பாண்டிமாதேவி/முதல் பாகம்/கனவு கலைந்தது

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

34. கனவு கலைந்தது

அன்றைக்குப் பொழுது புலர்ந்தபோது இடையாற்று மங்கலம், இடையாற்று மங்கலமாக இல்லை. அந்தத் தீவில் சோகமும், ஏமாற்றமும், ஏக்கமும் ஒன்று சேர்ந்து நிரம்பிவிட்டதுபோல் ஒருவகை அமைதி பரவியிருந்தது. மகாமண்டலேசுவரரின் மாளிகை, சாவு நடந்துவிட்ட வீடு போல் களையில்லாமல் காட்சியளித்தது. வைகறையில் அங்கு ஒலிக்கும் வழக்கமான இன்னிசைக்கருவிகளின் மங்கல ஒலி கேட்கவில்லை. மாளிகையிலுள்ள சிவன் கோவிலில் அடிகள்மார் ஊனும், உயிரும் உருகும் வண்ணம் பாடும் திருப்பள்ளி எழுச்சிப் பாடல்களின் பூபாளப் பண்ணொலி கேட்கவில்லை. மாளிகையைச் சுற்றியிருந்த நந்தவனங்களில் பூத்திருந்த பூக்கள் யாரும் கொய்வாரின்றிக் கிடந்தன.

பெண்களின் கைவளை ஒலி, பாதங்களின் சிலம்பொலி, கதவுகளைத் திறந்து மூடும் மணி ஓசை, முரசுகளின் முழக்கம் சங்குகளின் ஒலி, கன்னி மாடத்துக் குமரி நங்கையரின் குது கலமான கலகலப்பு-எதுவும், எங்கும் இன்று அளவிடமுடியாத துன்பத்துள் அடங்கி ஒடுங்கி முழுகி விட்டது போலிருந்தது தீவு முழுவதும். கன்னிமாடத்து வாசற்படியில் கன்னத்தில் கையூன்றித் துயரமே உருவாக வீற்றிருந்தாள் குழல்மொழி. துரங்கி விழித்த சோர்வு கூட இன்னும் மாறவில்லை அவள் முகத்தில். தூக்கத்தில் கலைந்திருந்த சுரிகுழல் காதோரங்களிலும், முன்நெற்றியிலும் சுருண்டு வளையமிட்டிருந்தது. உறங்கி விழித்த இளஞ்சிவப்புப் படிந்து கண்களின் செருகினாற் போன்ற ஒடுங்கிய பார்வையில் அலுப்பும் ஓர் அழகு மயக்கத்தை உண்டாக்கியது. பகலின் ஒளி மருவி உறவாடிய அந்தித் தாமரை போல் சோகம் மருவித் துவண்ட அந்த முகத்தில் இனம் புரியாத ஏக்கம் தெரிந்தது; அதைவிட அதிகமாக ஏமாற்றம் தெரிந்தது.

புறத்தாய நாட்டு அரண்மனையில் கூற்றத் தலைவர் கூட்டத்துக்காகப் போயிருந்த தன் தந்தைக்கு அம்பலவன் வேளான் மூலமாக நடந்த செய்தியைச் சொல்லி அனுப்பிவிட்டு மேலே என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து வீற்றிருந்தாள் அவள். இதயம் எண்ணங்களின் சுமைகளால் கனத்தது. இன்ப துன்ப உணர்ச்சிகளெல்லாம் பாழாய்ப் போன மனித இதயத்துக்குத்தான் உண்டு போலிருக்கிறது. அவள் கண்பார்வைக்கு முன்னால் நேற்றைக்கு இருந்தது போலவே இன்றும் பறளியாறு கவலையின்றி ஓடிக் கொண்டிருந்தது. கரையோரத்துக் கொன்றை கொத்துக் கொத்தாகப் பொன் பூத்திருந்தது. மரக்கிளையில் பறவைகள் மகிழ்ச்சிக் குரல் எழுப்பிக் கொண்டிருந்தன. “நேற்றிரவு கொள்ளை போனதைப் பற்றி இவை சிறிதாவது பொருட்படுத்தினவா? சிறிதாவது கவலைப்பட்டனவா?”-குழல்மொழி நெடு மூச்சு விட்டாள். “உணரத் தெரிந்த உள்ளத்துக்குத்தான் துன்பமெல்லாம்!” தனக்குள் அவள் முனு முணுத்துக் கொண்டாள்.

அவள் இருந்த நிலையைப் பார்த்தபோது அருகில் நெருங்கவோ, ஆறுதல் கூறவோ, துணிவின்றி அஞ்சினார்கள் உடனிருந்த பணிப்பெண்கள்.

சுந்தர முடியும், வீரவாளும், பொற்சிம்மாசனமும் கொள்ளைபோன துயரத்துக்குமேல் தன்னுடைய உள்ளம் கொள்ளைபோன துயரம் பெரிதாக இருந்தது அவளுக்கு. துறவுக்கோலத்தில் மறைந்து நின்ற அந்த இளமையின் சிரிக்கும் முகத்தை, திரண்ட தோள்களை, பரந்த மார்பை, உருவெளியில் ஒன்றாக்கி நிறுத்திக் கண்களை மூடிக்கொண்டு பார்க்க முயன்றாள் குழல்மொழி. கண்முன் இருப்பவரை விழித்துக் கொண்டால்தான் பார்க்க முடியும்! கண் முன் இல்லாதவரையோ கண்கள் மூடிக்கொண்டால்தானே பார்க்க முடிகிறது? புறக்கண்ணால் எதிரில் இருப்பவரைப் பார்க்கும்போது அகக்கண் மூடுகிறது. அகக்கண்ணால் எங்கோ இருப்பவரை நினைவில் கொணர்ந்து பார்க்க முயலும் போது புறக்கண்கள் தாமே மூடிக்கொள்கின்றன. தியானம் செய்யும்போது தன் தந்தை கண்களை மூடிக்கொள்ளும் காட்சி குழல்மொழிக்கு நினைவு வந்தது. துறவியாக வந்தவர் யார் என்று தன் உள்ளத்துக்குப் புதிதாகத் தெரிந்த உண்மையோடு அவர் அழகையும் இணைத்து எண்ணிப்பார்த்தபோது அவளுக்கும் ஏக்கம் ஏக்கமாக வந்தது. சொந்தக்காரன் தனக்குச் சொந்தமான பொருள்களை எடுத்துக்கொண்டு போனதைக் கொள்ளை என்று ஒப்புக் கொள்ள அவள் மனம் தயாராயில்லை. சொந்தமில்லாத அவள் உள்ளத்தையும் புதிதாகச் சொந்தமாக்கிக்கொண்டு போனதைக் கொள்ளை என்று சொல்லாமல் வேறு என்ன சொல்லுவது? எப்படிக் குறிப்பிடுவது? தன் தந்தை கூற்றத் தலைவர் கூட்டத்துக்காக அரண்மனைக்குப் புறப்பட்டுப் போனபின் துறவிக்கும், தனக்கும் இடையே நடந்த பேச்சுக்களை-நிகழ்ச்சிகளைக் கூடிய வரை அவரிடம் கூறாமல் மறைத்து விடுவதென்று தீர்மானித்துக் கொண்டிருந்தாள் அவள். துறவிக்கு மாளிகையைச் சுற்றிக் காட்டியது. அப்படிச் சுற்றிக் காட்டும்போது அவரைப் பற்றித் தான் அறிந்த ஒரு பெரிய உண்மை, அதன்பின் அரசுரிமைப் பொருள்கள் வைத்திருந்த அறைக்கு அவரை அழைத்துச் சென்றது ஆகிய நிகழ்ச்சிகளையெல்லாம் தன் தந்தையிடம் கூறினால் அவர் தன்னையே கோபித்துக் கொள்வாரோ என்ற அச்சம் உள்ளுற அவளுக்கு இருக்கத்தான் செய்தது.

“துறவி இன்னாரென்ற உண்மை தனக்கும் முன்பே தன் தந்தைக்குத் தெரியாமல் இருந்திருக்காது. அன்று விழிஞத்திலிருந்து அழைத்து வரும்போதே அவருக்கு அது தெரிந்துதான் இருக்கும். வேண்டுமென்றே என்னிடம் அவர் அதை மறைத்திருக்கலாம்!”—நினைக்க நினைக்க என்னென்னவோ செய்தது, மனம் குழம்பியது குழல்மொழிக்கு.

ஒரே இடத்தில் உட்கார்ந்துகொண்டு, சிந்தனையைக் குழப்பிக்கொண்டிருந்த அவளுக்குப் பைத்தியம் பிடித்து விடும் போலிருந்தது. கவலைகளும், மனக் குழப்பமும், அதிகமாக உள்ள சமயங்களில் பசுமையான சோலைகள், மலர்க்கூட்டங்கள், நீர்ப்பிரவாகங்கள் இவற்றைப் பார்த்தால் சிறிது நிம்மதி உண்டாகும். சிறு பருவத்திலிருந்தே அப்படி ஒரு பழக்கம் அவளுக்கு தந்தை எதற்காவது அவளைக் கண்டித்தால், தோழிகளோடு எந்தக் காரணத்திலாவது பிணக்கு ஏற்பட்டால், நந்தவனத்துக்கோ, பறளியாற்றங் கரைக்கோ போய்த் தனியாக உட்கார்ந்துவிடுவாள் அவள். கண்ணுக்கெட்டிய தூரம் பசுமையை, நீர்ப்பரப்பை அல்லது மலைத்தொடரைப் பார்த்துக்கொண்டு இருந்தால் அவை மனத்தைப் புதுமையாக்கி அனுப்பிவிடுகின்றன. பித்துப் பிடித்தாற்போல் கன்னிமாடத்து வாசலில் அமர்ந்திருந்த குழல்மொழி எழுந்திருந்து வெளியே நடந்தாள். மாளிகையைச் சுற்றியிருந்த தோட்டங்களில், மலர் வனங்களில், மண்டபங்களில், ஆற்றங்கரையில், இன்னும் எங்கெங்கோ தன் மன நிம்மதியைத் தேடி உலாவினாள் அவள். அகத்தின் நிம்மதி புறத்தில் கிடைப்பதற்குப் பதிலாக ஒவ்வோர் இடமும் ஒவ்வொரு நினைவை உண்டாக்கிக் கொண்டிருந்தது.

வசந்த மண்டபம் கண்களில் தென்பட்டபோது அவர் அங்கே தங்கியிருந்தது நினைவுக்கு வந்தது. நீராழி மண்டபத்தினருகே அவள் சென்றபோது அவர் அங்கே நீராடியதை நினைத்தாள். நந்தவனத்தில் நுழைந்து மலர்களைப் பார்த்த போது அவருடைய வழிபாட்டுக்காக மலர் கொய்ததை நினைத்துக் கொண்டாள். வசந்த மண்டபத்து மலர்ச்சோலை வழிகளில் அவரோடு விளையாட்டுத்தனமாகப் பேசிக் கொண்ட பேச்சுக்களையெல்லாம் எண்ணினாள்.

நண்பகலின் உச்சி வெயில் மேலேறிக் காயும் வரையில் அப்படியே தன் நினைவின்றித் திரிந்து கொண்டிருந்தாள் அந்தப் பேதைப் பெண். இனிமையான, நல்ல கனவு ஒன்றைக் கண்டுகொண்டிருந்தபோது யாரோ முரட்டுத்தனமாக அடித்துத் தட்டி எழுப்பிக் கலைத்துவிட்டது போன்றிருந்தது அவளுடைய நிலை.

அதற்குமேல் பணிப்பெண்கள் வந்து வற்புறுத்தி அழைத்துச் சென்று நீராடச் செய்தனர். உணவு கொள்ளச் செய்தனர். தன் விருப்பமின்றி அவர்களுடைய வற்புறுத்தலுக்காக அவள் நீராடினாள் உண்டாள். வீரர்களும் மெய் காவற் பணிபுரிவோரும் அரசுரிமைப் பொருள்கள் களவு போய்விட்டனவே என்று கலங்கிப்போய்ச் செய்வதறியாது திகைத்திருந்தனர். அவளோ உள்ளம் களவு போய்விட்டதே என்று உன்மத்தம் பிடித்தவள் போலிருந்தாள்.

நீண்ட பகல் நேரம் எப்படியோ சிறிது சிறிதாகக் கழிந்தது. பால் வாய்ப் பிறைப்பிள்ளையை இடுப்பில் எடுத்துக்கொண்டு பகல் என்னும் கணவனைப் பறிகொடுத்த மேற்றிசைப் பெண் புலம்பும் மாலை நேரம் வந்தது. இருள் ஒளியைச் சிறிது சிறிதாக விழுங்கத் தொடங்கியிருந்தது. முதல் நாளிரவு நடந்துவிட்ட கொள்ளையால் அரண்டு போயிருந்த காவல் வீரர்கள் அன்றும் பயந்துபோய் ஏராளமான காவல் ஏற்பாடுகளைச் செய்திருந்தார்கள். மாளிகையின் எல்லாப் பகுதிகளிலும் வசந்த மண்டபம் உட்படச் சிறிதும் இருளின்றித் தீபங்களை எரிய விட்டிருந்தார்கள். பொழுது விடிகிறவரை அவற்றை எவரும் அணைக்கக்கூடாதென்று முன் எச்சரிக்கை செய்யப் பட்டிருந்தது.

மாளிகையின் நான்குபுறமும் பறளியாற்றங்கரையை ஒட்டினாற்போல் சுற்றிலும் ஆயுதபாணிகளாக வீரர்கள் நிறுத்தி வைக்கப்பட்டார்கள். வழக்கமான மாளிகைப் படகைத் தவிர புதிய படகுகளோ, ஆட்களோ அனுமதிக்கப்படக் கூடாதென்று கடுமையாக உத்தரவிடப்பட்டிருந்தது.

களவு போனபின் மறுநாள் செய்யப்படும் அந்தப் பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பார்த்தபோது குழல்மொழிக்குச் சிரிப்புத்தான் வந்தது. காவலுக்கு ஆட்கள் நிறுத்தி வைக்கப்படாத இடங்கள் பறளியாற்று நீர்ப்பரப்பும், கரைமேலிருந்த உயரமான மரங்களின் உச்சிகளும்தான். கரையோரமாக இரண்டு மூன்று பாக தூரத்துக்கு ஒருவராக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காவல் வீரர்கள் வெளிச்சத்துக்காகப் பிடித்துக் கொண்டிருந்த தீப்பந்தங்கள் தீவைச் சுற்றிக் கரை நெடுகக் கார்த்திகைச் சோதி எடுத்ததுபோல் துரப் பார்வைக்குத் தோன்றியது. வீரர்கள் ஒருவருக்கொருவர் எச்சரிக்கை செய்து கொள்ளுகிற பாராக் குரலோசை இரவின் அமைதியில் அலை அலையாகப் பரவி எதிரொலித்தது.

உறக்கம் வராத குழல்மொழி கன்னிமாடத்து முகப்பில் அமர்ந்து இவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தாள். காலை அரும்பி பகலெல்லாம் நினைவாகி மாலை மலர்ந்தன. நோய் அவள் துயிலைக் கெடுத்து உட்காரச் செய்திருந்தது. உட்கார்ந்திருந்ததும் வீண் போகவில்லை. சற்று நேரத்துக் கெல்லாம் ஒரு பணிப் பெண் ஓடிவந்து நாராயணன் சேந்தனும், அம்பலவன் வேளானும் தங்களைப் பார்ப்பதற்காக அரண்மனையிலிருந்து வந்திருக்கிறார்கள்” என்று கூறினாள்.

“எப்போது வந்தார்கள்?” என்று வியப்புடன் அந்தப் பெண்ணைக் கேட்டாள் குழல்மொழி.

‘இப்போதுதான் படகிலிருந்து இறங்கி வந்து கொண்டிருக்கிறார்கள். தங்களை அவசரமாகச் சந்திக்க வேண்டுமாம்.”

“இப்போது எங்கே இருக்கிறார்கள்?”

“மாளிகையின் கீழ்ப்பகுதியின் மெய்க்காவல் வீரர்களிடம் ஏதோ பேசிக் கொண்டு நிற்கிறார்கள்.”

“அங்கேயே இருக்கச் சொல்! இதோ நானே வருகிறேன்.”

பணிப்பெண் இதைப் போய்ச் சொல்வதற்குக் கீழே இறங்கிச் சென்றாள். சில விநாடிகளில் குழல்மொழியும் கீழே இறங்கிச் சென்றாள்.

பாதி இறங்கிச் சென்று கொண்டிருக்கும்போதே நாராயணன் சேந்தன் யாரிடமோ இரைந்து பேசிக் கொண்டிருப்பது அரைகுறையாக அவள் காதில் விழுந்தது.

‘யாரைச் சொல்லி என்ன ஐயா குற்றம் ? மகாமண்டலேசுவரரின் புதல்விக்கு அவர் அதிகமாகச் செல்லம் கொடுத்து விட்டதால் வந்த வினைதான் இவ்வளவும்”சேந்தனுடைய இந்த சொற்களைக் கேட்டு நடந்து கொண்டிருந்தவள் அப்படியே திகைத்துப்போய் நின்றாள்.