பல்லவர் வரலாறு/23. பல்லவர் காலத்துக் கோவில்கள்
கோவிலும் கல்வெட்டும்
“செங்கல், சுண்ணாம்பு, மரம், உலோகம் இவை இல்லாமல் மும்மூர்த்திகட்கு விசித்திரசித்தன் (மகேந்திரவர்மன்) அமைத்த கோவில் இது” என்னும் கல்வெட்டு மண்டபப்பட்டில் காணப்படுகிறது. இதன் காலம் கி.பி. 615-630 ஆகும்.
இந்த மண்டபப்பட்டுக் கல்வெட்டால் அறியத்தக்க செய்திகளாவன:-
(1) மகேந்திரன் காலத்திற்கு முன்னர்க் கற்கோவில்கள் இல்லை. இருந்த கோவில்கள் செங்கல். சுண்ணாம்பு, மரம், உலோகம் இவற்றால் ஆனவை.
(2) மகேந்திரனுக்கு முன்னரே தமிழ் மக்கள் கோவில் கட்டத் தெரிந்திருந்தனர். ஆனால், அக் கோவில்கள் நாளடைவில் அழிந்துவிடத்தக்கவை.[1]
(3) அழியத்தக்க பொருள்களால் அமைந்த கோவில்களையே மகேந்திரன் கற்களில் செதுக்கி அமைத்தான்.[2]
தரையும் சுவர்களும் செங்கற்களால் ஆனவை; மேற்கூரை மரத்தால் ஆகியது. அங்கங்கு இணைப்புக்காக ஆணிகள் முதலியன பயன்பட்டிருக்கும். இங்ஙனம் அமைந்த கோவில்களாகவே அவை இருத்தல் வேண்டும். இத்தகையகோவில்களை இன்றும் மலையாள நாட்டில் காணலாம். இங்ஙனம் கோவில்களை அமைப்பதில் தமிழர் பண்பட்டிராவிடில், திடீரெனக் கி.பி.7ஆம் நூற்றாண்டிலிருந்து பல கோவில்கள் தமிழ்நாட்டில் தோன்றிவிட்டன எனல் பொருளற்றதாய் விடும்.”[3]
“விமானங்கள், ‘தூயது, கலப்பு, பெருங்கலப்பு’ என மூவகைப்படும். கல், செங்கல், மரம் முதலியவற்றில் ஒன்றைக் கொண்டே அமைக்கும் விமானம் ‘தூய விமானம்’ எனப்படும் இரண்டைக் கொண்டு அமைப்பது ‘கலப்பு விமானம்’ எனப்படும். இரண்டிற்கு மேற்பட்ட பொருள்களால் அமைப்பது பெருங்கலப்பு விமானம் எனப்படும்” என்பது கட்டடக் கலை நூல் கூற்றாகும். இதனாலும், பண்டைக்காலத்தில் கோவில்கள் இருந்தமையும் விமானங்கள் இருந்தமையும் தெளிவாகுமன்றோ?”[4]
இனி மகேந்திரனுக்கு முன்னரே தமிழ்நாட்டிலும் தக்கானத் திலும் கோவில்கள் இருந்தவற்றைக் கல்வெட்டுகள் கூறல் காண்க.
(1) முற்காலப் பல்லவருள் ஒருவனான விசயகந்தவர்மன் காலத்தில் (கி.பி. 275-300) புத்தவர்மன் மனைவியான சாருதேவி நாராயணன் கோவிலுக்கு நில தானம் செய்ததாகக் குணபதேயப் பட்டயம் கூறுகின்றது.
(2) திருக்கழுக்குன்றத்துக் கோவிலில் உள்ள கடவுளுக்குக் கந்தசிஷ்யன் (கி.பி. 300-356) என்னும் பல்லவன் நிலம் விட்டதாகவும், அதனை நரசிம்மவர்மன் தொடர்ந்து நடத்தியதாகவும் ஆதித்தசோழன் கல்வெட்டு ஒன்று கூறுகிறது.
(3) கோச்செங்கணான் திருவக்கரையில் உள்ள கோவிலில் பெருமாளுக்கொரு கோவில் கட்டியிருந்தான்; அதிராசேந்திரன் அதனைக் கல்லால் புதுப்பித்தான்; செம்பியன் மாதேவியார் திருவக்கரைக் கோவிலைக் கல்லாற் புதுப்பித்தார்.[5] அவரே திருக்கோடிகாவில் இருந்த செங்கல் விமானத்தையும் கருங்கல் விமானமாக அமைத்தார்.[6]
(4) சாலங்காயன அரசர்வேங்கி நகரத்தில் இருந்த சித்திரதசாமி கோவிலுக்குப் பல தானங்கள் செய்துள்ளனர் என்று அவர்தம் பட்டயங்கள் (கி.பி. 250-450) பகர்கின்றன.
(5) ஸ்தானகுண்டுரம் என்னும் ஊரில் சாதவாகனர் காலத்தில் சிவன் கோவில் ஒன்று இருந்ததாகக் கதம்பரது தாளகுண்டாக் கல்வெட்டுக் கூறுகிறது.[7]
(6) முண்டராட்டிரத்துக் கந்துகூரத்தில் இருந்த பெருமாள் கோவிலுக்கு இளவரசன் விஷ்ணு கோபபல்லவன் நிலம் விட்டதாக உருவப்பள்ளிப்பட்டயம் (கி.பி. 450) கூறுகின்றது.
சங்ககாலத்துக் கோவில்கள்
பண்டைத் தமிழகத்தில் தொல்காப்பியர் காலத்திலேயே வீரர் வணக்கத்துக்குரிய கோவில்கள் (நடுகல் கொண்ட கோவில்கள்) இருந்திருத்தல் வேண்டும் என்பதும், முருகன் திருமால்-காடுகிழான் (துர்க்கை) முதலிய தெய்வங்க்ட்குக் கோவில்கள் இருந்திருத்தல் வேண்டும் என்பதும் உய்த்துணரலாம். தொகை நூல்களிற் சிவபெருமான், முருகன், திருமால். பலராமன் இவர்கள் சிறப்புடைக் கடவுளராகக் கூறலை நோக்க, இவர்கட்குக் கோவில்கள் இருந்தமை அறியலாம். ஆலமர் செல்வனுக்கு (சிவபிரான்) நீலநாகம் நல்கிய கலிங்கத்தை ஆய்வேன் தந்தனன் என்று புறப்பாட்டுக் கூறுகின்றது. இதனால் அக்காலத்தில் கோவிலும் லிங்கமும் இருந்தன என்பது பெறப்படுகிறதன்றோ?
கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் இயற்றப்பெற்ற சிலப்பதிகாரத்தும் மணிமேகலையிலும் காணப்படும் கோவில்கள் பல ஆகும்; மணிமேகலையில் சக்கரவாளக் கோட்டம் உரைத்த காதையில்,
- “காடமர் செல்வி கழிபெருங் கோட்டமும்
- அருந்தவர்க் காயினும் அரசர்க் காயினும்
- ஒருங்குடன் மாய்ந்த பெண்டிர்க் காயினும்
- நால்வேறு வருணப் பால்வேறு காட்டி
- இறந்தோர் மருங்கில் சிறந்தோர் செய்த
- குறியவும் நெடியவும் குன்றுகண் டன்ன
- சுடுயண் ஓங்கியம நெடுநிலைக் கோட்டமும்”
எனவரும் அடிகள் வீரர், அருந்தவர், அரசர், பத்தினிமார் இவர்க்குக் கோவில்கள் இருந்தமையை வலியுறுத்துகின்றன அல்லவா? சுடுமண் (செங்கல்) கோவில்கள் குன்றுகள் போல் உயர்ந்திருந்தன என்பது அறியத்தக்கது.
- “பிறவாயாக்கைப் பெரியோன் கோயிலும்
- அறுமுகச் செவ்வேள் கணிதிகழ் கோயிலும்
- வால்வளை மேனி வாலியோன் கோயிலும்
- நீலமேனி நெடியோன் கோயிலும்
- மாலை வெண்குடை மன்னவன் கோயிலும்.....”
எனவரும் சிலப்பதிகார அடிகளால், புறநானூறு கூறும் சிவன், முருகன், பலராமன் திருமால் இத் தெய்வங்கட்குக் கோவில்கள் கி.பி. 2ஆம் நூற்றாண்டில் இருந்தமை தெளிவு. இவற்றுடன் அரசன் இருப்பிடமும் கோயில் என்றே வழங்கப் பெற்றதும் அறியக்கிடக்கிறது.
இக் கோயில்களும் அரசர் மாளிகைகளும் மண்டபங்களும் சிற்ப வல்லுநரால் நாள் குறித்து, நாழிகை பார்த்து நேரறிகயிறிட்டுத் திசைகளையும் அத் திசைகளில் நிற்கும் தெய்வங்களையும் நோக்கி வகுக்கப்பட்டன என்பது,
- “ஒருதிறம் சாரா வரைநாள் அமையத்து
- நூலறி புலவர் நுண்ணிதிற் கயிறிட்டுத்
- தேஎங் கொண்டு தெய்வம் நோக்கிப்
- பெரும்பெயர் மன்னர்க் கொப்ப மலைவகுத்து”
எனவரும் நெடுநல்வாடை (வரி 75-78) அடிகளாலும்
- “அறக்களத் தந்தனர்.ஆசான் பெருங்கணி
- சிறப்புடைக் கம்மியர்தம்மொடும் சென்று
- மேலோர் விழையும் நூல்நெறி மாக்கள்
- பால்பெற வகுத்த பத்தினிக் கோட்டமும்
எனவரும் சிலப்பதிகார அடிகளாலும் (நடுகற் காதை, வரி 222-225),
- “பைஞ்சேறு மெழுகாப்பசும்பொன் மண்டபம்”
எனவரும் மணிமேகலை (சிறைக்கோட்டம்...... காதை, 105) வரியாலும் நன்குனரக் கிடத்தல் காண்க. இறுதுயிற் கூறிய மண்டபம் பல நாட்டு விற்பன்னருடன் தண்டமிழ் வினைஞர் சேர்ந்து அமைத்த அற்புதமண்டபம் என்று மணிமேகலை கூறுகின்றது. அம் மண்டபத் தூண்கள்மீது பன்மணிப் போதிகைகள் இருந்தன: அவற்றின்மேற் பொன்விதானங்கள் இருந்தன. தரை சாந்தால் மெழுகப்பட்டு இருந்தது.
அரசர் கோவில்களும் தெய்வங்களின் கோவில்களும் சுற்று மதிலையுடையன, உயர்ந்த வாயில்களை உடையன; அவ்வாயில்கள்மீது உயர்ந்த மண்ணிடுகள் (கோபுரங்கள்) இருந்தன: அம் மண்ணிடுகளில் வண்ணம் தீட்டப்பெற்ற வடிவங்கள் அமைந்திருந்தன என்பது, மணிமேகலை[8] மதுரைக் காஞ்சி[9] முதலிய நூல்களால் நன்குணரலாம்.
இக் கோவில்கள் அனைத்தும் செங்கற்களால் அமைந்தவை. மேலே உலேகத் தகடுகளும் சாந்தும் வேயப்பட்டிருந்தன. இங்ஙனமே உயர்ந்த மாடமாளிகைகளும் இருந்தன.
- “விண்பொர நிவந்த வேயா மாடம்”
- “சுடுமண் ஓங்கிய நெடுநகர் வரைப்பு”[10]
- “நிறைநிலை மாடத்து அரமியந் தோறும்”[11]
இங்ஙனம் அமைத்த பெரிய கட்டடங்களைச் சுற்றி இருந்த சுவர்கட்கு உயர்ந்த கோபுரங்களை உடைய வாயில்களும், அவ் வாயில்கட்குத் துருப்பிடியாதபடி செந்நிறம் பூசப்பட்ட இரும்புக் கதவங்களும் பொருத்தப்பட்டிருந்தன என்பது நெடுநல் வாடை[12] அடிகள் அறிவிக்கும் செய்தியாகும். சிதம்பரத்தில் பதஞ்சலி முனிவர்க்கு இறைவன் நடன கோலத்தைக் காட்டியருளினன் என்பது புராணச் செய்தி. பதஞ்சலி முனிவர் காலம் கி.மு. 150 என அறிஞர் அறைவர். எனவே, கோவில் எனச் சிறப்புப் பெயர் பெற்ற சிதம்பரத்தில் உள்ள கோவில் கி.மு. 150க்கு முற்பட்டதாதல் அறியத்தக்கது.
முதற் பராந்தக சோழன் (கி.பி. 907-953) சிற்றம் பலத்துப் பொன் விமானத்தைப் புதுப்பித்தான் என்று கல்வெட்டுக் கூறுகிறது. அதனால் அவனுக்கு முன்பே சிற்றம்பலம் பொன் வேயப்பெற்றதாதல் வேண்டும் என்பது பெறப்படுகிறதன்றோ? “சிம்மவர்மன் என்னும் அரசன் தன்னைப் பீடித்த உடல் நோயைப் போக்கிக் கொள்ளச் சிதம்பரம் அடைந்தான். வாவியில் மூழ்கினான்: பொன் நிறம் பெற்றான்; அதனால் இரண்யவர்மன் எனப்பட்டான் என்று கோவிற்புராணம் கூறுகிறது. அவனே சிற்றம்பலத்தைப் பொன் வேய்ந்தவன் ஆவான். சிம்மவர்மன் என்ற பெயர் கொண்ட பல்லவ அரசர் பலர் இருந்தனர். அவருள் கி.பி. 436 முதல் 458 வரை அரசாண்ட சிம்மவர்மனே மேற்சொன்ன திருப்பணியைச் செய்திருத்தல் வேண்டும் என்பது முன்பே விளக்கப்பட்டது. அப்பர் காலத்தில் சிதம்பரத்தில் பொன் அம்பலம் இருந்தமைக்கு அவர் பாக்களே சான்றாகும். சிதம்பரம் நடராசர் மண்டபம்[13] மரத்தால் கட்டப்பட்டிருத்தலே அதன் பழைமைக்குச்சான்றாகும்.
இதுகாறும் கூறிவந்த செய்திகளால், தமிழகத்தில் கி.பி. இரண்டாம் நூற்றாண்டிலேயே - பல்லவருக்கு முன்னரே கோவில்கள் இருந்தன: கோவில் மதில்கள் இருந்தன; கோபுரங்கள் இருந்தன: கோபுரங்களில் சுண்ணாம்பு, மண் இவற்றால் செய்யப்பட்டவேலைப்பாடுகள் இருந்தன என்பதை நன்கறியலாம்.
நமது கால எல்லைப்படி, கி.பி. 200 முதல் 250க்குள் தமிழகத்தை ஆண்ட கோச்செங்கட் சோழன் 70 கோவில்கள் கட்டியதாகத் திருமங்கை ஆழ்வார் கூறியுள்ளார். அவர்க்கு முன்னரே அப்பர், சம்பந்தர் தம் பதிகங்களில் இதனைக் குறிப்பிட்டுள்ளனர். கோச்செங்கணான் கட்டியவை மாடக்கோவில்கள் எனப்படும். மாடக் கோவில் என்பது கட்டு மலையையும் யானைகள் செல்லக்கூடாதிருக்கும் திருமுன்பையும் உடையது.[14]
தேவார காலத்துக் கோவில்கள்
தேவார காலத்துத் தமிழகத்தில் ஏறத்தாழ 200 கோவில்கள் இருந்தன. அவை அனைத்தும் மரம், செங்கல், மண், உலோகம் இவற்றால் இயன்றவையே என்பது சங்க நூற்பாக்களால் முன்னரே உணர்த்தப்பட்ட செய்தி ஆகும். இச் செய்தியை அப்பர் காலத்து மகேந்திரவர்மன் தன் மண்டபப்பட்டுக் கல்வெட்டினால் உறுதிப்படுத்தியுள்ளான் என்பதையும் மேற் காட்டினோம் அல்லவா? இங்ஙனம் அமைந்த பழைய கோவில்கள் பலவகைப்படும். அவை, (1) பெருங்கோவில், (2) இளங்கோவில். (3) மணிக்கோவில், (4) கரக்கோவில், (5) தூங்கானை மாடம் முதலாகப் பல வகைப்படும். இவற்றுள் பெருங்கோவில்கள் 78.அப்பர்காலத்தில் இருந்தன என்று அப்பரே கூறியுள்ளார். பெரிய கோவிலைப் பழுது பார்க்குங்கால் மூர்த்தங்களை எழுந்தருளச் செய்து வழிபாடு செய்து வந்துள்ள (பெரிய கோவில் திருச்சுற்றில் உள்ள) சிறிய கோவிலே இளங்கோவில் எனப்படும். பிறவும் ‘இளங்கோவில்’ எனப் பெயர் பெறும். இத்தகைய இளங்கோவில்கள் சில தேவார காலத்தில் இருந்தன. எனவே, தேவார காலத்திற்கு முன்பே சில கோவில்கள் புதுப்பிக்கப் பட்டன என்பது தெளிவாகிறதன்றோ? தெளிவாகவே, அவை கட்டப்பட்ட காலம் மிகப் பண்டையதே என்பது வெளியாகிறதன்றோ? தேவார காலத்தில் விமானம் கொண்ட கோவில்கள் இருந்தன என்பது பெண்ணாகடம்-துங்கானை மாடம் கோவில் அமைப்பைக்கொண்டு நன்குணரலாம். விமானம் ‘தூங்கும் யானை வடிவில்’ அமைந்ததாகும். திரு இன்னம்பர். திருத்தணிகைக் கோவில் விமானங்கள் இம்முறையில் அமைந்தவை. திரு அதிகைக் கோவில், திருக்கடம்பூர் இவற்றின் உள்ளறைகள் தேர் போன்ற அமைப்புடையவை: உருளைகள் குதிரைகள் பூட்டப்பெற்றவை. திருச் சாய்க்காட்டுக்கோவிலை ஒட்டித் தேர்போன்றவிமானம் ஒன்று உருளைகளுடன் இருக்கின்றது.[15]
பழைய கோவில்கள்
இந்த விமான அமைப்புடைய தேர் போன்ற கோவில்களே பழையவை. இன்று காணப்படும் கோவில்களை பழையவை. இன்று காணப்படும் கோவில்களை அடுத்துள்ள தேர்கள் மிகப்பழைய காலத்தில் மரக்கோவில்களாக இருந்தவை. மனிதன் மரக் கோவிலைப் போலச் செங்கற்கள் கொண்டு பிற்காலத்தில் கோவில்கள் அமைத்தான் என்று ஆராய்ச்சியாளர் அறைகின்றனர். சான்றாக நகரில் உள்ள சில கோவில்களைக் காணலாம்.அவை கி.மு. 250இல் ஆக்கப்பட்டவை. அவற்றைச் சுற்றிக் கற்சுவர்கள் இருக்கின்றன. ஆயின், கோவில்கள் மரத்தால் கட்டப்பட்டவையே ஆகும்.[16]
முதல்-இடைக் காலக் கோவில்கள் (கி.பி. 250-600)
அப்பர் காலத்தில் புகாரில் இருந்த கோவில் பல்லவன் ஈச்சரம் எனப் பெயர் பெற்று இருந்தது. அக் கோவில் ‘பல்லவன்’ கட்டிய கோவில் அல்லது ‘பல்லவன் பூசித்த கோவில்’ ஆக இருத்தல் வேண்டும். அஃது எங்ஙனமாயினும், அப்பல்லவன், அப்பர்காலத்து மகேந்திரவர்மனுக்கு முற்பட்டவனாதல் வேண்டும். மயேந்திரப் பள்ளி என்பது ஒரு பாடல் பெற்ற இடமாகும். இது மகேந்திரன் காலத்தில் இப்பெயர் பெற்றதா? அன்றிச் சமணர் பள்ளி அப்பருக்கு முன்னரே சிவன் கோவிலாக மாறிவிட்டதா? என்பது விளங்கவில்லை. இங்ஙனமே திருப்புகலூர்க் கோவிலுக்குள் வர்த்தமானிச்சுரம் என்னும் சிறிய கோவில் ஒன்று உண்டு. அதுவும் பாடல் பெற்றதாகும். வர்த்தமானர் என்பது சமண தீர்த்தங்கரர் பெயர். இவை எல்லாம் மகேந்திரனுக்கு முன்னரே இருந்த கோவில்கள் ஆகும். எனவே, முற்கால-இடைக்காலப் பல்லவர் காலங்களில் சில புதிய கோவில்களேனும் தமிழ் நாட்டில் ஏற்பட்டன என்பதை இவை உணர்த்துகின்றன.
பல்லவ மகேந்திரவர்மனுக்கு (கி.பி. 615க்கு) முற்பட்ட தமிழகத்தில் இருந்த நாயன்மாருள் சிறந்து விளங்கிய புகழ்ச்சோழ நாயனார். கூற்றுவநாயனார், ஐயடிகள் காடவர்கோன் நாயனார் என்பவர் பல கோவில்கட்குத் திருப்பணிகள் செய்தனர் என்று சேக்கிழார் பெருமான் கூறியுள்ளனர்.
கி.பி.600க்கு முற்பட்டவரான திருமூலர், தம் காலத்தில் இருந்த செங்கற்கோவில்களையும் பூமணல் ஒன்பது மணிகள் இவற்றாலாய லிங்கங்களையும் பற்றிப் பல பாடல்களிற் கூறியுள்ளார். இவை யாவற்றிற்கும் ஏற்பக் கி.பி.7ஆம் நூற்றாண்டினரான அப்பர். சம்பந்தர் பாடிய தேவாரத் திருமுறைகளில் ஏறத்தாழ 200க்கு மேற்பட்ட கோவில்கள் பாடல் பெற்றுள்ளன. இவற்றால் சங்ககாலத்தில் இருந்த கோவில்கள் அல்லாமல் பிற்காலத்திலும் (முற்கால-இடைக் காலப் பல்லவர் காலங்களிலும்) பல கோவில்கள் புதியனவாகக் கட்டப்பட்டிருந்தன என்றெண்ண இடமுண்டாகிறது.
பிற்காலத்துக் கோவில்கள் (கி.பி. 600-900)
பழைய சமணர்கோவில், மண்டபம்போன்ற அமைப்புடையது: நான்கே தூண்களை உடையது; அகன்ற கதவுகளை உடையது. மண்டபத்தைச் சுற்றியும் தாழ்வாரத்தை உடையது. மேற்கூரை கல்தளத்தை உடையது. சுவர்கள் மீதும் தூண்கள்மீதும் சமண சித்திரங்கள் தீட்டப்பெற்றிருக்கும்.[17] இவ்வமைப்பை ஏறத்தாழ இன்றுள்ள காவிரிப்பூம்பட்டினத்துக் கோவில்களிற் காணலாம்: மாமல்லபுரத்தில் உள்ள ‘மண்டபங்கள்’ எனப்படுபவை அனைத்தும் இவ்வமைப்பை உடையனவே. பண்டைச் சமணர் மூன்று சிறு அறைகளைக் கொண்ட கோவில்களை (மண்டபங்களை)யும் அமைத்தனர்; அவ்வறைகளில் நடுவில் தீர்த்தங்கரரையும் இருபாலும் இயக்கர் இயக்கியரையும் வைத்தனர். நடுஅறையும் அருகதேவரும் வடக்கு அல்லது தெற்கு நோக்கி இருக்கும்படி அமைத்தனர்.[18] இம்முறையில் அமைந்தவையே மகேந்திரன் குடைவித்த கோவில்கள் ஆகும். “இங்ஙனம் சமணர் அமைத்த மண்டபம் கோவில் முறை அதன் திராவிட அமைப்புடன் எல்லோரா வரை கி.பி. 7, 8ஆம் நூற்றாண்டுகளிற் பரவிவிட்டது. இம்முறை சாளுக்கியராற் பின்பற்றப் பட்டது.[19] “சில பெரிய சமணர் கோவில்கள் திருச்சுற்றில் பல சிறிய அறைகளைக் கொண்டவை; அவற்றில் சமனவுருவச் சிலைகள் வைக்கப்பட்டன.[20] இம்முறைப்படி அமைந்ததே இராசசிம்மன் கட்டிய கயிலாசநாதர் கோவில் ஆகும்.
மகேந்திரன் அமைத்த குகைக்கோவில்கள் ஏறத்தாழச் சிதம்பரத்தில் உள்ள பொன்னம்பலம் என்னும் சபையையும் தில்லைக் கோவிந்தராசர் உள்ள இடத்தையும் அமைப்பில் ஒருவாறு ஒத்துள்ளன. இவன்மகனான நரசிம்மவர்மன் அமைத்த ஒன்றைக்கல் கோவில்கள் மெய்யாகவே தமிழ் நாட்டில் இருந்த தேர் வடிவில் அமைந்த கோவில்களைப் பார்த்துச் சமைத்தவையே ஆகும், சிற்றுார் அம்மன் கோவிலுக்கும் மாமல்லபுரத்தில் உள்ள துர்க்கையின் கோவிலுக்கும் வேறுபாடில்லை. பல்லவர்க்கு முன்பே தமிழகத்தில் இருந்த பெளத்தர் அமைத்த விகார வடிவில் ஒன்றிரண்டு கோவில்கள் திகழ்கின்றன. இராசசிம்மன் கட்டிய கரையோரக் கோவில் தேர் போன்ற கோவில் அமைப்புடையதே. அதன் வளர்ச்சியே அவன் கட்டிய கயிலாசநாதர் கோவில் விமானம். இதன் வளர்ச்சியே தஞ்சாவூர்ப் பெரிய கோவில் விமானம் ஆகும்.
தமது காலத்தில் இருந்த பாடல்பெற்ற கோவில்களில் காணப்பட்ட ஓவியங்களையே பல்லவர்கள் சிற்பங்களாக மாற்றினர் என்னல் மிகையாகாது. சிலப்பதிகார, மணிமேகலைகளின் காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டாகும். அக்காலத்தில் இருந்த வியத்தகு சிற்பங்களும், ஓவியங்களும் மகேந்திரன் காலத்தில் அழிந்துவிட வழியில்லை. ஏறக்குறைய 400 ஆண்டுகட்குள் அவை அழிந்தன எனக் கூற இடமில்லை. அங்ஙனம் பல அழிந்திருப்பினும், சிலவேனும் அவன் உள்ளத்தைக் கொள்ளை கொண்டிருத்தல் கூடியதே என்க.
பழங்கோவில் அமைப்பு
அறிஞர் லாங்ஹர்ஸ்ட் “மாமல்லபுரத்தில் உள்ள ஒற்றைக்கற் கோவில்கள் எல்லாம் அவன் காலத்தில் இருந்த (செங்கல்லும் சுண்ணாம்பும் கொண்டு கட்டப்பட்டு, மூங்கிற்கூரை அமைந்து வேலைப்பாடு கொண்ட செப்புத் தகடுகள் அறைந்த) கோவில்களைப் போன்றவையே என்பதைப் பார்த்தவுடன் கூறிவிடலாம் என்று வரைந்துள்ளதைக் காண்க.
இப்பொழுதுள்ள தேர், விழாக்காலத்தில் எங்ஙனம் உயரமாகச் சித்திரிக்கப்படுகிறது? அதன் உயரத்தை நோக்குக. அதற்கும், மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை ஓரமுள்ள கோவில் விமானத்திற்கும் வேறுபாடு இன்மை அறிக. அக் கோவிலுக்கு உருளைகளைப் பூட்டிவிடின், அதற்கும் இன்றைய தேருக்கும் வேறுபாடு உண்டா என்பதை அறிஞர் ஆராய்தல் வேண்டும். இங்ஙனம், ஆராயின், பண்டை மரக்கோவில்களே தேர்கள் என்பதை அறியலாம். அவற்றைக் கொண்டே செங்கல், சுண்ணாம்புக் கோவில்கள் தோன்றின என்பன அறியலாம்.[21]
நீலகிரி மலையில் உள்ள தொதவர் கோவில் பார்க்கத்தக்கது. வட்டமான கற்சுவர் கோவில் எல்லையை வகுப்பதாகும். இத்துடன் திருநெல்வேலியில் உள்ள பேய்க் கோவில்கள் ஒருமைப் படுகின்றன. இக் கோவில்களே பண்டைய திராவிடர் கட்டட அமைப்பைக் காட்டுவன. தொதவரிடமுள்ள இருவகைக் கோவில்களில் கோபுரம்போல அமைந்துள்ள கோவில்களே பழைமை வாய்ந்தவை: தொலைவிலிருந்து பார்ப்பவர் அதனைக் கிறித்துவர் கோவிற்கோபுரம் எனக்கருதுவர்.[22] இம்மாதிரியே வட இந்தியாவில் உள்ள கோவில்கள் அமைந்துள்ளன. இதனால். இந்தியாவிற் புகுந்தவுடன் ஆரியர் இவ்வமைப்பைத் திராவிடரிடமிருந்து கடன் பெற்றனர் எனக் கூறலாம். ஆனால், இந்த அமைப்பு தென் இந்தியாவில் சதுரக் கோவில்கள் (Dolmens) அமைப்புடன் கலந்து வேறு புதிய அமைப்பைப் பெற்றுவிட்டது. ஆதலின், இருவகைக் கோவில் அமைப்புகள் தெற்கே பரவலாயின.[23]
பாணினி காலத்தில் கோவில்கள் இருந்தன. சாணக்கியர் காலத்திற் கோவில்கள் விமானங்களுடன் இருந்தன: அசோகன் காலத்தில் இருந்தன. இக்கோவில்கள் புத்தருக்குமுன்னரேநாட்டில் இருந்தன. கோவில் கட்டுதல் திராவிடரது பழக்கம் ஆகலாம். அதனைப் பிற்காலத்தில் ஆரியர் கைக்கொண்டனர்.[24]
திராவிடக் கலை
தூபி, சைத்தியம் என்பன திராவிடருடையன. இவற்றை ஆரியர் கடன் பெற்றனர்; இவை பிற்கால இந்து சமயக் கோவில்களில் காணப்பட்டன. இவற்றையே புத்தர் மேற்கொண்டனர்.[25] விமான வகைகள் பல தென் இந்தியாவில் உண்டு. அவ் வகைகள் எல்லாம் கல்லறைகளிலிருந்து தோன்றின என்னல் தவறாகாது.தென்கன்னட கோட்டத்தில் உள்ள ‘முதுபித்ரி’ என்னும் இடத்திற் காணப்படும் குருமார் கல்லறைகளில் மூன்று முதல் ஏழு அடுக்குகள் கொண்டு ‘விமானம்’ காணலாம். சதுரத்தின்மேல் சதுரம் வைத்துக் கட்டப்பட்ட ஏழு அடுக்குகள் கொண்ட சதுரக் கல்லறைகள் பல இந் நாட்டில் உண்டு. இவ்வமைப்புகள் நாளடைவில் பெரிய விமானங்களாக மாறிவிட்டன என்பதில் ஐயமில்லை.[26]
முன்னோர் வணக்கத்திற்காக ஏற்பட்ட பல கோவில்கள் பிற்காலத்தில் கடவுள் கோவில்களாக மாறின. அப் பழைய கோவில்களில் நீள் சதுர அறைதான் உண்டு. மேலிடம் தளமாக இருந்தது. அறைக்கு முன்புறம் ஒரு கூடம் உண்டு. முன் சொன்ன தொதவர் கோவில் போன்ற கோவில்களும் உண்டு. இவ்விரண்டும் பிற்காலத்தில் ஒன்று படுத்தப்பட்டன. சில இடங்களில் இரண்டும் தனித்துக் காணப்படுகின்றன. இவற்றின் வளர்ச்சியே இன்றுள்ள கோவில்கள்.[27] நமது தென்னிந்தியாவில் இங்ஙனம் இருந்த பண்டைக் கோவில்களைப் பார்த்தே பெளத்தரும் சமணரும் தம் கோவில்களை அமைத்துக்கொண்டனர்.[28] அவற்றைப் பார்த்தே பல்லவர் மாமல்லபுரம் முதலிய இடங்களில் கோவில்களை அமைத்தார்கள்: பண்டைக் கோவில்களில் இருந்த மண் பதுமைகளைப் பார்த்தே கற்கோவில்களில் பதுமைகளை அமைத்தார்கள்; விமானங்களையும் தூபிகளையும் பிறவற்றையும் அமைத்தார்கள்.
முடிபு
சுருங்கக் கூறின், பல்லவர் கோவில் அமைப்பு தமிழ் நாட்டுக் குடிசைக் கோவிலிருந்து உண்டானதென்னல் மிகையாகாது.[29]
தென்னாட்டுக் கட்டடக் கலை (Architecture) தமிழகத்துக்கே உரியது. இன்றுள்ள வானளாவிய கோபுரங்கள், விமானங்கள், இவற்றில் காணப்படும் வேலைப்பாடுகள் அனைத்தும் இந்நாட்டுப் பழைய வேலைப்பாடுகளிலிருந்து வளர்ச்சியுற்றவையே ஆகும். இந்த வளர்ச்சி பல நூற்றாண்டுகளாக உண்டானவை. மனிதக் குரங்கின் மண்டை ஓட்டிலிருந்து இன்றைய மனிதனது மண்டை ஓடு வளர்ச்சியுற்றாற்போலவே தமிழகக்கட்டடக்கலையும் இயல்பாகவும் அமைதியாகவும் செம்மையாகவும் வளர்ச்சி பெற்று வந்ததாகும். இதன் உண்மையை மாமல்லபுரத்துத் தேர்களைக் கொண்டும். திருப்பாதிரிப்புலியூரில் உள்ள சிவபிரான் கோவில் வேலைப் பாட்டைக் கொண்டும் நன்கறியலாம்.[30]
- ↑ இத்தகைய கோவில் திருவெண்காட்டுப் பெருங்கோவிலில் இன்றும் இருக்கிறது, அதன் வேலைப்பாடு பார்த்து வியக்கத்தக்கது.
- ↑ Loughurst “The Pallava Arehitecture” Part I, pp.22-23.
- ↑ R. Gopinatha Rao’s “E.Ind, Vol. X V, p. 15.
- ↑ Ram Raz’s “Essay on Indian Architecture’. pp.48-49.
- ↑ K.A.N. Sastrys “Cholas’, Vol.II Part I, p 486 & Vol, I, p 385.
- ↑ M.E.R. 36 of 1931.
- ↑ Dr.N.Venkataramanayya’s “Origin of S.I.Temple’. p. 53.
- ↑ சக்கரவாளக் கோட்டம், வரி:42-48, 58:59, மலர் வனம் புக்ககாதை, 127 - 131.
- ↑ மதுரைக்காஞ்சி, வரி:352-355.
- ↑ பெரும்பாண் ஆற்றுப்படை. வரி 348இ 405.
- ↑ மதுரைக்காஞ்சி. வரி. 451
- ↑ வரி 79 - 88.
- ↑ Navaratnam’s “S.I.Sculpture’ pp.56,57.
- ↑ “Sivasthala Manjari,’ p.51.
- ↑ “Sivasthala Manjari, pp.50, 91, 135.
- ↑ O.C.Gangooly’s “Indian Architecture’, p.13.
- ↑ Annual Report of the A.D.S. Circle, 1913-14, p.14.
- ↑ Ananda Alwar’s “Indian Architecture,” p.209.
- ↑ Fergusson’s “History of Indian and Eastern Architecture’ Vol.II, pp.21-22.
- ↑ Ibid.
- ↑ A.K.Kumarasamy’s ‘Arts and Crafts’, pp.118-119
- ↑ G.Oppert’s “The Original Inhabitants of the India,’ p.573.
- ↑ N. Venkataramanayya’s “Origin of S.I. Temple’, p.67.
- ↑ Ibid p.44
- ↑ Ibid p.39-55.
- ↑ Ibid pp.72-75.
- ↑ Ibid pp.78-79.
- ↑ Annual report of A.D. Southern Circle, 1914, p.34.
- ↑ இத்தகைய கோவில்களை இன்றும் காவிரிப்பூம்பட்டினத்திற் காணலாம்.
- ↑ Prof. Dubreiul’s “Dravidian Architecture’, pp.1-10, 22.