பாண்டிமாதேவி/இரண்டாம் பாகம்/விலாசினியின் வியப்பு

விக்கிமூலம் இலிருந்து

9. விலாசினியின் வியப்பு

அரண்மனைத் தோட்டத்து மரத்தடியில் தளபதியை அந்தரங்கமாகச் சந்தித்தபின் பகவதிக்குச் சுறுசுறுப்பாகத் திட்ட மிட்டுக் கொண்டு செய்ய வேண்டிய சில காரியங்கள் இருந்தன. அண்ணன் அவளிடம் சொல்லிவிட்டுப் போயிருந்த செயல்கள் எத்துனைப் பெரியவை? அவற்றை ஒழுங்காகவும், பிறருக்குத் தெரியாமலும் செய்து முடிப்பதற்கு எவ்வளவு சூழ்ச்சியும், சாதுரியமும் வேண்டும்?

தமையனின் அந்தச் சொற்கள் அவளுடைய செவிகளில் ஒலித்துக்கொண்டே இருந்தன.

“நீ என்னுடைய தங்கை ...! இந்தச் சூழ்நிலையில் என்னுடைய தங்கையிடமிருந்து நான் சில வீரச் செயல்களை எதிர்பார்க்கிறேன்."

நாட்டின் பயங்கரமான சூழ்நிலையை விளக்க அண்ணன் உதாரணமாகக் கூறிய துன்பக் கதையை நினைத்துக் கொண்டபோது அவனுடைய கதை கூறும் திறமையை எண்ணிச் சிரிப்பு வந்தது அவளுக்கு எவ்வளவு இரகசியமாக எவ்வளவு நம்பிக்கையோடு அண்ணன் இந்தக் காரியங்களை அவளிடம் ஒப்படைத்துப் போயிருக்கிறான்? இதை எண்ணும் போது மட்டும் ஈடில்லாத பெருமிதத்தை அடைந்தாள் பகவதி, எல்லாப் பொறுப்புகளையும் தன்னுடையதாக இழுத்துப் போட்டுக்கொண்டு செயலாற்ற முந்தும் ஒரு வீரனுக்கு உடன் பிறந்தவள்தான் அப்படிப்பட்ட பெருமிதத்தை அடையலாம்.

அவள் தோட்டத்துக்குப் போய்விட்டுத் திரும்பிவந்த சிறிது நேரத்துக்கெல்லாம் ஆசிரியர் மகள் விலாசினி அவளைத் தேடிக்கொண்டு வந்தாள். -

“என்னடியம்மா! திடீரென்று உன்னை இங்கே காணவில்லை? சிறிது நேரத்துக்கு முன்னால் இங்கு வந்தேன். நீ இல்லாததால் திரும்பிப் போய் விட்டேன்” என்றாள் விலாசினி.

“அதங்கோட்டாசிரியர் பிரானின் அருமைப் புதல்வியார் தேடிக்கொண்டு வரபோகும் விவரம் முன்பே தெரிந்திருந்தால் நான் இந்த இடத்தை விட்டு நகர்ந்திருக்கவே மாட்டேன். மன்னித்தருள வேண்டும்” என்று சிரிக்காமல் பேசினாள் அவள். விலாசினி செல்லமாகக் கோபித்துக் கொள்வதுபோல் பகவதியை உறுத்துப் பார்த்தாள்.

“போதும், கேலிப் பேச்சு! சற்றுமுன் எங்கே போயிருந்தாய்

“கேட்கிற கேள்வியைப் பார்த்தால் உன்னிடம் சொல்லிக் கொள்ளாமல் நான் எங்கும், எதற்கும் போய்விட்டு வரக்கூடாது போல் அல்லவா இருக்கிறது?” என்றாள் பகவதி வியப்புடன். “போ போ! நன்றாகப் போய்விட்டுவா. எனக்கென்ன வந்தது? உன்னைப் போகக்கூடாது என்று.தடுக்க நான் யார்? மகாராணி உன்னைப் பார்த்துக் கூப்பிட்டுக் கொண்டு வரச் சொன்னார்கள். அதனால்தான் வந்தேன்!"

ஒரு பிணக்குமில்லாமலே சண்டை போடுவதுபோல் இப்படிப் பொய்க் கோபத்தோடு பேசிக்கொள்வது அந்த இரு பெண்களுக்கும் பொழுதுபோக்கான ஒரு விளையாட்டு. ‘மகாராணி என்ற பெயரை விலாசினி எடுத்தவுடன் பகவதி கலவரமடைந்தாள். விலாசினிதான் ஏதாவது அரட்டை அடிப்பதற்குத் தேடி வந்திருப்பாள் என்று எண்ணி வம்பு பேசிய பகவதி பரபரப்புற்று, “ஐயோ! மகாராணியா கூப்பிட்டார்கள்? வந்தவுடனே இதைச் சொல்லியிருக்கக் கூடாதா நீ?” என்று அவளைத் துரிதப்படுத்தி வினவினாள்.

‘ஏனடி பதறுகிறாய் ! ஒன்றும் அவசரமான காரியமில்லை. கோட்டாற்றுச் சமணப் பள்ளியிலிருந்து அந்த மொட்டைத் தலைச் சாமியார்கள் வந்து மகாராணியிடம் பேசிக்கொண்டிருந்தார்கள். அவர்களிடமிருந்து மகாராணி ஏதோ ஒரு பாட்டை எழுதி வாங்கி வைத்துக்கொண்டார். அதை உன் வாயால் பண்ணோடு பாடிக் கேட்கவேண்டும் போல ஆசையாக இருக்கிறதாம்!” என்றாள் விலாசினி.

“இவ்வளவுதானா?” “இவ்வளவேதான் செய்தி, நீ அன்று நிலா முற்றத்தில் என் நடனத்தின் போது பாடிய திருவாசகப் பாட்டைக் கேட்டதிலிருந்தே உன்னுடைய குரலில் மகாராணிக்கு ஒரே மோகம்.” - -

“ஏன்? உன் நாட்டியத்தில் மட்டும் மோகமில்லை யாக்கும்? விலாசினியை எதிர்த்துக்கேட்டாள் பகவதி. - -

“சரி சரி. நீ வா. மகாராணியைப் போய்ப் பார்த்துவிட்டு வந்து, அப்புறம் நமக்குள் வம்பளக்கலாம்” என்று குரலைக் கடுமையாக்கிக்கொண்டு பகவதியைக் கூப்பிட்டாள் அவள்.

அவசரம் அவசரமாக உடை மாற்றி அலங்கரித்துக் கொண்டு விலாசினியோடு புறப்பட்டாள். பகவதி.

மகாராணி அவர்களை அன்போடு வரவேற்றாள். பகவதி இன்று என் உள்ளம் பல காரணங்களினால் அலமந்து கிடக்கிறது. இந்தமாதிரிக் கவலைகளை மறக்கத் தெய்வத்தை

நினைக்கவேண்டும். அல்லது தீந்தமிழ் இசையைக் கேட்க வேண்டும். கோட்டாற்றுப் பண்டிதர் வந்து கவலைக்கு மருந்தளித்துப் பேசிக் கொண்டிருந்தார். அவரும் போய்விட்டார். உன்னுடைய வாயால் பாடிக் கேட்க வேண்டுமென்பதற்காகவே அவரிடம் இந்தப் பாட்டை நான் எழுதி வாங்கிக்கொண்டேன்’ பகவதியின் கையில் அந்த ஒலையைக் கொடுத்தார் மகாராணி. ஒருதரம் வாய்க்குள் முணுமுணுத்தாற்போல் பாடிப்பார்த்துக் கொண்டு அதற்கு பண் நிர்ணயம் செய்யச் சில கணங்கள் பிடித்தன அவளுக்கு. ...

“தேவி! இந்தப் பாடலைப் பழம்பஞ்சுரப் பண்ணிலும் பாடலாம், இந்தளப் பண்ணிலும் பாடலாம்.” * ...

“இரண்டிலுமே தனித்தனியாகப் பாடிக்காட்டேன். கேட்கலாம்!” மகாராணியிடமிருந்து ஆணை பிறந்தது. -

மோனத்தைக் கிழித்துக்கொண்டு பழம்பஞ்சுரம் எழுந்தது. பின்பு இந்தளம் இனிமை பரப்பியது. பகவதியே வீணையும் வாசித்துக்கொண்டாள். பொல பொலவென்று பூக்குவியலை அள்ளிச் சொரிவதுபோல் ஒரு மென்மையை எங்கும் இழையவிட்டது அவள் குரல். செவிவழிப் புகுந்து பாய்ந்த அந்த இனிமையில் தன்னை மறந்து இலயித்துப் போய்ச் சிலையாய் வீற்றிருந்த மகாராணிக்குச் சுயநினைவு வந்தது. பகவதி பாடல் ஒலையைத் திருப்பி அளித்தாள்!

“குழந்தைகளே! நம்முடைய தமிழ் மொழிக்கு எவ்வளவு ஆற்றல் இருக்கிறது பார்த்தீர்களா? பேசினால் ஒருவகை இனிமை. பாடினால் ஒருவகை இனிமை, எழுதினால் ஒருவகை இனிமை. இறைவன் தந்த மொழிக்குள் எத்தனை கோடி இன்பங்களை வைத்திருக்கிறான்!” என்று மகாராணி வியந்து கூறினார். . . . . . .

பாடற் பண்களின் பெயர்களைப் பற்றிய அராய்ச்சி நாட்டியத்தில் மெய்பாடு வகைகள், இவ்வாறு எதை எதையோ பற்றி மகாராணியோடு சிறிது நேரம் உரையாடிக்கொண்டிருந்து விட்டு விடைபெற்றுக் கொண்டு புறப்பட்டனர் அந்தப் பெண்கள் இருவரும். போகும்போது விலாசினி மறுபடியும் பகவதியின் வாயைக் கிண்டினாள். “இப்போது நீயே சொல்!

மகாராணிக்கு உன்னுடைய பாடலில் எவ்வளவு ஆசை தெரியுமா?” -

‘போடி, பைத்தியமே ! ஆலையில்லாத ஊருக்கு இலுப்பைபூச் சர்க்கரை மாதிரித்தான். நீயும் நானும். ஏதோ ஆளுக்கொரு கலை அன்ரகுறையாகத் தெரியும், உனக்கும் நாட்டியம் தெரிந்த அளவு பாடத்தெரியாது. எனக்குப் பாடத் தெரிந்த அளவு ஆடத் தெரியாது. எல்லாக் கலைகளும் தெரிந்த பெண்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். இடையாற்றுமங்கலத்து நங்கை குழல் வாய்மொழி - அவளை நீயும் நானும் சிறுவயதில் பார்த்தது, இப்போது அவள் எப்படி இருக்கிறாளாம், தெரியுமா? ஆடல், பாடல், பேச்சு, சிரிப்பு, பார்வை, அத்தனையும், அத்தனைக் கலைகளாம் அவளிடம். அவள் இங்கு வந்து மகாராணியோடு ஒரு நான்கு ஐந்து நாட்கள் நெருங்கிப் பழகிவிட்டால் நீயும், நானும், பின்பு இருக்குமிடமே தெரியாது!” - பகவதி நிறுத்தாமல் பேசிக் கொண்டே போனாள். திடீரென்று தொடர்பில்லாமல் அவள் இடையாற்று மங்கலம் நங்கையைப் பற்றிப் பேசுவதற்குக் காரணமென்னவென்று விலாசினிக்கு விளங்கவில்லை. அவள் வியப்பு அடைந்தாள்.

“ஏதடி அம்மா? திடீரென்று அந்தப் பெண்ணின் மேல் உனக்கு இவ்வளவு பொறாமை?” -

“பொறாமையாவது, ஒன்றாவது? அவளைப் பற்றி இன்றைக்குச் சில செய்திகள் கேள்விப்பட்டேன். அதிலிருந்து அதே நினைவு!” என்றாள். -

‘யாரிடத்தில் கேள்விப்பட்டாயோ?” விலாசினி யிடமிருந்து இக்கேள்வியைப் பகவதி எதிர் பார்க்கவே இல்லை. வாய் தவறிப் பேச்சுவாக்கில் தனக்கு இரகசியமாகக் கூறப்பட்டவற்றை வெளிப்படையாக வெளியிட்டுவிட்டதை எண்ணி உதட்டைக் கடித்துக் கொண்டாள். “கொஞ்சம் பொறாமை தலைகாட்டினால் என்னைப் போன்ற ஒரு பெண் எவ்வளவு சாதரணமாக அதைக் காட்டிக் கொண்டு விடுகிறாள்’ என்று தன்னையே கடிந்து கொண்டாள். நா. பார்த்தசாரதி - 35i

“என்னடி பகவதி நான் கேட்கிறேன். பதில் சொல்லாமல் சிந்தனையில் ஆழ்ந்துவிட்டாய்?”

பகவதி அவளுடைய கேள்விக்கு பதிலே சொல்லாமல் பேச்சை வேறு திசையில் மாற்றிப் பார்த்தாள். ஆனால் அவள் விடவில்லை. பகவதியைத் துளைத்தெடுத்து விட்டாள்.

“இடையாற்றுமங்கலத்துப் பெண்ணைப்பற்றித் தெரியாமல் உன்னிடம் சொல்லிவிட்டேனடி. அம்மா! நீ என்னைத் துண்டித்துருவிக் கேள்வி கேட்டு வாயைப் பிடுங்காதே!” என்று சிறிதளவு கடுமையான குரலில் எரிந்து விழுந்தாள் பகவதி. விலாசினிக்கு முகம் சுண்டிவிட்டது. பேசுவதற்கு ஒன்றும் தோன்றாமல் வாயடைத்துப்போய் நின்றாள் அவள். அந்த நிலையில் பகவதியோடு அங்கிருப்பதற்கே பிடிக்கவில்லை அவளுக்கு. -

“நான் அப்புறம் வந்து சந்திக்கிறேன்! இப்போது உன் மனநிலை சரியில்லை போலிருக்கிறது” என்று சொல்லி விட்டு அங்கிருந்து போய்விட்டாள். “விலாசினி! மனநிலையெல்லாம் சரியாகத்தான் இருக்கிறது. நீ போகாதே, சிறிது நேரம் இரு; பேசிக்கொண்டிருக்கலாம்” என்று பகவதி கூப்பிட்டும் அதைக் காதில் வாங்கிகொள்ளாதவள் போல் நிற்காமல் போய்விட்டாள் அவள். -

“அடாடா! வீணாக இவள் மனத்தைப் புண்படுத்தி விட்டேனே” என்று உள்ளுற வருந்தினாள் பகவதி. பின்பு ஏதோ ஒரு திட்டமான முடிவுக்கு வந்தவள் போன்ற முகபாவத்துடன் தான் தங்கியிருந்த அந்தப்புரப் பகுதியின் அறைக்கதவை உட்புறமாக அடைத்துத் தாழிட்டாள்.

அப்படிக் கதவு அடைத்துத் தாழிடப்படுவதைக் கீழே தோட்டத்து வழியாக இறங்கிப் போய்க் கொண்டிருந்த விலாசினி பார்த்துவிட்டுப் போனாள். “இருந்தாற் போலிருந்து பகவதிக்கு என்ன வந்துவிட்டது?” என்ற சிந்தனைதான் அவள் உள்ளத்தில் போகும்போது புரண்டுகொண்டிருந்தது. கொஞ்ச நேரத்துக்குப் பின் தன் தந்தை அதங்கோட்டாசிரியரைச் சந்தித்தபோது அவள் அதையும் மறந்துவிட நேர்ந்தது.

“விலாசினி! நாளை காலையில் நானும் பவழக்கனிவாயரும் ஊருக்குப் புறப்பட ஏற்பாடு செய்திருக்கிறோம். நீ எங்களோடு வருகிறாயா? அல்லது இங்கே அரண்மனையிலேயே இன்னும் சில நாட்கள் தங்கியிருக்கப் போகிறாயா? உன் விருப்பம் போல் செய்யலாம், நான் எதையும் வற்புறுத்தவில்லை. நீ இங்கே தங்கியிருந்தால் மகாராணியாருக்கு ஆறுதலாகவும், துணையாகவும் இருக்கும் போலிருக்கிறது. உன் தோழி பகவதி வேறு இங்கு இருக்கிறாள். உங்கள் இருவரையும் சமீபத்தில் ஊருக்குப் போகவிடும் நோக்கம் மகாராணியாருக்கு இல்லை என்பதை அவர்களோடு பேசிக்கொண்டிருக்கும்போது குறிப்பாக அறிந்தேன்” என்று மகளிடம் கூறினார் ஆசிரியர் பிரான். இங்கிருப்பதா? ஊருக்குப்போவதா? என்று ஒரு சிறு போராட்டம் இரண்டொரு விநாடிகள் அவள் மனதில்

“அவசரமில்லை! நிதானமாக யோசித்துச் சொல்லம்மா” என்றார் அவளுடைய அருமைத் தந்தை.

“யோசிப்பதற்கு இதில் என்ன இருக்கிறது அப்பா? நான் இருந்தே வருகிறேன், நீங்கள் போய்விட்டு வாருங்கள்!” ஒரு தீர்மானமான முடிவுடன் தந்தைக்கு மறு மொழி கூறிவிட்டாள் அவள. - -

“மிகவும் நல்லது! இதைத்தானே. நானும் சொன்ன்ேன்” என்று சிரித்துக்கொண்டே சொல்லிவிட்டுப் போய்விட்டார் ஆசிரியர்பிரான். - - -

என்னதான் எடுத்தெறிந்து பேசிவிட்டாலும் பழக்கமானவர்களைச் சந்திக்காமலிருக்க மனம் ஒப்புவதில்லையே? பகவதியிடம் பேசிக்கொண்டிருக்கும் போது மனமுறிவு ஏற்பட்டுத் திடீரென்று தான் அங்கிருந்து வந்துவிட்டதை அவள் தப்பாக எடுத்துக் கொள்வாளோ என்ற எண்ணம் அன்றிரவு படுக்கையில் படுத்தபோது மீண்டும் விலாசினியைப் பற்றிக் கொண்டது. அப்போது இரவு பத்துப் பதினோரு நாழிகைக்கு மேலாகியிருக்கும். அரண்மனையில் அமைதி பரவத் தொடங்கியிருந்தது. பகவதியைப் போய்ப் பார்த்து அவளோடு சிறிது போது

பேசிக்கொண்டிருந்துவிட்டு வந்தால்தான் நிம்மதி உண்டாகும் போலிருந்தது. விலாசினிக்கு மிக மென்மையான சுபாவம். பிறர் தன்னை நோகச் செய்தாலும் சரி, தான் அறியாமல் பிறரை நோகச் செய்தாலும் சரி, விரைவில் அதற்காக வாட்டமடைந்து விடுவது அவள் இயல்பு. உறக்கம் வராமல் மஞ்சத்தில் இதே நினைவோடு புரண்டு கொண்டிருந்த விலாசினி, “போய் அவளைப் பார்த்துப் பேசி விட்டே திரும்புவது” என்ற உறுதியுடன் கிளம்பினாள். முன்பெல்லாம் அவர்கள் ஒரே இடத்தில் அருகருகே சேர்ந்து படுத்துக்கொள்வார்கள். தூக்கம் வரும்வரை எதைப் பற்றியாவது பேசிக்கொண்டிருந்து விட்டுத் தூங்குவார்கள். இப்போது தனித்தனியே அவரவர்கள் தங்கியிருந்த இடங்களில் படுத்துக் கொண்டதால் விலாசினி பகவதியைப் போய்ப் பார்க்க வேண்டியிருந்தது. அதற்குள் பகவதி படுத்துத் துரங்கியிருந்தால் என்ன செய்வது? என்ற சந்தேகம் போகும்போது அவளுக்கு ஏற்பட்டது. தூங்கியிருந்தால் பேசாமல் திரும்பி வந்துவிடுவோம். காலையில் பார்த்துக் கொள்ளலாம் என்று தனக்குத்தானே சமாதானமும் செய்து கொண்டு மேலே நடந்தாள்.

விலாசினி பகவதியின் அறைவாசலை அடைந்தபோது அறைக்குள் விளக்கெரிவது தெரிந்தது. துரங்கவில்லை. விழித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள் போலும் என்று தனக்குள் மெல்லச் சொல்லிக் கொண்டாள் விலாசினி. அறையின் கதவு அடைத்து உட்புறமாகத் தாழிட்டிருப்பது போல் தெரிந்தது. விலாசினிக்குக் கதவைத் தட்டலாமா, வேண்டாமா, என்று ஒரு தயக்கம் ஏற்பட்டது. அறைக்குள் எட்டிப்பார்த்து விட்டுத் தட்டலாம் என்று அறைக் கதவின் இடப்பக்கம் இருந்த சாளரத்தை நெருங்கி உள்ளே எட்டிப் பார்க்க முயன்றாள் அவள். சுவரில் சாளரம் அவளுடைய உயரத்தை விட அதிகமான் உயரமுள்ள இடத்தில் அமைந்திருந்ததனால் எட்டவில்லை.

என்ன செய்வதென்று தெரியாமல் திகைப்பும் வியப்பும் அடைந்து, சுற்றும் முற்றும் மருண்டு பார்த்துக்கொண்டு நின்றாள் பா. தே.23

விலாசினி. அப்போது அங்கே ஒரு மூலையில் கிடந்த மர முக்காலி அவளுக்கு அபயமளித்தது. அந்தப் பகுதியில் விதானத்திலுள்ள, சரவிளக்குகளை ஏற்றவரும் அரண்மனை பணிப்பெண்கள் உயரத்துக்காக அதை இழுத்துப் போட்டுக் கொண்டு அதன் மேல் நின்று விளக்கேற்றுவார்கள். விளக்கேற்றியதும் எடுத்துக்கொண்டு போய் விடும் அந்த முக்காலியை அன்று மறந்துபோய் அங்கே போட்டுவிட்டுப் போயிருந்தனர். அந்த முக்காலியையும் அங்கே போட்டுவிட்டுப் போன அரண்மனைப் பணிப்பெண்களையும் மனமார வாழ்த்திவிட்டு ஒசைப் படாமல் அதைத் தூக்கிச் சாளரத்தை ஒட்டினாற்போலச் சுவர் அருகில் கீழே வைத்தாள்.

கால் சிலம்புகள் கைவளைகள் ஒசைப்பட்டு விடாமல் மெதுவாக முக்காலியின் மேல் ஏறி நின்று உள்ளே பார்த்தாள். அவளுடைய கண்கள் அகன்று விரிந்து செவிகள் வரை நீண்டன. வியப்பின் எல்லையா அது! அறைக்குள் பிரும்மாண்டமான நிலைக்கண்ணாடிக்கு முன்னால் இடையில் வாளும் தலையில் அழகாகத் தலைப்பாகையும் தரித்துப் பெண்மைச் சாயல் கொண்ட முகமுள்ள ஓர் இளைஞன் நின்று அழகு பார்த்துக் கொண்டிருந்தான். விலாசினி வியப்பு, திகைப்பு, பயம், சந்தேகம் எல்லா உணர்ச்சிகளையும் ஒருங்கே அடைந்தாள். மேலும் உற்றுப் பார்த்தாள். உண்மை தெரிந்தபோது அவளுக்குச் சிரிப்பு வந்தது. முகமும் மலர்ந்தது.

இளைஞனாவது, கிழவனாவது, பகவதிதான் ஆண் வேடத்தில் கண்ணாடிக்கு முன் நின்று அழகு பார்த்துக் கொண்டிருந்தாள். உற்றுப் பார்த்து அதை நிதானிக்கச் சில விநாடிகள் பிடித்தன அவளுக்கு. உள்ளே பகவதி இருந்த நிலையைப் பார்த்தபோது அவள் அந்த வேடத்தோடு எங்கோ கிளம்பத் தயாராகிக் கொண்டிருப்பது போல் தோன்றியது.

விலாசினி சட்டென்று முக்காலியிருந்து இறங்கி அங்கே அதிக இருட்டாயிருந்த ஒரு மூலையில் பதுங்கி நின்று கவனிக்கலானாள். பகவதி கதவைத் திறந்துகொண்டு வெளியே வந்தாள். அறைவாசலில் கிடந்த இரண்டு மூன்று மாவடுக்களில் ஒன்றை எடுத்துத் தோட்டத்துப் பக்கமாக எரிந்தாள். அங்கே சலசலப்பு உண்டாயிற்று. மறுகணம் ஆபத்துதவிகள் தலைவனின் தலை மாமரத்துப் புதரிலிருந்து எட்டிப்பார்த்தது. பகவதி ஏதோ சைகை செய்துவிட்டுக் கீழே இறங்கிப் போனாள். குழைக்காதனும் ஆண் உடையிலிருந்த பகவதியும் மதிலோரமாகப் பதுங்கிப் பதுங்கி எங்கோ செல்வதை மறைந்து நின்ற விலாசினி கவனித்தாள். பின்பு திரும்பிப் போய்ப் படுத்துக்கொண்டாள். விடிந்ததும் அவள் தந்தை ஊருக்குப் புறப்பட்டபோது, பிடிவாதமாக அவளும் ஊருக்குக் கிளம்பினது கண்டு அவள் தந்தை ஆச்சரியம் அடைந்தார்.