ்க' என்றதாம்.


80. புண்ணுடை எறுழ்த்தோள்!

துறை: வஞ்சித்துறைப் பாடாண் பாட்டு. வண்ணம்: ஒழுகுவண்ணம். தூக்கு: செந்தூக்கும் வஞ்சித்தூக்கும்.

[பெயர் விளக்கம்: எப்பொழுதும் பொருது புண் அறாத வலிய தோள் என்ற சிறப்பால், இப்பெயர் இப் பாட்டிற்கு அமைந்தது.]


வான்மருப்பின் களிற்றியானை
மாமலையின் கணங் கொண்டவர்
எடுத்தெறிந்த விறன்முரசம்
கார்மழையின் கடிதுமுழங்கச்
சாந்துபுலர்ந்த வியன்மார்பின் 5

தொடிசுடர்வரும் வலிமுன்கைப்
புண்ணுடை எறுழ்த்தோள் புடைலவங் கழற்கால்
பிறக்கடி ஒதுங்காப் பூட்கை ஒள்வாள்
ஒடிவில் தெவ்வர் எதிர்நின்று உரைஇ
இடுக திறையே புரவெதிர்ந் தோற்கென 10

அம்புடை வலத்தர் உயர்ந்தோர் பரவ
அனையை ஆகன் மாறே பகைவர்
கால்கிளர்ந் தன்ன கதழ்பரிப் புரவிக்
கடும்பரி நெடுந்தேர் மீமிசை நுடங்குகொடிப்
புலவரைத் தோன்றல் யாவது சினப்போர் 15

நிலவரை நிறீஇய நல்லிசைத்
தொலையாக் கற்பநின் தெம்முனை யானே?

தெளிவுரை: வெள்ளிய கொம்புகளையுடைய களிற்று யானைகள், பெரிய மலைகளைப்போலக் கூட்டங் கூட்டமாகத் திரண்டு நிற்கவும், குறுந்தடிகளை எடுத்து அடிக்கப்பெற்ற வெற்றி முரசங்களின் ஒலியானது கார்காலத்து மேகங்களின் இடிமுழக்கத்தைப் போன்று மிகுதியாக ஒலிக்கவும் -

பூசப்பெற்ற சந்தனச் சாந்து உலர்ந்து போய்விட்ட பரந்த மார்பினையும், வீரவளைகள், ஒளி சுடர்விடும் வலியமைந்த முன்னங் கைகளையும், விழுப்புண் பொருந்திய வலிய தோள்களையும், பனம்பூ மாலையினையும், வீரக்கழல்கள் விளங்கும் கால்களையும், முன்வைத்த காலைப் பின்வைத்து ஒதுங்கிப்போகாத மேற்கோளினையும், ஒளியமைந்த வாளிளையும் உடையவராகவும், போரில் மனந்தளராத தன்மையராகவும் விளங்குபவர், நின் பகைவர்.

அத்தகையவரான அவர்க்கு எதிராகச் சென்று நின்று "நும்மைக் காக்கும் பாதுகாவற் பணியை மேற்கொண்டோனாகிய எம் இறைவனுக்கு நீரும் திறைஇட்டுப் பணிவீராக" என்று சொல்லி, உயர்ந்த பண்புடையாராகிய நின் தூதுவர் நின்னுடைய அத்தன்மையாதலைப் பொருந்திய அருங்குணங் களையெல்லாம் எடுத்துப் பாராட்டிக் கூறுவார்கள். நீதான் படையெடுத்துச் சென்றபோது, அவ்விடத்தே எழுகின்ற கொடிய போர்முனையிடத்தே சினங்கொண்டு போரியற்றி. இவ்வுலகத் தெல்லைவரைக்கும் நிலைபெறச்செய்த நற்புகழையுடைய அழியாத உளத்திண்மையினை உடையவனே! இவற்றைக் கேட்டும் தெளிவுறாது நின்னைப் பகைத்த நின் பகைவரது நெடிய தேர்கள் மிகவிரைவாகச் செல்லக்கூடிய வையானாலும், அவற்றிற் பூட்டப்பெற்றுள்ள குதிரைகள் வேகங்கொண்டெழுந்த காற்றினும் கடுவிரைவோடு செல்லக் கூடியவையானாலும், அவரது தேர்களின் மிகஉயர்ந்த உச்சியிலே அசைந்தாடும் அவர்தம் கொடியானது, இனியும் அவர்தம் நாட்டின் எல்லையுள்ளே விளங்கித் தோன்று மென்பதுதான் எவ்வாறு கைகூடுமோ?

சொற்பொருளும் விளக்கமும்: வான் மருப்பு - வெண் கொம்பு. மாமலை-பெருமலை. கணங்கொண்டு - கூட்டங் கொண்டு. களிற்றியானை -களிறாகிய யானை; இருபெய ரொட்டுப் பண்புத்தொகை. எறிந்த - அடித்த. விறல் - வெற்றி; முன்னர்ப் பெற்ற வெற்றிகள். மழை - மேகம். கடிது - மிகுதியாக. சாந்து - சந்தனச் சாந்து. புலர்ந்த – உலர்ந்த; சாந்து உலர்தல் நின்மேற்கொண்ட கடுஞ்சினத்தின் வெம்மையால். வியன் - பரந்த. தொடி - வீர வளை. புண் - போர்ப்புண். எறுழ் - வலி, புடையல் - பனம்பூ மாலை. பிறக்கு - பின். பிறக்குஒதுங்கல் - பின்னிடல். பூட்கை - மேற்கோள். ஒடிவில் - மனமொடிதலில்லாத. தெவ்வர் - பகைவர். புரவு - பாதுகாத்தலை. எதிர்ந்தோன் - மேற்கொண்டவன்; பெருஞ்சேரல் இரும்பொறை. வலத்தர் - வலிமையாளர். உயர்ந்தோர் - உயர்ந்த ஆற்றலுடைய தூதர். பரவ - நின் புகழைப் பாராட்டிக் கூற. ஆகன்மாறு- ஆதலினாலே.

'பகைவரது நாட்டெல்லையுள், அவர் தேரின்மேல் அசைந்தாடிப் பறக்கும் கொடிதான் இனிப் பறக்குமோ' என்றது. இனி, அவர்தாம் அழிந்துபோவது உறுதியல்லவோ எனச் சேரமானின் வெற்றிமேம்பாட்டை வியந்து போற்றியதாம்.

'விறல் முரசம்' என்றது. வெற்றி முரசினை. இது பகையரசரை வென்று, அவரது காவன் மரத்தை அறுத்துக் கொணர்ந்து செய்துகொள்ளப் பெறுவது. இதற்குப் பூசைகளும் பலியூட்டுக்களும் செய்து வழிபாடாற்றிப் போற்றுவதும் பண்டைய மரபாகும். இம்முரசத்தின் முழக்கொலியைக் கேட்டபோதிலேயே பகையரசர் பலரும், தமக்கும் அழிவு வந்ததெனக் கலங்கி நடுங்கியவராகத் திறைசெலுத்திப் பணிவதும் உண்டு. தன் முழக்கொலியாலேயே இப்படி வெற்றி தேடித் தருதலினாலே ’வெற்றி முரசம்' என்றனர் என்பதும் பொருந்தும்.

இதன் முழக்கொலிக்குக் கார்மழையின் கடிதான இடி முழக்கத்தை உவமை கூறினதும் சிறப்பாகும். இடிமுழக்கங் கேட்டபோது பாம்புகள் அச்சமுற்றவையாய் நடுங்கித் தம் வலியிழப்பதுபோலப், பகை மன்னரும் சேரலாதனின் போர் முரசொலி கேட்டதும் மனம் நடுங்கிப் பணிவர் என்பதாம்.

"பூட்கை" என்றது மனவூக்கத்தை. 'பூட்கை ஒள்வாள்’ என்றது. ஒள்ளிய வாளையுடையவரான படைமறவரது மனவூக்கத்தை.

’புண்ணுடை எறுழ்த்தோள்' என்றது புண்களையுடைய வன்மையைப் பெற்ற தோள்களை எப்பொழுதும் போர் செய்தலாலே புண்ணுடைத்தாயிருக்கும் தோள்கள் என்றதனால். அவரது போர்விருப்பத்தையும், போராண்மை மிகுதியையும் உரைத்துள்ளனர். இப்படிப்பட்ட மறவர்களை உடையவனாதலின், அவன் வெற்றி பெறுதலும் உறுதி என்பதை உணர்த்தினர்.

'கற்பு' என்பது திண்மையைக் குறித்ததாகும். 'திண்மை' மனத்திண்மை. குறிக்கோளிலே அசைக்கமுடியாத உறுதி கொண்டவன் சேரமான் என்பதனால், அவனுடைய புகழும் என்றும் குன்றாதே நிலைபெற்றிருக்கும் என்றனர்.

இந்தப் பெருஞ்சேரல் இரும்பொறை தானே பெரும் புலவனாக விளங்கியவன் என்பதும், இவனே பாலைபாடிய பெருங்கடுங்கோ என்பதும் சிலர் கொள்ளும் முடிபாகும். இவனுடைய பாலைப் பாட்டுக்கள் இவன் புலமையினை வலியுறுத்துவனவாகும்.