பதிற்றுப்பத்து/நான்காம்பத்து

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

பாடப்பட்டோன்: களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரல்

பாடியவர்: காப்பியாற்றுக் காப்பியனார்

பாட்டு - 31[தொகு]

குன்றுதலை மணந்து குழூஉக்கடல் உடுத்த
மண்கெழு ஞாலத்து மாந்தர் ஓர்ஆங்குக்
கைசுமந்(து) அலறும் பூசல் மாதிரத்து
நால்வேறு நனம்தலை யொருங்கெழுந்(து) ஒலிப்பத்
5  தெள்உயர் வடிமணி எறியுநர் கல்லென
உண்ணாப் பைஞ்ஞிலம் பனித்துறை மண்ணி
வண்(டு)ஊது பொலிதார்த் திருஞெமர் அகலத்துக்
கண்பொரு திகிரிக் கமழ்குரல் துழாஅய்
அலங்கற் செல்வன் சேவடி பரவி
10 நெஞ்சுமலி உவகையர் துஞ்சுபதிப் பெயர
மணிநிற மையிருள் அகல நிலாவிரிபு
கோடுகூடு மதியம் இயல்உற் றாங்குத்
துளங்குகுடி விழுத்திணை திருத்தி முரசுகொண்(டு)
ஆண்கடன் நிறுத்தநின் பூண்கிளர் வியன்மார்பு
15 கருவி வானம் தண்தளி தலைஇய
வடதெற்கு விலங்கி விலகுதலைத்(து) எழிலிய
பனிவார் விண்டு விறல்வரை அற்றே
கடவுள் அஞ்சி வானத்(து) இழைத்த
தூங்(கு)எயில் கதவம் காவல் கொண்ட
20 எழூஉநிவந்(து) அன்ன பரேர்எறுழ் முழவுத்தோள்
வெண்திரை முந்நீர் வளைஇய உலகத்து
வண்புகழ் நிறுத்த வகைசால் செல்வத்து
வண்டன் அனையைமன் நீயே வண்டுபட
ஒலிந்த கூந்தல் அறம்சால் கற்பின்
25 குழைக்குவிளக்(கு) ஆகிய அவ்வாங்(கு) உந்தி
விசும்புவழங்கு மகளிர் உள்ளும் சிறந்த
செம்மீன் அனையள்நின் தொல்நகர்ச் செல்வி
நிலன்அதிர்(பு) இரங்கல ஆகி வலன்ஏர்பு
வியன்பணை முழங்கும் வேல்மூ(சு) அழுவத்(து)
30 அடங்கிய புடையல் பொலம்கழல் நோன்தாள்
ஒடுங்காத் தெவ்வர் ஊக்(கு)அறக் கடைஇப்
புறக்கொடை எறியார்நின் மறப்படை கொள்ளுநர்
நகைவர்க்(கு) அரணம் ஆகிப் பகைவர்க்குச்
சூர்நிகழ்ந் தற்றுநின் தானை
35 போர்மிகு குருசில்நீ மாண்டனை பலவே. (31)


பெயர்: கமழ்குரல் துழாய்
துறை: செந்துறைப் பாடாண்பாட்டு
வண்ணம்: ஒழுகு வண்ணம்
தூக்கு: செந்தூக்கு


  • செங்கைப் பொதுவன் விளக்கம்
சேரல் வேந்தனின் சிறப்புக்கள் இதில் பேசப்படுகின்றன.
மண்ணாலாகிய ஞாலத்துக்குக் குன்றுகள் பின்னிப் பிணைந்திருக்கும் (மணந்த) தலைகள். கடல் அந்த ஞாலத்துக்கு ஆடை.
உலகின் நாலாப் பக்கங்களிலும் உள்ள மக்கள் ஒன்று கூடிக் கைகூப்பித் தொழுது ஒலி எழ்ப்புகின்றனர். தொங்கும் மணியை அடிக்கின்றனர். வரம் வேண்டி உண்ணாமல் பனிபோன்ற குளிர் நீர் ஓடும் ஆற்றுத்துறைக்குச் சென்று நீராடுகின்றனர். அங்கே திருமால் உருவச்சிலை. திருமால் மார்பில் வண்டு மொய்க்கும் மலர்மாலை. மற்றும் கண்ணைக் கவர்ந்து மணம் கமழும் துளசிமாலை. அவன் துளசிமாலைச் செல்வன்
அரசன் சேரலுக்கு அகன்ற மார்பு. அதில் பூண்டிக்கும் அணிகலன்கள் கிளரந்து ஒளி வீசின. அவன் குடிமக்கள் வாழ்வில் ஒரு ஆட்டம், அதாவது தள்ளாட்டம். ஊரை விட்டு வெளியேறிக்கொண்டிருந்தனர். சேரல் முரசு முழக்கத்தோடு அவர்களைத் திருத்தி நிலைகொள்ளச் செய்தான். முழுநிலா புறப்பட்டுவந்து இருளைப் போக்குவது போல அவன் மக்களின் வறுமை இருளைப் போக்கினான்.
அவன் மார்பு குளிர் மிக்க விண்டு-மலை போன்றது. தெற்கு வடக்காக நீண்டுகிடக்கும் மலை விண்டுமலை. இதனை வேற்குத் தொடர்ச்சி மலை என்கிறோம்.
அக்காலத்தில் செல்வத்தில் சிறப்புற்று விளங்கியவன் வண்டன். வானுலகில் குபேரன் போல மண்ணுலகில் வண்டன். இவனை உலகமெல்லாம் போற்றியது. இவன் தூங்கெயில் கதவம் என்னும் கோட்டையின் காவலன். அந்தக் கோட்டையைக் கட்டியவன் கடவுள் அஞ்சி என்னும் கலைஞன். அதனை வானத்தில் கட்டினான். அதன் கதவு பக்கவாட்டில் திறக்காமல், மேலும் கீழுமாகத் திறக்கும்படி தொங்கிக்கொண்டிருந்தது. அதனால் “தூங்கெயில் கதவம்” எனப்பட்டது. வண்டன் பருத்த, வலிமை மிக்க, முழவு போன்ற தோளை உடையவன். இந்த வண்டன் போன்றவன், இந்தச் சேரல்.
சேரலே! உன் மனைவி வானத்து மகளிருள் செம்மீன் (அருந்ததி) போன்ற கற்புடையவள். அது அறம்சால் கற்பு. தழைத்த கூந்தலை உடையவள். அந்தக் கருங்கூந்தலுக்கு விளக்குப் போல நெற்றியைக் கொண்டவள். வயிற்றுக் கொப்பூழ் வரையில் தொங்கும் பொன்னாலாகிய இழை (தாலி ஆகலாம்) அணிந்தவள்.
உன் படையில் இருக்கும் மறவர்கள் நிலம் அதிரும்படிப் பொருக்குச் செல்வர். வெற்றிமுரசை முழக்குவர். வேல்கள் மோதும் போர்க்களத்தில் அடக்கத்துடன் போர் புரிவர். போர்க்களத்தில் புறங்கொடுத்து ஓடுபவர்கள் மீது படைக்கருவிகளை எய்யமாட்டோம் என்னும் அறம் பூண்டவராய் வீரக் கழல் அணிந்தவர்கள்.
சேரல் நகைவர் என்னும் நண்பர்க்கு அரண் போல விளங்குபவன். பகைவர்களுக்குச் சூர்ப்பேய் போன்ற படையை உடையவன். இப்படிப் பலதிற மாட்சிச் சிறப்புக்களை உடையவன்.

பாட்டு - 32[தொகு]

மாண்டனை பலவே போர்மிகு குருசில்நீ
மாதிரம் விளக்கும் சால்பும் செம்மையும்
முத்(து)உடை மருப்பின் மழகளிறு பிளிற
மிக்(கு)எழு கடும்தார் துய்த்தலைச் சென்று
5  துப்புத்துவர் போகப் பெருங்கிளை உவப்ப
ஈத்(து)ஆன்(று) ஆனா விடன்உடை வளனும்
துளங்குகுடி திருத்திய வலம்படு வென்றியும்
எல்லாம் எண்ணின் இடுகழங்கு தபுந
கொன்ஒன்று மருண்டனென் அடுபோர்க் கொற்றவ
10 நெடுமிடல் சாயக் கொடுமிடல் துமியப்
பெருமலை யானையொடு புலம்கெட இறுத்துத்
தடந்தாள் நாரை படிந்(து)இரை கவரும்
முடந்தை நெல்லின் கழைஅமல் கழனிப்
பிழையா விளையுள் நா(டு)அகப் படுத்து
15 வையா மாலையர் வசையுநர்க்(கு) அறுத்த
பகைவர் தேஎத்(து) ஆயினும்
சினவாய் ஆகுதல் இறும்பூதால் பெரிதே. (32)


பெயர்: கழையமல் கழனி
துறை: செந்துறைப் பாடாண்பாட்டு
வண்ணம்: ஒழுகு வண்ணம்
தூக்கு: செந்தூக்கு


  • செங்கைப் பொதுவன் விளக்கம்
மன்னனின் பல குணங்களையும் உடன் எண்ணி, அவற்றுள் பொறையுடைமையை மிகுத்துப் புகழும் பாடல் இது.
மாண்டனை பலவே – சென்ற பாடலில் முடிந்து இந்தப் பாடலில் தொடங்கும் அந்தாதித் தொடை.
போராற்றல் மிக்க தலைவனே! நீ பல வகையில் சிறப்புற்று விளங்குபவன். உன் சான்றாண்மை, செந்தண்மைப் பண்புகள் நாலாத் திசைகளிலும் போற்றப்படுகின்றன.
களிறு நடத்திப் பகைவர் வலிமையைப் போக்கினாய்.
போர்ச் சுற்றத்தார் மகிழும்படி வழங்கிய பின்னரும் குறைவுபடாமல் கிடக்கும் செல்வவளம் பெற்றிருக்கிறாய். குடிமக்களின் தளர்வைப் போக்கினாய்.
களிறு – தந்த முத்து கொண்டது. இளமையானது. களிறு பிளிறும்படி படை நடத்தினான். தார்மாலை அணிந்திருந்தான். தலைமயிர் பறக்க விரைந்து சென்றான். துப்பு = வலிமை, பகைவர் வலிமை. துவர் போக = துவரப் பாழாக.
எல்லாவற்றையும் எண்ணிப்பார்த்தேன். கழங்கு உருட்டிப் பார்த்த சகுனம் பொய்யாகும்படி வென்றி கண்டிருக்கிறாய். இவற்றில் ஒன்று மட்டும் எனக்கு வியப்பாக இருக்கிறது.
உன் போரில் நெடுமிடல் என்பவன் சாய்ந்தான். கொடுமிடல் என்பவனின் உடல் துண்டாகியது. மலை போன்ற யானை நடத்தி இந்த வெற்றியைக் கண்டாய். நெல்லின்-ஊர் (நெல்வேலி, திருநெல்வேலி) நாட்டை உன் நாட்டுடன் சேர்த்துக்கொண்டாய். நாரை மீன் இரை பெறும் நெல்லினூர் அது.
(முடந்தை = வளைவு, நெற்கதிரின் வளைவு)
பகைவர் நாட்டிலும் சினம் கொள்ளாமல் பொறுமையாக இருக்கிறாயே. இது எனக்கு வியப்பாக இருக்கிறது.
(வையா மாலையர் – பகைவர் மாலை இல்லாத மார்பினர் ஆயினர் * வசையுநர்க் கறுத்த பகைவர் - வசை பாடுவோரைச் சினம் கொண்ட பகைவர்)

பாட்டு - 33[தொகு]

இறும்பூதால் பெரிதே கொடித்தேர் அண்ணல்
வடிமணி அனைத்த பனைமருள் நோன்தாள்
கடிமரத்தான் களி(று)அணைத்து
நெடுநீர துறைகலங்க
5  மூழ்த்(து)இறுத்த வியன்தானையொடு
புலம்கெட நெரிதரும் வரம்பில் வெள்ளம்
வாள்மதில் ஆக வேல்மிளை உயர்த்து
வில்இசை உமிழ்ந்த வைம்முள் அம்பின்
செவ்வாய் எஃகம் வளைஇய அகழின்
10 கார்இடி உருமின் உரறும் முரசின்
கால்வழங்(கு) ஆர்எயில் கருதின்
போர்எதிர் வேந்தர் ஒரூஉப நின்னே. (33)


பெயர்: வரம்பில் வெள்ளம்
துறை: வஞ்சித்துறைப் பாடாண்பாட்டு
வண்ணம்: ஒழுகு வண்ணம்
தூக்கு: செந்தூக்கும் வஞ்சித்தூக்கும்


பாட்டு - 34[தொகு]

ஒரூஉப நின்னை ஒருபெரு வேந்தே
ஓடாப் பூட்கை ஒண்பொறிக் கழல்கால்
இருநிலம் தோயும் விரிநூல் அறுவையர்
செவ்உளைய மாஊர்ந்து
5  நெடும்கொடிய தேர்மிசையும்
ஓடை விளங்கும் உருகெழு புகர்நுதல்
பொன்அணி யானை முரண்சேர் எருத்தினும்
மன்நிலத்(து) அமைந்த ..................
மாறா மைந்தர் மாறுநிலை தேய
10 முரை(சு)உடைப் பெரும்சமம் ததைய ஆர்ப்(பு)எழ
அரைசுபடக் கடக்கும் ஆற்றல்
புரைசால் மைந்தநீ ஓம்பல் மாறே. (34)


பெயர்: ஒண்பொறிக் கழற்கால்
துறை: தும்பையரவம்
வண்ணம்: ஒழுகு வண்ணம்
தூக்கு: செந்தூக்கும் வஞ்சித்தூக்கும்


பாட்டு - 35[தொகு]

புரைசால் மைந்தநீ ஓம்பல் மாறே
உரைசான் றனவால் பெருமைநின் வென்றி
இரும்களிற்று யானை இலங்குவால் மருப்பொடு
நெடும்தேர்த் திகிரி தாய வியன்களத்(து)
5  அள(கு)உடைச் சேவல் கிளைபுகா வாரத்
தலைதுமிந்(து) எஞ்சிய மெய்ஆடு பறந்தலை
அந்தி மாலை விசும்புகண் டன்ன
செஞ்சுடர் கொண்ட குருதி மன்றத்துப்
பேஎய் ஆடும் வெல்போர்
10 வீயா யாணர் நின்வயி னானே. (35)


பெயர்: மெய்யாடு பறந்தலை
துறை: வாகைத்துறைப் பாடாண்பாட்டு
வண்ணம்: ஒழுகு வண்ணம்
தூக்கு: செந்தூக்கு


பாட்டு - 36[தொகு]

வீயா யாணர் நின்வயி னானே
தாவா(து) ஆகு மலிபெறு வயவே
மல்லல் உள்ளமொடு வம்(பு)அமர்க் கடந்து
செருமிகு முன்பின் மறவரொடு தலைச்சென்று
5  பனைதடி புனத்தின் கைதடிபு பலவுடன்
யானை பட்ட வாள்மயங்கு கடும்தார்
மாவும் மாக்களும் படுபிணம் உணீஇயர்
பொறித்த போலும் புள்ளி எருத்தின்
புன்புற எருவைப் பெடைபுணர் சேவல்
10 குடுமி எழாலொடு கொண்டுகிழக்(கு) இழிய
நிலம்இழி நிவப்பின் நீள்நிரை பலசுமந்(து)
உருஎழு கூளியர் உண்டுமகிழ்ந்(து) ஆடக்
குருதிச் செம்புனல் ஒழுகச்
செருப்பல செய்குவை வாழ்கநின் வளனே. (36)


பெயர்: வாண்மயங்கு கடுந்தார்
துறை: களவழி
வண்ணம்: ஒழுகு வண்ணம்
தூக்கு: செந்தூக்கு


பாட்டு - 37[தொகு]

வாழ்கநின் வளனே நின்னுடை வாழ்க்கை
வாய்மொழி வாயர் நின்புகழ் ஏத்தப்
பகைவர் ஆரப் பழங்கண் அருளி
நகைவர் ஆர நன்கலம் சிதறி
5  ஆன்(று)அவிந்(து) அடங்கிய செயிர்தீர் செம்மல்
வான்தோய் நல்இசை உலகமொ(டு) உயிர்ப்பத்
துளங்குடி திருத்திய வலம்படு வென்றியும்
மாஇரும் புடையல் மாக்கழல் புனைந்து
மன்எயில் எறிந்து மறவர்த் தாணஇத்
10 தொல்நிலைச் சிறப்பின் நின்நிழல் வாழ்நர்க்குக்
கோ(டு)அற வைத்த கோடாக் கொள்கையும்
நன்றுபெரி(து) உடையையால் நீயே
வெந்திறல் வேந்தேஇவ் வுலகத் தோர்க்கே. (37)


பெயர்: வலம்படு வென்றி
துறை: செந்துறைப் பாடாண்பாட்டு
வண்ணம்: ஒழுகு வண்ணம்
தூக்கு: செந்தூக்கு


பாட்டு - 38[தொகு]

உலகத் தோரே பலர்மன் செல்வர்
எல்லா ருள்ளும்நின் நல்இசை மிகுமே
வளம்தலை மயங்கிய பைதிரம் திருத்திய
களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல்
5  எயில்முகம் சிதையத் தோட்டி ஏவலின்
தோட்டி தந்த தொடிமருப்பு யானைச்
செவ்உளைக் கலிமா ஈணகை வான்கழல்
செயல்அமை கண்ணிச் சேரலர் வேந்தே
பரிசிலர் வெறுக்கை பாணர் நாளவை
10 வாள்நுதல் கணவ! மள்ளர் ஏறே!
மைஅற விளங்கிய வடுவாழ் மார்பின்
வசையில் செல்வ! வான வரம்ப!
இனியவை பெறினே தனிதனி நுகர்கேம்
தருகென விழையாத் தாஇல் நெஞ்சத்துப்
15 பகுத்(து)ஊண் தொகுத்த ஆண்மைப்
பிறர்க்(கு)என வாழ்திநீ ஆகல் மாறே. (38)


பெயர்: பரிசிலர் வெறுக்கை
துறை: செந்துறைப் பாடாண்பாட்டு
வண்ணம்: ஒழுகு வண்ணம்
தூக்கு: செந்தூக்கு


பாட்டு - 39[தொகு]

பிறர்க்(கு)என வாழ்திநீ ஆகல் மாறே
எமக்கில்என் னார்நின் மறம்கூறு குழாத்தர்
துப்புத்துறை போகிய வெப்(பு)உடைத் தும்பைக்
கறுத்த தெவ்வர் கடிமுனை அலற
5  எடுத்(து)எறிந்(து) இரங்கும் ஏவல் வியன்பனை
உரும்என அதிர்பட்டு முழங்கிச் செருமிக்(கு)
அடங்கார் ஆர்அரண் வாடச் செல்லும்
காலன் அனைய கடும்சின முன்ப
வாலிதின், நூலின்இழையா நுண்மயிர் இழைய
10 பொறித்த போலும் புள்ளி எருத்தின்
புன்புறப் புறவின் கணநிரை அலற
அலந்தலை வேலத்(து) உலவை அம்சினைச்
சிலம்பி கோலிய அலங்கல் போர்வையின்
இலங்குமணி மிடைந்த பசும்பொன் படலத்(து)
15 அவிர்இழை தைஇ மின்உமிழ்(பு) இலங்கச்
சீர்மிகு முத்தம் தைஇய
நார்முடிச் சேரல்நின் போர்நிழல் புகன்றே. (39)


பெயர்: ஏவல் வியன்பணை
துறை: வாகை
வண்ணம்: ஒழுகு வண்ணம்
தூக்கு: செந்தூக்கு


பாட்டு - 40[தொகு]

போர்நிழல் புகன்ற சுற்றமொ(டு) ஊர்முகத்(து)
இறாஅ லியரோ பெருமநின் தானை
இன்இசை இமிழ்முர(சு) இயம்பக் கடிப்பிகூஉப்
புண்டோ ள் ஆடவர் போர்முகத்(து) இறுப்பக்
5  காய்த்த கரந்தை மாக்கொடி விளைவயல்
வந்(து)இறை கொண்டன்று தானை அந்தில்
களைநர் யார்இனிப் பிறர்எனப் பேணி
மன்எயில் மறவர் ஒலிஅவிந்(து) அடங்க
ஒன்னார் தேயப் பூமலைந்(து) உரைஇ
10 வெண்தோடு நிரைஇய வேந்(து)உடை அரும்சமம்
கொன்றுபுறம் பெற்று மன்பதை நிரப்பி
வென்றி ஆடிய தொடித்தோள் மீகை
எழுமுடி கெழீஇய திருஞெமர் அகலத்துப்
பொன்அம் கண்ணிப் பொலம்தேர் நன்னன்
15 சுடர்வீ வாகைக் கடிமுதல் தடிந்த
தார்மிகு மைந்தின் நார்முடிச் சேரல்
புன்கால் உன்னம் சாயத் தெள்கண்
வறிதுகூட்(டு) அரியல் இரவலர்த் தடுப்பத்
தான்தர உண்ட நனைநறவு மகிழ்ந்து
20 நீர்இமிழ் சிலம்பின் நேரி யோனே
செல்லா யோதில் சில்வளை விறலி
மலர்ந்த வேங்கையின் வயங்கிழை அணிந்து
மெல்இயல் மகளிர் எழில்நலம் சிறப்பப்
பாணர் பைம்பூ மலைய இளையர்
25 இன்களி வழாஅ மென்சொல் அமர்ந்து
நெஞ்சுமலி உவகையர் வியன்களம் வாழ்த்தத்
தோட்டி நீவாது தொடிசேர்பு நின்று
பாகர் ஏவலின் ஒண்பொறி பிசிரக்
காடுதலைக் கொண்ட நாடுகாண் அவிர்சுடர்
30 அழல்விடுபு மாணஇய மைந்தின்
தொழில்புகல் யானை நல்குவன் பலவே. (40)


பெயர்: நாடுகாண் அவிர்சுடர்
துறை: விறலியாற்றுப்படை
வண்ணம்: ஒழுகு வண்ணம்
தூக்கு: செந்தூக்கு


பதிகம்[தொகு]

ஆராத் திருவிற் சேர லாதற்கு
வேளாவிக் கோமான்
பதுமன் தேவி ஈன்ற மகன்முனை
பனிப்பப் பிறந்து பல்புகழ் வளர்த்(து)
5  ஊழின் ஆகிய உயர்பெரும் சிறப்பின்
பூழி நாட்டைப் படைஎடுத்துத் தழீஇ
உருள் பூங் கடம்பின் பெருவாயில் நன்னனை
நிலைச்செருவி னால்தலை யறுத்(து)அவன்
பொன்படு வாகை முழுமுதல் தடிந்து
10 குருதிச் செம்புனல் குஞ்சரம் ஈர்ப்பச்
செருப்பல செய்து செங்களம் வேட்டுத்
துளங்குகுடி திருத்திய வலம்படு வென்றிக்
களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரலைக்
காப்பியாற்றுக் காப்பியனார் பாடினார் பத்துப்பாட்டு.
அவைதாம்:
கம்ழகுரற் றுழாய், கழையமல் கழனி, வரம்பில் வெள்ளம், ஒண்பொறிக் கழற்கால்,
மெய்யாடுபறந்தலை, வான்மயங்கு கடுந்தார், வலம்படு வென்றி, பரிசிலர்வெறுக்கை,
ஏவல் வியன்பனை, நாடுகானவிர்சுடர். இவை பாட்டின் பதிகம்.
பாடிப்பெற்ற
பரிசில்: நாற்பதுநூறாயிரம் பொன் ஒருங்கு கொடுத்துத் தான் ஆளவ்திற் பாகங்கொடுத்தான்
அக்கோ. களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல் இருபத்தையாண்டு வீற்றிருந்தான்.