பாண்டிமாதேவி/இரண்டாம் பாகம்/அந்தரங்கத் திருமுகம்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

10. அந்தரங்கத் திருமுகம்

ஆத்திரம் கொண்ட போர் வீரனின் கைகளில் வில் வளைவ்தைப்போல் குழல்வாய்மொழியின் புருவங்கள் வளைந்தன. அரண்மனையிலிருந்து நாரயணன் சேந்தனும் வேளானும் வந்திருப்பதாகக் கேள்விப்பட்டதும் அவர்களைக் காண்பதற்காக இடையாற்றுமங்கலத்து அந்தப்புர மேல்மாடத்திலிருந்து கீழே படியிறங்கி வந்து கொண்டிருந்தாள் அவள். தன் தந்தை தனக்கு அதிகம் செல்லம் கொடுத்துக் கெடுத்துவிட்டதாக நரராயணன் சேந்தன் யாரிடமோ கூறிக்கொண்டிருந்த அந்தச் சொற்களைக் கேட்டவுடன் அவனைச் சந்திக்காம்லே திரும்பிவிடலாம் என்றுகூட அவள் எண்ணினாள். அத்தனை கோபம் அவளுக்கு உண்டாயிற்று. ‘தன் தந்தைக்கு அந்தரங்கமானவனாக இருக்கலாம்; நெருங்கிப் பழகி ஒட்டுறவு கொண்டிருக்கலாம் ஆனால், அதற்காகத் தன்னைப் பற்றி அப்படிப் பேச அவனுக்கு என்ன உரிமை?.

ஆத்திர மிகுதியால் அவனைப் பார்க்காமலே திரும்பிப் போய்விட நினைத்தவள் அப்படிச் செய்யவில்லை. அவனிடமே ஆத்திரம் தீர நேரில் கேட்டுவிடுவதென்று வந்தாள். எவ்வளவு கடுமையான சூழ்நிலையாக இருந்தாலும் தன்னிடம் சிரித்துப் பேசி அரட்டையடிக்கும் நாராயணன் சேந்தன் அன்று அவ்வாறு பேசியது அவள் உள்ளத்தில் உறைத்தது.

வேகமாகக் கீழே இறங்கிப் போய் ஒன்றும் பேசாமல் சினத்தைக் காட்டும் முகக் குறிப்புடன் அவன் முன் நின்றாள். படகோட்டி வேளானும், சில மெய்க்காவல் வீரர்களும் சூழ நின்று பேசிக்கொண்டிருந்த சேந்தன் அவள் அருகில் வந்து நின்றதும் பேச்சை நிறுத்தினான். குழல்வாய்மொழியின் பக்கமாகத் திரும்பி “அம்மணி! வணக்கம் ... தங்களைத்தான் எதிர் பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறேன். சுற்றத்தலைவர்கள் கூட்டம் முடிந்ததும் தவிர்க்கமுடியாத காரணங்களால் மகாமண்டலேசுவரர் அரண்மனையிலேயே தொடர்ந்து தங்க நேரிட்டு விட்டது. ஆனாலும் தாங்கள் இங்கே இப்படியெல்லாம் நடக்க விட்டுவிடுவீர்களென்று நாங்கள் கனவிலும் நினைக்கவில்லை. தங்கள் தந்தை அதிகமாகக் கவலைப்படும்படியான சூழ்நிலையைத் தாங்கள் உண்டாக்கியிருக்கிறீர்கள்!”–

குழல்வாய்மொழி புருவங்களுக்கு மேலே நெற்றி மேடு புடைக்க, முகம் சிவக்க கோபத் துடிப்புடன் இரைந்தாள்.

“ஐயோ! போதும், நிறுத்துங்கள், நீங்கள் மிகவும் பெரியவர். எத்தனையோ குடும்பங்களில் எவ்வளவோ தந்தைமார்களுக்கு அறிவுரை கூறிப் பழகியவர். உங்கள் அறிவுரை கிடைக்காததனால்தான் என் தந்தை அநாவசியமாக எனக்குச் செல்லம் கொடுத்துப் பாழாக்கிவிட்டார். இனிமேலாவது அவருக்கு தக்க சமயத்தில் அறிவுரை கூறி எனக்கு செல்லம் கொடுத்து விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்:

அவளிடமிருந்து வார்த்தைகள் வாங்கிக் கட்டிக் கொண்ட நாராயணன் சேந்தன் சிறிது நேரம் அந்தப் பெண்ணின் கோபத்தைப் போக்க வகை தெரியாமல் தயங்கினான். அவளைப்பற்றித் தான் பேசிக் கொண்டிருந்ததைப் படியிறங்கி வரும்போது அவள் கேட்டுக்கொண்டே வந்திருக்கிறாள் என்பது அவனுக்குப் புரிந்துவிட்டது.

“வருத்தப்பட்டுக் கொள்ளாதீர்கள். நான் சற்றுமுன் தங்களைப் பற்றி இங்கே பேசிக்கொண்டிருந்ததைத் தாங்களும் கேட்டுக் கொண்டே வந்திருக்கிறீர்கள் போலிருக்கிறது. நான் ஒன்றும் தவறாகச் சொல்லி விடவில்லை, மகாமண்டலேசுவரர் இல்லாத சமயத்தில் இங்கு நடந்திருக்கும் கவலை தரும் நிகழ்ச்சிகளை நினைத்து உணர்ச்சி வசப்பட்டு அவ்வாறு பேசியிருப்பேன். அதை ஒரு தவறாக எடுத்துக்கொண்டு என்மேல் கோபித்துக் கொள்ளக்கூடாது.”—

“உங்கள் மேல் கோபித்துக்கொள்வதற்கு நான் யார்? அப்படியே கோபித்துக்கொண்டாலும் என்னுடைய கோபம் உங்களை என்ன செய்து விடப் போகிறது?”—

குழல்வாய்மொழி சமாதானப்பட்டு வழிக்கு வருவதாகத் தெரியவில்லை. கோபம் வரும்போது பெண்களுக்கு இயல்பாக ஏற்படும் வீம்பும், முரண்டும் அவளிடமும் இருந்தன. நாராயணன் சேந்தன் குழைந்தான், கெஞ்சினான். என்னென்னவோ பேசி அவளைச் சமாதானப்படுத்த முயன்றான். வீம்பு நீடித்ததே தவிரக் குறையவில்லை. உலகத்தில் சிரமப்பட்டுத் தான் செய்ய முடியும் என்ற வகையைச் சேர்ந்த காரியங்களில் பெண்களின் வீம்புக் கோபத்தைச் சமாதானப்படுத்துவதும் ஒன்று என அவனுக்குத் தோன்றியது.

கடைசியாக, அவளைச் சமாதானப்படுத்தி முடிந்தபோதுதான் சேந்தனுக்கு நிம்மதியாக மூச்சு வந்தது.

“நீங்களே இப்படிக் கோபித்துக் கொண்டால் நான் என்ன செய்வது? உங்கள் தந்தை உங்களை உடன் வைத்துக் கொண்டு செய்யவேண்டிய பெரிய பெரிய செயல்களையெல்லாம் என்னிடம் ஒப்புவித்திருக்கிறார். முக்கியமும், அவசரமும் வாய்ந்த செய்திகளை அனுப்பியிருக்கிறார். நாம் கலந்து பேசி ஒரு முடிவுக்கு வரவேண்டும். நீங்கள் முரண்டு பிடித்தால் ஒன்றும் ஆகாது.”—

"முக்கியமும் அவசரமுமில்லாத நேரம் அப்பாவுக்கு எப்போதுதான் இருந்தது? நாட்டைப் பற்றியும் அரசாங்கத்தைப் பற்றியும், கவலைப்பட்டுக் கவலைப்பட்டுத் தம்முடைய உடல்நலத்தைப் பற்றிக் கவலைப்படுவதற்கு நேரம் இல்லையே அவருக்கு. வெளியே யாரிடமும் சொல்லாமல் பொதுக் கவலைகளையும், துன்பங்களையும், மனத்தில் தேக்கி வைத்துக்கொண்டு என்ன சுகம் கிடைத்துவிட்டது அவருக்கு?” குழல்வாய்மொழியின் பேச்சு பிடிவாதத்திலிருந்து விலகிப் போய்த் தந்தையின்மேல் அனுதாபமாக வெளிவந்தது.

"உங்களுக்கே அவை யெல்லாம் நன்றாகத் தெரிந்திருக்கின்றனவே. அம்மணி! உங்கள் தந்தைக்கு இருக்கும் பொறுப்புக்களையும், கவலைகளையும் சொல்லி நீங்களே இரக்கப்படுகிறீர்கள். தமது மாளிகையில் தம் பொறுப்பில் வைக்கப்பட்டிருந்த அரசுரிமைப் பொருள்கள் கொள்ளைபோய் விட்டதென்று தெரிந்தால் அவர் எப்படி அதிர்ச்சியடையாமல் இருக்கமுடியும்?” சேந்தனுடைய பேச்சு வளர்கிற விதத்தைக் கண்டு குழல்வாய்மொழிக்கு வேறு வகை அச்சம் ஏற்பட்டது. ‘வசந்தமண்டபத்திலிருந்த துறவி காணமற்போனது பற்றியும் தன்னிடம் அவன் துண்டித் துளைத்து ஏதாவது கேள்விகள் கேட்பானே?' என்று சிறிது கலவரமடைந்தது அவள் உள்ளம். இந்தக் கலவரமும், தந்தையிடமிருந்து அவன் கொண்டுவந்திருக்கும் முக்கியச் செய்திகளைத் தெரிந்து கொள்ளும் ஆவலும் அவள் சினத்தைப் போக்கிவிட்டன.

பிறர் எந்தச் செய்தியைத் தன் வாயிலிருந்து கேட்பதற்கு அதிக ஆர்வத்தோடு துடித்துக் கொண்டிருக்கிறார்களோ அந்தச் செய்தியை உடனடியாகச் சொல்லி முடித்துவிடாமல் அவர்களுடைய ஆவலைத் தொடரச்செய்து தன் காரியத்தைச் சாதித்துக்கொள்ளும் தந்திரத்தை மேற்கொண்டான் நாராயணன் சேந்தன்.

"மகாமண்டலேசுவரருடைய திருக்குமாரியிடம் அதிகப்படியான கேள்விகைைளக் கேட்டுப் புண்படுத்த வேண்டுமென்று நான் கருதவில்லை. அதே சமயத்தில் ஒன்றும் கேட்க விரும்பாமலும் இருக்க முடியவில்லை!”

"கேட்டுத் தெரிந்துகொள்வதற்கு என்ன இருக்கிறது: இங்கே நடந்தவற்றையெல்லாம்தான் அம்பலவன் வேளான் அங்கு தெளிவாகச் சொல்லியிருப்பானே”

குழல்வாய்மொழியிடமிருந்து கொஞ்சம் அமைதியாகப் பதில் வந்தது. முன்பிருந்த படபடப்பும் ஆத்திரமும் இல்லை. நாராயணன் சேந்தன் சிரித்துக்கொண்டான் 'ஏ, அப்பா! தங்கம் நிறுக்கும் பொன் வணிகனைப்போல் மகாமண்டலேசுவரர்தான் ஒரு சொல் மிகாமல், ஒரு சொல் குறையாமல், அளந்து எண்ணி அளந்து பேசுவார் என்றால் அவருடைய புதல்வி அவரைக்காட்டிலும் அழுத்தமாக இருக்கிறாளே?’ என்று அவன் மனத்துக்குள் நினைத்துக் கொண்ட நினைப்பின் சாயைதான் சிரிப்பாக வெளிப்பட்டு மறைந்தது.

“என்னிடம் எதையெல்லாமோ கேட்டு நேரத்தைக் கடத்துகிறீர்களே தவிர, என் தந்தை உங்களிடம் கூறி அனுப்பியிருப்பதாகச் சொன்ன முக்கியச் செய்திகளைப் பற்றி நீங்கள் கூறப்போவதாகவே தெரியவில்லையே?”

“அவற்றை இந்த அகால நேரத்தில் இங்கு நான் விவரித்துக் கொண்டிருப்பதைத் காட்டிலும் நீங்களே படித்துத் தெரிந்துகொள்வது நல்லது. உங்கள் தந்தை உங்களுக்குகென்று அந்தரங்கமாக எழுதி அனுப்பியிருக்கும் விரிவான திருமுகத்தை உங்களிடம் கொடுத்துவிட்டுப் போகிறேன். அதைப் படித்து எல்லாவற்றையும் நன்கு சிந்தித்து ஒரு முடிவுக்கு வாருங்கள். நாளைக் காலையில் விடிந்ததும் உங்களைச் சந்திக்கிறேன்.”

சேந்தன் மகாமண்டலேசுவரரின் அந்தரங்கத் திருமுகத்தை அவளிடம் எடுத்துக்கொடுத்துவிட்டுத் தூங்கச் சென்று விட்டான்.

மனத்தில் பெருகும் ஆவலையும், பரபரப்பையும் அடக்கிக் கொண்டு அந்தத் திருமுகச் சுருளோடு தன் தனியறைக்குச் சென்றாள் குழல்வாய்மொழி. அதைப் படித்து அறிந்து கொள்வதற்கு முன் அவள் மனத்தில் பல்வேறு உணர்ச்சிகள் தடுமாறின. தந்தை என்ன எழுதியிருப்பாரோ என்று எண்ணும்போதே பயம், பதற்றம், வியப்பு அத்தனையும் அவளைப் பற்றிக்கொண்டன. அவள் இருந்த அறை அவளுடைய கன்னிமாடத்தின் மேற்பகுதியில் ஒதுக்குப்புறமாக இருந்தது. அவளுடைய அணிகலன்கள், அலங்காரப் பொருள்கள், இசைக் கருவிகள் இவையெல்லாம் மறைந்திருந்த அந்தத் தனியறையில் பிறர் அதிகம் பழக முடியாது. பணிப் பெண்கள் வண்ணமகளிர்கூட முன் அனுமதியின்றி அந்த அறைக்குள்ளே வரக்கூடாது.

அறைக்குள் மங்கலாக எரிந்து கொண்டிருந்த தீபச் சுடரின் நுனியைத் தூண்டிவிட்டாள். சுடர் குதித்தெழுந்தது. ஒளியும், வனப்பும் மிக்க அந்த அறையின் பொருட்கள் தீப ஒளியில் கவர்ச்சி செறிந்து காட்சி அளித்தன. எத்தனைவிதமான யாழ்கள்? எவ்வளவு வகை மத்தளங்கள்? இன்னும் இசை, நாட்டியக் கலைகளில் பயிற்சியுள்ளவர்கள் பயன்படுத்தும் வகை வகையான நளினகலைக் கருவிகள் நாற்புறமும் அறையில் தென்பட்டன. குழல்வாய்மொழி தீபத்தின் கீழே அமர்ந்து திருமுகத்தைப் பிரித்தாள். தந்தையின் திருமுகத்தையே பார்ப்பதுபோல் அவள் விழிகளில் பயபக்தி ஒளிர்ந்தது.

“ஒருவர் மற்றொருவருக்கு எழுத்து மூலம் எழுதி அனுப்பும் செய்திக்குத் தமிழில் ‘திருமுகம்’ என்று எவ்வளவு பொருத்தமாகப் பெயரிட்டிருக்கிறார்கள்! ஒருவர் எழுதியதைப் படிக்கும்போது படிக்கிறவருக்கு எழுதியவரின் முகம் தானே நினைவுக்கு வருகிறது!”

தந்தையின் முகத்தை நினைவுபடுத்திக் கொண்டபோது பெயர்ப் பொருத்தத்தைப் பற்றிய இந்த அழகிய கற்பனையும் அவளுக்குத் தோன்றியது. திருமுகத்தைப் படிக்கலானாள்.

“அருமைப் புதல்வி குழல்வாய்மொழிக்கு, எல்லா நலங்களும் பெருகுக, மங்கலங்கள் யாவும் பொலிக செல்வக் குமாரி! என்னுடைய இந்தத் திருமுகத்தை படிக்கத் தொடங்கும் முன் படித்துக்கொண்டிருக்கும் போது, படித்தபின் ஒவ்வொரு நிலையிலும் உன் மனத்தில் எந்தெந்த உணர்ச்சிகள் அலைமோதும் என்பதை இதை எழுதும் முன்னாலேயே இங்கிருந்தே என்னால் நினைத்துப் பார்க்க முடிகிறது. ஆனாலும் எழுத வேண்டியதையெல்லாம் உனக்கு எழுதித்தான் ஆகவேண்டும்.

எப்போதுமே உன் தந்தைக்கு வியப்பு உணர்ச்சி குறைவு என்பது உனக்குத் தெரியும். எதையும் எதற்காகவும், ஆச்சரியமாகக் கருதாமல் சர்வ சாதராணமாக நினைப்பவனுக்கு அதிசயங்களிலும் அபூர்வ அற்புதங்களிலும் எப்படி ஈடுபாடு இருக்கமுடியும்? ஆச்சரியம் எவ்வாறு ஏற்பட முடியும்? உணர்ச்சி மயமாகவே வாழ்பவர்களால் வாழ்க்கையில் எதிலும் ஒட்டிக்கொண்டு கலந்து எதையும் அனுபவிக்க முடிகிறது. உணர்ச்சிகளை வென்று புளியம் பழமும் அதை மூடிக்கொண்டிருக்கும் ஒடும் போல் ஒட்டாமல் வாழ்ந்தால் சமய சமயங்களில் வேதனைப்படத் தான் வேண்டியிருக்கிறது. ஆச்சரியப் படத் தெரியாதவன் மற்றவர்களுக்கு ஆச்சரியப் பொருளாகவே ஆகி விடுகிறான். என்னைப் போன்ற ஒருவன் தன் அறிவால் மட்டுமே வாழ்ந்துபார்க்க முயன்றால் என்னைச் சுற்றியிருக்கும் பல்லாயிரம் பேர்களுக்கு நான் ஒர் ஆச்சரியம். ஒரு புதிர் என்று ஆகி விடுகிறேன். அப்படி ஆகும்போது சந்தர்ப்பங்கள் என்னைக் காலை வாரிவிட ஒவ்வொரு கணமும் நெருங்குகின்றன.

புதல்வி! அம்பலவன் வேளான் வந்து கூறிய செய்திகள் ஆச்சரியப் படத் தெரியாது, அதிர்ச்சியுற அறியாமல் இருந்த எனக்கும் அவற்றை உணர்த்தி விட்டன. மற்றவர்களுக்குத் தெரிந்து விடாமல் நானும் ஆச்சரியப்பட்டேன். நானும் அதிர்ச்சியடைந்தேன். உன்னால் எனக்கு ஏற்பட்ட தோல்விகள், அவை போகட்டும்! நான் அங்கிருந்து புறப்படும்போது எவ்வளவு எச்சரிக்கை செய்து விட்டுப் புறப்பட்டேன்? பெண்ணே! வசந்த மண்டபத்தில் வந்து தங்கியிருக்கும் துறவியை ஒவ்வொரு கணமும் அருகிருந்து கவனித்துப் பேணிக்கொள்ள வேண்டியது உன் பொறுப்பு. ‘அந்நியர்களை அவரோடு சந்தித்துப் பழகவிடக் கூடாது’ என்று நான் கூறிவிட்டு வந்த அறிவுரையை நீ புறக்கணித்து விட்டாய்போலும்! துறவியாக வந்து தங்கியிருந்து யார் என்று நீயே தெரிந்து கொண்டிருப்பாய். தெரியாமலிருந்தால் நாராயணன் சேந்தன் விளக்குவான்.

“யாரோ வந்தார்கள், சந்தித்தார்கள், வசந்த மண்டபத்தில் கூடிப்பேசினார்கள். மறுநாள் விடிந்தபோது வந்தவர்களையும் காணவில்லை. துறவியையும் காணவில்லை, பாதுகாவலில் வைக்கப்பட்டிருந்த அரசுரிமைப் பொருள்களையும் காணவில்லை” என்று வேளான் வந்து கூறினான்.

குழல்வாய்மொழி! வடக்கே போருக்கும், பூசலுக்கும் எதிரிகள் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். மகாராணி கவலைகளால் மன நிறைவு இழந்து காணப்படுகிறார். கூற்றத்தலைவர்கள் என்னைச் சரியாகப் புரிந்து கொள்ளாமல் ஏதேதோ கேள்விகளையெல்லாம் கேட்டுத் துளைக்கிறார்கள். தளபதிக்கு என்மேல் இருக்கும் சந்தேகங்களைப் பார்த்தால் அவற்றை இப்போதைக்குப் போக்க முடியாது போலிருக்கிறது. அறிவின் அளவைக் கொண்டு செயல்களைத் திட்டமிட்டு வரும் எனக்கும், உணர்வின் அளவைக் கொண்டு என்னைக் கண்காணித்து வரும் மற்றவர்களுக்கும் நடுவில் இப்படி ஓர் உள்துறை பிளவு இருந்து வருகிறது. நான் என் மனத்துக்குள்ளேயே பாதுகாக்க விரும்பும் செய்திகளை அறிந்துகொள்ள முயல்கின்றவர்கள் அதிகமாகி விட்டார்கள். இந்த நிலையில் எனது பலவீனத்தை வளர்ப்பது போன்ற செய்திகளை அம்பலவன் வேளான் வந்து கூறினான். ஆனாலும் நான் இதுவரையில் கலங்கிவிடவில்லை. தளர்ந்துவிடவில்லை, சோர்ந்துவிடவில்லை. எனக்கு என்மேல் என் அறிவின் மேல் இன்னும் நம்பிக்கை இருக்கிறது.

இந்தச் சமயத்தில் உன்னிடமும் நாராயணன் சேந்தனிடமும்.ஒரு பொறுப்பை அளிக்கிறேன். இடையாற்று மங்கலத்திலிருந்து நீங்கள் இருவரும் இந்தத் திருமுகத்தைப் படித்த மறுநாள் காலையிலேயே புறப்பட வேண்டும். கொள்ளை போன சுந்தர முடியையும் பொற் சிம்மாசனத்தையும் வீரவாளையும் தேடிக் கண்டுபிடிக்கும் முன்பே அவைகளை ஆள்பவனைக் கண்டுபிடிக்க வேண்டும். என் அனுமானம் உண்மையானால் அவைகளை ஆள்பவனைக் கண்டுபிடித்தால் அவனிடமே அவைகளைக் காணலாம். அவனைக் கண்டுபிடிக்க வேண்டுமானால் அந்த இளந்துறவியைக் கண்டுபிடிக்க வேண்டும்.

உண்மையை மறைத்து எழுதுவானேன்? நம்முடைய வசந்த மண்டபத்தில் வந்து தங்கியிருந்த இளந்துறவிதான் குமாரபாண்டியன் இராசசிம்மன். நாராயணன் சேந்தனிடம் கேட்டறிவதற்கு முன் நானே சொல்லி விட்டேன் உனக்கு ஒரு வேளை எங்கள் இருவரையும் முந்திக் கொண்டு இதை நீ அறிந்திருந்தால் உனக்கு மதி நுட்பம் மிகுதிதான். குமாரபாண்டியனை விரைவில் அழைத்து வருவதாக மகாராணிக்கு வாக்களித்துவிட்டேன். நான் தேடிக்கொண்டு புறப்பட முடியாதபடி இருக்கிறது சூழ்நிலை. வேறு யாரையும் அனுப்புவதற்குமில்லை. அதில் எனக்கு நம்பிக்கையுமில்லை. உடனே புறப்படுங்கள். எங்கே எப்படித் புறப்பட வேண்டுமென்று தயங்காதே. உனக்கு அது தெரியும்.! உன் உள்ளத்துக்கும் அது தெரியும். சேந்தனுக்கும் சேந்தனுடைய உள்ளத்துக்கும்கூடத் தெரியும். உரிமையோடும், உரியவனோடும் திரும்பி வாருங்கள். படித்து முடித்ததும் நீ எந்த விளக்கின் ஒளியிலிருந்து இதைப் படிக்கிறாயோ, அதன் சுடர்ப் பசிக்கு இதை இரையாக்கி விடு”

அவள் அப்படியே செய்துவிட்டாள்.