உள்ளடக்கத்துக்குச் செல்

பல்லவர் வரலாறு/22. ஒவியமும் சிற்பமும்

விக்கிமூலம் இலிருந்து

22. ஒவியமும் சிற்பமும்

சித்தன்னவாசல்

பல்லவர் கால ஓவியங்களை இன்று நன்கு காட்டத்தக்க இடம் சித்தன்னவாசல் ஒன்றேயாகும்.

இடமும் காணத்தக்கனவும்

சித்தன்ன வாசல் புதுக்கோட்டையைச் சேர்ந்தது; திருச்சிராப்பள்ளிக்குத் தெற்கே 20 கல் தொலைவில் உள்ளது; நாரத்தாமலைப் புகைவண்டி நிலையத்திலிருந்து இரண்டு கல் தொலைவில் உள்ளது. இங்குள்ள மலை மிகச் சிறியது. அதன் மீது ஏறிச் செல்லின், அழகின் இருப்பிடமாகவும் ஓவியக் கலையின் உறைவிடமாகவும் உள்ள குகைக் கோவிலைக் கண்டு களிக்கலாம். இதன் முன்புறம் சுவர் மறைப்புண்டு. அங்குக் காவலன் ஒருவன் காட்சி அளிக்கின்றான். முகமண்டபமான ஒரு சிறிய தாழ்வாரத்தையும் அதன்பின் சதுரவடிவில் அமைந்துள்ள உள்ளறையையும் கொண்டதே இக் கோவில். இங்குக் காணத்தக்கவை நான்கு ஆகும். அவை: (1) உருவச்சிலைகள். (2) நடனமாதர் ஒவியங்கள், (3) அரசன் அரசி ஓவியங்கள், (4) கூரையிலும் தூண்களிலும் உள்ள ஓவியங்கள் என்பன.

உருவச் சிலைகள்

முன் மண்டபத்தின் முன்புறம் நான்கு தூண்கள் இருக்கின்றன. இவற்றுள் இடையில் உள்ள இரண்டும் தனித்து நிற்கின்றன. ஓரங்களில் உள்ளவை பாறையுடன் ஒட்டினாற்போலப் பாதி அளவே தெரிகின்றன. முன் மண்டபத்தின் இரு புறங்களிலும் உள்ள சுவரில் பக்கத்துக்கு ஒன்றாக இரண்டு மாடங்கள் இருக்கின்றன. அவ்வொவ்வொரு மாடத்திலும் சமண தீர்த்தங்கரர் சிலை உள்ளது. அது யோகத்தில் அமர்ந்து இருப்பதுபோலக் காணப்படுகிறது. உள் அறையின் நடுவில் தீர்த்தங்கரர் மூவர் சிலைகள் வரிசையாக இருக்கின்றன. ஒவ்வொன்றும் மடியில் ஒரு கைம்மீது மற்றொரு கையை வைத்துக்கொண்டுகால்களை மடக்கி உட்கார்ந்துள்ள நிலை அழகியது. முன்மண்டபத்தில் உள்ள இரண்டு உருவங்களில் ஒன்று சமண தீர்த்தங்கரரான சுபார் சவநாதர் உருவம் மற்றது. சமண சமயத் தலைவர் ஒருவருடையது. இது மகேந்திரன் காலத்தில் இக் குகைக் கோவிலில் இருந்த சமணத் துறவிகள் தலைவரைக் குறிப்பதாகக் கூறலாம். தீர்த்தங்கரர் மறுபடியும் பிறவாதவர் என்பது சமணர் கொள்கை. ஆதலின் அதனைக்குறிக்க அவர் சிலைகள் மீது மூன்று குடைகள் குறிக்கப்பட்டுள்ளன. சுபார்சவநாதர் தலைமீது மூன்று குடைகள் குறிக்கப்பட்டுள்ளன. சமயத்தலைவர் மறு பிறப்பு உடையவர் என்பதைக் குறிக்க ஒரு குடையே காட்டப்பட்டுள்ளது.

சுபார்சவநாதர் முடிமீது நாகம் ஒன்று படம் விரித்து,நிழல் தருதல் போலச் செதுக்கு வேலை காணப்படுகிறது. உள் அறையில் உள்ள மூன்றில் இரண்டு சிலைகள் முக்குடைகளை உடையன. இச் சிலைகள், அழகாக அமைக்கப்பட்டுள்ளன. மகேந்திரன் காலத்துச் சிற்பத் தொழில் இவற்றைக் கொண்டும். சிற்பமாக மாமல்லபுரத்தில் ஆதிவராகர் கோவிலில் உள்ள சிலைகளைக் கொண்டும் நன்கறியலாம்.[1]

நடனமாதர் ஓவியங்கள்

இக்கோவில் தூண்கள்மீதும் மேற்கூரைமீதும் மகேந்திரன் அழகொழுகும் ஓவியங்களைத் தீட்டச் செய்தான். அவற்றுள் அழிந்தன போக இன்று இருப்பவை நேர்த்தியாக இருக்கின்றன. முன்மண்டபத் தூண்கள் இரண்டிலும் மாதர் இருவர் நடனமாடும். நிலையில் தீட்டப்பட்டுள்ளனர். அவர்தம் உருவங்கள் அழகாக அமைந்துள்ளன. கோவிலுக்கு வருபவரை இன்முகம் காட்டி அழைப்பன போல் அவ்வுருவங்கள் வெளி மண்டபத்துண்களில் இருத்தல் சால் அழகியது. வலத்தூண்மீதுள்ள ஓவியம் மற்றதைவிட நன்னிலையில் இருக்கின்றது.

வலத்தூணில் காணப்படும் நடிகையின் தலை வேலைப்பாடு கொண்டது. கூந்தல் நடுவில் பிரிக்கப்பட்டுத் தலைமீது முடியப்பட்டுள்ளது. அம்முடிப்புச் சில அணிகளாலும் பல நிற மலர்க் கொத்துக்களாலும் தாமரை இதழ்களாலும் கொழுந்து இலைகளாலும் அணி செய்யப்பட்டுள்ள நேர்த்தி காணத்தக்கதாகும். காதணிகள் கல் இழைக்கப் பெற்ற வளையங்களாகக் காட்சி அளிக்கின்றன; கழுத்தணிகள் சிறந்த வேலைப்பாடு கொண்டவை. பல திறப்பட்டவை. கையில் கடகங்களும் வளையல் முதலியனவும் காணப்படுகின்றன. வலக்கையின் கட்டை விரலிலும் சுண்டு விரலிலும் மோதிரங்கள் இருக்கின்றன. மேலாடைகள் இரண்டில் ஒன்று மேலாக இடையில் கட்டப்பட்டுள்ளது; மற்றொன்று மிக்க வனப்புடைத் தோற்றத்துடன் தோள் சுற்றிப் பின்னே விடப்பட்டுள்ளது. அவ்வாடையின் சுருக்கம் முதலிய அமைப்புகள் மிகவும் தெளிவாகவும் ஒழுங்காகவும் ஒவியத்தில் காட்டப்பட்டிருத்தல், அக்கால ஓவியக் கலை அறிவின் நுட்பத்தை நன்கு விளக்குவதாகும்.

இடத்துண்மீதுள்ள நடிகையின் உருவம் முன்னதைவிட அழகாகவும் மென்மைத்தோற்றம் உடையதாகவும் உள்ளது. இம் மாதரசியின் மயிர்முடி முன்னதைவிடச் சிறிதளவு வேறுபாடு கொண்டது. எனினும், அணிவகைகளில் வேறுபாடு இல்லை. இந் நடன மாதர்க்கு மூக்கணி இல்லை. இங்ஙனமே சிற்பங்களில் காணப்படும் பல்லவ அரசியர்க்கும் மூக்கணி இல்லை. காரணம் புலப்படவில்லை.[2] இவ்வுருவம் சிதைந்துள்ளதால் மேலாடை முதலியன தெளிவுறத் தெரியவில்லை.

இம்மங்கையர் அடிகள்மார் என்று சிலர் கருதுகின்றனர். இவர்கள் அப்சரப் பெண்மணிகள் என்று வேறு சிலர் கருதுகின்றனர். இவர் யாவரே ஆயினும் ஆகுக. இவர் தம் ஓவியங்கள். (1) பல்லவர் காலத்துப்பெண்மணிகள் அணிந்தநகைவகைகளும், சிறப்பாக உயர நிலையில் இருந்த நடனமாதர் அணிந்துவந்த அணிகலன்களும், (2) அக்கால நடிகையர் கூந்தல் ஒப்பனையும், (3) மேலாடைச் சிறப்பும், (4) அக்காலத்து நடனக் கலை நுட்பங்களும் நாம் அறியும் வகையில் துணை செய்கின்றன என்பதில் ஐயமே இல்லை.

அரசன் - அரசி ஒவியங்கள்

வலப்புறத் தூணின் உட்புறத்தில் ஒர் அரசன் தலையும் அவன் மனைவி தலையும் தீட்டப்பட்டுள்ளன. அரசன் கழுத்தில் மணிமாலைகள் காணப்படுகின்றன. காதுகளில் குண்டலங்கள் இலங்குகின்றன. தலையில் மணி மகுடம் காணப்படுகிறது. பெருந்தன்மையும் பெருந்தோற்றமும் கொண்ட அந்த முகம் ஆதிவராகர் கோவிலில் உள்ள மகேந்திரவர்மன் முகத்தையே பெரிதும் ஒத்துள்ளது. ஆதலின், அவ்வுருவம் மகேந்திரவர்மனதே என்று அறிஞர் முடிவுகொண்டனர். அண்மையில் உள்ளது.அரசியின் முகம் ஆகும். அந்த அரசியின் கூந்தலும் தலைமீதுதான் அழகுடன் முடியப்பட்டுள்ளது. இத்தகைய முடிப்பு இயல்பாகவே அக்கால அழகிகள் கொண்டமுடிப்போ இன்ப நிலையில் போட்டுக்கொண்ட முடிப்போ விளங்கவில்லை.

கூரையில் உள்ள ஒவியம்

முன் மண்டபக் கூரை முழுவதும் அணி செய்து கொண்டு இருக்கும் ஓவிய அழகே சித்தன்னவாசல் சிறப்பைப் பெரிதும் காட்டுவதாகும். அவ்வோவியம் தாமரை இலைகளும் தாமரை மலர்களும் கொண்ட தாமரைக் குளமாகும். இவற்றுக்கு இடையில் மீன்கள், அன்னங்கள், யானைகள், எருமைகள் இவற்றின் படங்கள் காணப்படுகின்றன. இவற்றுடன் கையில் தாமரை மலர்களைத் தாங்கியுள்ள சமணர் இருவரும், இடக்கையில் பூக்கூடை கொண்டு வலக் கையால் மலர் பறிக்கும் சமணர் ஒருவரும் சித்தரிக்கப்பட்டுள்ளனர்.

இஃது எதனைக் குறிக்கிறது?

இவ் வேலைப்பாடு சமணர் சமயக்குறிப்பை உடையதாகும். இது சமணர் துறக்கத்தை உணர்த்துகிறது என்று சிலரும், ‘சூத்ரக்ருதாங்க்ம்’ என்னும் சமண நூலின் இரண்டாம் பிரிவிற்குமுன் உள்ள தாமரை பற்றிய உரையாடலைக் குறிப்பதாக இருக்கலாம் என்று சிலரும் - இங்ஙனம் பலர் பலவாறு கூறியுள்ளனர். இந்த ஓவியத்தில் உள்ள குளத்து நீர் அழகிய கோலத்துடன் விளங்குகின்றது. மலர் ஒவியங்கள் இயற்கை மலர்களையே பெரிதும் ஒத்துள்ளன. ஏனையவை உயிர் ஓவியங்கள் என்னலாம்.

உள்ளறை மேற்கூரை

உள்ளறையின் மேற்கூரையிலும் இங்ஙனமே நிறம் தீட்டப் பட்டுள்ளது. அது ஸ்வஸ்திகா, சூலம், சதுரம், தாமரைமலர் முதலியவற்றைக் கொண்டு போடப்பட்டகோலம் ஆகும். சுவஸ்திகா சமணர் கையாண்ட குறியாகும். ஏழாம் தீர்த்தங்கரரான சுபார்சவநாதர் தமது அடையாளமாக சுவஸ்திகாவைக் கொண்டிருந்தார். தீர்த்தங்கரது ஊர்வலத்திற் செல்லத்தக்கஎட்டுக்குறிகளில் ‘சுவஸ்திகா’ ஒன்றாகும். திரிசூலம் சிவனுக்குரியது. ஆயின், புத்தர்க்கும் உரியதே ஆகும். சமணர் குறிகளில் திரிசூலமும் காணப்படுகிறது.

இவற்றை எழுதிய முறை

கற்பாறைகள் மீது இந்த அழகிய ஓவியங்கள் எங்ஙனம் வரையப்பட்டன?[3] “சுவர்ப்புறம் மேடு பள்ளம் இல்லாமல் சமமாக இருப்பதற்காகச் சுவர்மீது ஒரு நெல் அளவுக்குச் சுண்ணாம்புச்சாந்து பூசப்படும். பாறை, தன்மீது தீட்டப் பெறும் நிறத்தை ஏற்றும்கொள்ளும் இயல்பு அற்றது. ஆதலின், சுண்ணச் சாந்து அதற்குப் பயன்பட்டது. சலித்து எடுக்கப்பட்ட பூமணல், வைக்கோல், கடுக்காய் முதலியவற்றுடன் கலந்து வெல்ல நீருடன் அல்லது பனஞ்சாற்றுடன் அரைத்தசாந்து சுவரில் அல்லது கூரையில் உறுதியாகப் பற்றிக்கொள்ளும், அதை எளிதில் பெயர்க்க முடியாது. ஈரம் காயுமுன்பே ஓவியக்காரன் மஞ்சட் கிழங்கைக் கொண்டு இரேகைகளை வரைந்து கொள்வான். சுண்ணாம்புடன் கலந்த மஞ்சள் நிறம் மாறிச் சிவப்பாகத் தோன்றுவதுடன் பிறகு அழியாமல் இருக்கும் தன்மையும் வாய்ந்தது. ஒவியக்காரன் புனையா ஓவியம் என்னும் இந்த இரேகைகளை முதலில் வரைந்துகொண்டே பிறகு நிறங்களைத் தீட்டுவான்; சிவப்பு, மஞ்சள், வெள்ளை. நீலம், பச்சை கறுப்பு ஆகிய நிறங்களைத் தரும் பச்சிலை நிறங்களையே பயன்படுத்துவான்....; ஈரம் காய்ந்த பிறகு சுவர் நன்றாய் உலர்வதற்கு முன்னரே கூழாங் கற்களைக்கொண்டு சுவர்களை வழவழப்பாக்கி மெருகிடுவான். இங்ஙனம் தீட்டப்பட்ட ஓவியம் அழியாது நெடுங்காலம் இருக்கத்தக்கதாகும்.”[4]

பல்லவர் சிற்பம்

பல்லவர் பெருவேந்தர் குடைவித்த கற்கோவில்களிலும் எடுப்பித்த பெருங்கோவில்களிலும் உள்ள சிற்பங்களைப்பற்றி விளக்கம் இந்நூலுள் ஆங்காங்குத் தரப்பட்டுள்ளது. மாமல்லபுரம் ஒன்றே சிறந்த பல்லவர் சிற்பக்கூடம் என்னலாம்; அங்குள்ள அருச்சுனன் தவநிலை காட்டும் சிற்பமும், எருமைத்தலை அசுரனும்

காளியும் போரிடலைக் குறிக்கும் சிற்பமும் போதியவையாகும். மேலும் காணவேண்டுமாயின், கயிலாசநாதர் கோவில், வைகுந்தப் பெருமாள் கோவில்களிற் கண்ணாரக் கண்டு களிக்கலாம். சென்ற பகுதியில் கூறப்பட்ட சிவனார் நடன வகைகளை உணர்த்தும் சிற்பங்கள் மிகச் சிறந்தனவாகும்.


  1. "வடமொழித் தொடராகிய ‘சித்தானம் வாசஹ்’ என்பது ‘துறவிகள் இருப்பிடம்’ என்னும் பொருளது. இது பாகதமாய்ச் ‘சித்தன்னவாசல்’ என்று ஆயிற்று” என்று அறிஞர் T.N. இராமசந்திரன் கூறுவர்.
  2. Dr.C.Minakshi’s “Administration and Social Life under the Pallavas,’ p.291. இங்ஙனமே அமராவதி சிற்பங்களில் காணப்படும் பெண்மணிகட்கும் மூக்கணி இல்லை. இது பண்டைநாகரிகம் போலும்!-Dr.K.Gopalachari’s “Early History of the Andhra Country”, p.99.
  3. Dr.C.Minakshi’s “Administraion and Social Life under the Pallavas” pp.292, 293-295
  4. P.N. Subramanian’s “Pallava Mahendravarman pp.107-109.